
உஷார் பெண்களே!
என் தோழியின் மகள், அழகாகவும், களையாகவும் இருப்பாள். பள்ளியில் படிக்கும் போதே, பேச்சு போட்டிகளில் பங்கேற்று, பரிசுகளை அள்ளி வருவாள்.
கல்லுாரியில் பயிலும்போது, அவளை ஊக்கப்படுத்தி, உறுதுணையாக இருந்து, மேலும் முன்னேற வாய்ப்புகளை பெற்றுத் தந்து, ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொண்டார், பேராசிரியர். வெளியூர் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அவருடன் போய் வருவாள்.
மேடை, மாலை மரியாதை, கைத்தட்டல், புகழ், போதை என, அவளுக்கு பழக்கப் படுத்திய பேராசிரியர், சமயம் பார்த்து, காதல் வலை வீச, அதில் சிக்கிக் கொண்டாள்; பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, வீட்டை விட்டு வெளியேறி, பேராசிரியரை மணந்து கொண்டாள்.
எல்லாம், சில ஆண்டுகள் தான்.
அந்த பேராசிரியர், பணி மாறுதல் பெற்றுச் செல்லும் இடங்களில் எல்லாம், மாணவியரை ஊக்குவிப்பதாக நடித்து, காதல் வலை வீசி, அவர்களை திருமணம் செய்து, தனித்தனியாக குடித்தனம் நடத்தி வந்திருக்கிறார்.
இது தெரிந்தவுடன், கணவன் என்றும் பாராமல், காவல் நிலையத்தில் புகார் தந்து, கம்பி எண்ண வைத்ததோடு, விவாகரத்தும் பெற்றுக் கொண்டாள். பெற்றோரிடம், நிலைமையை விளக்கி, மன்னிப்பு பெற்று, மறுமணத்திற்கு தயாராகி விட்டாள்.
அவசர முடிவு எடுக்கும் இக்கால பெண்களுக்கு, தோழியின் மகளே, ஒரு பாடம். 'ஆதரவாக பேசினாலே, வீழ்ந்து விடும், 'வீக்னஸ்' உடையவர்கள் பெண்கள்' என்ற எண்ணம் கொண்ட, வில்லங்க ஆண்களிடம் விலகியிருந்து, உஷாராக தப்பித்துக் கொள்ளுங்கள் பெண்களே!
- கே. லட்சுமி, முண்டியம்பாக்கம்.
முதியோர் குடும்பத்திற்கே முன்னுரிமை!
சென்னையில், நண்பர் ஒருவருக்கு, வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக, வீட்டு உரிமையாளரை சந்தித்தோம்.
எடுத்த எடுப்பிலேயே, 'உங்கள் குடும்பத்தில், முதியோர் யாரேனும் இருக்கின்றனரா...' என்று விசாரித்தார், வீட்டு உரிமையாளர்.
சில வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு விடும் வீட்டிற்கு வரும் குடும்பத்தில், முதியோர் அல்லது நோயாளிகள் இருப்பதை விரும்புவதில்லை. ஏனெனில், எதிர்பாராத விதமாக, அவர்கள், தங்களின் வாடகை வீட்டில் இறந்து போவதை, அபசகுனமாக நினைக்கின்றனர்.
ஒருவேளை, இவரும் அதேபோன்ற எண்ணமுடையவராக இருப்பாரோ என்று, நாங்கள் நினைக்கையில், 'நான் கேட்டதை வைத்து என்னை தப்பாக நினைக்காதீர்கள். வெளிநாட்டினரிடமிருந்து, நாம் இறக்குமதி செய்த சில வேண்டாத விஷயங்களுள், முதியோர் இல்லமும் ஒன்று.
'வீட்டு உரிமையாளர்கள் சிலர், முதியோர் இருக்கும் குடும்பங்களுக்கு, வீடு வாடகைக்கு தர மறுப்பதால், முதியோர் இல்லங்கள் பெருகவும், அதில், அவர்கள் சேர்க்கப்படுவதும் காரணமாகிறது. அதை தவிர்க்கவே, வாடகைக்கு விடும்போது, முதியோர் இருக்கும் குடும்பங்களுக்கு முன்னுரிமை தருகிறேன்...' என்றார்.
நானும், நண்பரும், அவரை மனதார பாராட்டினோம்.
ரா. சாந்தகுமார், சென்னை.
அசைவ பிரியர்களே, எச்சரிக்கை!
சமீபத்தில், அசைவ உணவகத்தில் வேலை செய்யும் நண்பரை சந்தித்தேன். அவர் கூறிய விஷயங்களை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பெரும்பாலும், அசைவ உணவுகள் ஒரே நாளில் விற்பனை ஆகாதாம். விற்பனை ஆகாத உணவு வகைகளை குளிர் சாதன பெட்டியில் வைத்து, எத்தனை நாள் ஆனாலும் விற்று விடுவராம்.
சில சமயத்தில், அதில் புழுக்கள் உண்டாகி விடுமாம். அதை வெந்நீரில் போட்டு, புழுக்களை அப்புறப்படுத்தி, மேலே மசாலா பொடிகளை துாவி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை அலங்காரம் செய்து, கம கமவென பரிமாறுவராம்.
சாம்பார், சட்னி மீந்து போனாலும் இதே கதை தான். மேலும், மட்டன் - சிக்கன் குழம்பு திக்காக இருக்க, முத்தின தேங்காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, எஞ்சிய புண்ணாக்குகளை சேர்த்து விடுவராம்.
இதனால், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, அசைவ பிரியர்கள், வீட்டில் சமைத்து சாப்பிடுவதே நல்லது.
கே. சசிகுமார், நாகப்பட்டினம்.