/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள்! (14)
/
சித்ராலயா கோபுவின் மலரும் நினைவுகள்! (14)
PUBLISHED ON : ஆக 09, 2020

காசேதான் கடவுளடா படத்திற்கு பிறகு, சின்ன சின்ன படங்கள் நிறைய பண்ணினேன்.
'எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைச்சுருக்கு... நீங்க தான் கதை தரணும்...' என்று பலரும் வந்தனர்.
அவர்களுக்கு கதை கொடுத்தேன்.
'என்கிட்ட நல்ல கதையிருக்கு... இதை திரைக்கதைக்கு ஏற்ப மாற்றி, நீங்க தான் இயக்கணும்...' என்பர்.
'சரி...' என்று இயக்கி கொடுப்பேன்.
இப்படி குடிசைத் தொழில் அடிப்படையில், நான் சினிமாவில் பயணித்து கொண்டிருந்தேன்.
இந்த காலகட்டத்தில், பெரிதும் உதவியாக இருந்தார், நடிகர் ஜெய்சங்கர். பலரை, அவர் தான் சினிமா தயாரிப்பாளர் ஆக்கினார். அவரை, வெள்ளிக்கிழமை நடிகர் என்றே சொல்வர். காரணம், வெள்ளிக்கிழமை தோறும், அவர் படம் வரிசையாக வந்து கொண்டிருக்கும்.
இப்படி நான் இருப்பதை அறிந்த, ஸ்ரீதர், 'அங்கேயும் இங்கேயும் அலைய வேண்டாம்... என் கூடவே இருந்துடு...' என்று சொன்னார்.
'நண்பா... நீ சொன்னா சரி...' என்று சொல்லி, அவருடன் இருந்து, கமலின், நானும் ஒரு தொழிலாளி. ரஜினியின், துடிக்கும் கரங்கள் உள்ளிட்ட படங்களுக்கு பணியாற்றினேன்.
நானும் ஒரு தொழிலாளி படம், ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் கமல், அவரது ஜோடி, அம்பிகாவை தவிர, வேறு யாரையும் யாருக்கும் தெரியாது.
எந்த மொழிக்கு, எந்த, 'ஆர்டிஸ்ட்'டை கூப்பிடுவது என்று ஒரே குழப்பமாக இருந்ததால், படம் மெதுவாக வளர்ந்தது. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், 'ஒவ்வொரு மொழியாக முடித்து வருவோம்...' என்று முடிவு செய்து, அந்த படத்தை தொடர்ந்தோம்.
பொறுமையாக இருந்து நடித்துக் கொடுத்தார், கமல்.
ரஜினியை வைத்து, துடிக்கும் கரங்கள் படம் எடுக்கும்போது, அவருடைய பிறந்த நாள் வந்தது. மிக பிரமாண்டமாக கொண்டாடினோம். ஆனால், எந்த கொண்டாட்டத்தையும், பிரமாண்டத்தையும் தீண்டாத, எளிய மனிதராகவே இருந்தார், ரஜினி.
படப்பிடிப்பு தளத்தின் ஒரு ஓரத்தில், கையை தலைக்கு வைத்து துாங்கிக் கொண்டிருப்பார். தன்னுடைய காட்சி வந்ததும், நடித்துக் கொடுத்து சென்று விடுவார்.
இந்த பாணியில், தென்றலே என்னைத் தொடு மற்றும் நினைவெல்லாம் நித்யா போன்ற படங்களும் வந்தது. ஸ்ரீதர், என்றைக்கும் ஸ்ரீதர் தான் என்ற பெயரை பெற்றுத் தந்தது.
இந்த சூழ்நிலையில் தான், என் மூத்த பையனுக்கு திருமணம். எனக்கு வயதாகி விட்டது என்பதை உணர்ந்த தருணம் அது. நான்கு பிள்ளைகள். அத்தனையும் மணிமணியானவர்கள். என்னையோ, என் சிபாரிசையோ எதிர்பார்க்காமல் சுயமாக முளைத்து வளர்ந்தவர்கள்.
மனைவி கமலா தான் தாயுமாகவும், தந்தையுமாகவும் இருந்து, அவர்களை ஆளாக்கி இருந்தார். திருமண பத்திரிகை கொடுக்கிற வேலை தான், எனக்கு.
வயதான உறவினர் ஒருவரை சந்தித்து, 'நான், செல்லம்மா பிள்ளை...' என்று அறிமுகம் செய்து, பத்திரிகை கொடுத்தேன்.
'அவசியம் வந்துர்றேன்... ஆமா, நீ என்ன செய்யற...' என்றார்.
'ஸ்கிரிப்ட் ரைட்டர்...' என்றேன்.
'என்ன ரைட்டர்?' என்றார்.
'அதாவது, சினிமாவிற்கு வசனம் எழுதறது; கலாட்டா கல்யாணம் படம் தெரியுமா?' என்றேன்.
அவர் எல்லாத்தையும் விட்டுவிட்டு, 'கல்யாணத்தில் கலாட்டா' என்பதை மட்டும் பிடித்துக் கொண்டு, 'எந்த கல்யாணத்துலடா கலாட்டா...' என்று, கவலையுடன் விசாரிக்க ஆரம்பித்தார்.
'அய்யோ... அது, சிவாஜி நடித்த சினிமா...' என்று, பல்லைக்கடித்து சொன்ன போது, 'எந்த சிவாஜிடா அம்பி... கொஞ்சம் பொறுமையா தான் சொல்லேன்...' என்றார்.
நானோ பொறுமை இழந்து, 'நல்ல இடத்துல உத்தியோகம் பார்க்கிறேன். பிள்ளைக்கு திருமணம் வச்சுருக்கேன். முடிஞ்சா வந்து, ஆசீர்வாதம் பண்ணுங்கோ...' என்று சொல்லி, ஓடி வந்தேன்.
சிவாஜியை தெரியாத இன்னொரு பிரபலமும் இருந்தார். அவர், நடிகர் சோவின் அப்பாவான, ஆத்துார் சீனிவாசய்யர்.
ஒருமுறை சோ, 'அப்பா... நான் சிவாஜி கூட நடிக்கிறேன்...' என்று சொன்னதும், 'யார் அந்த சிவாஜி...' என்று கேட்டு இருக்கிறார்.
'இப்ப என்கிட்ட சொன்ன மாதிரி, வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வரும்போது, சொல்லி வைக்காதீரும்... அவர் பெரிய நடிகர்...' என்று, சொல்லி வைத்திருந்தார், சோ.
ஒருநாள், வீடு நிறைய விருந்தினர்கள் இருந்தனர்.
'என் மகன், சோ... இப்போ சினிமாவில் நடிக்கிறான் தெரியுமா... அப்புறம் ஒரு விஷயம், இவன் கூடத்தான், சிவாஜியும் நடிக்கிறார்...' என்று கூறியுள்ளார்.
'அப்ப கொட்டிய முடி தான், இப்ப வரை வளரவில்லை...' என்று, இந்த சம்பவத்தை, சோவிற்கு பத்திரிகை வைக்கப் போன போது, வேடிக்கையாக சொல்லி சிரித்தார், அவருடைய அப்பா.
இப்படி நான் திருமண பத்திரிகை கொடுக்க சென்ற இடங்களில் நகைச்சுவையான சம்பவங்கள் நடந்தாலும், ஒரு இடத்தில், இந்த பத்திரிகை தான், எனக்கு மீண்டும் ஒரு சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது.
ஓடும் என்பார், ஓடாது; ஓடாது என்பார், ஓடி விடும்!
சினிமா ஒரு மாயை, எந்த படம் ஜெயிக்கும் எந்த படம் தோற்கும் என்று, யாராலும் கணிக்க முடியாது.
கல்யாண பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம் போல பழைய பாணியில் ஒரு படம் எடுப்போம் என்று முடிவு செய்து, ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல், ராஜேஷ், சுஜாதாவை வைத்து, எடுத்த படம், ஆலயதீபம்; பிரமாதமாக ஓடியது.
அதே சூட்டோடு, தெலுங்கில் இன்னும் சுவராஸ்யத்தை கூட்டி மெருகேற்றினோம். என்ன பிரயோசனம், சீந்துவார் இல்லை.
இதே போல, தைரிய லட்சுமி என்ற படத்தை, தமிழிலும், கன்னடத்திலும் ஒரே நேரத்தில் எடுத்து வெளியிட்டோம்.
கன்னடத்தில், வெற்றி; தமிழில், தோல்வி.
— தொடரும்
எல் முருகராஜ்