PUBLISHED ON : டிச 25, 2016

உலகின் பல்வேறு நாடுகளில், கிறிஸ்துமஸ் எப்படி எல்லாம் கொண்டாடப் படுகிறது என்று பார்ப்போமா!
ஐரோப்பாவில் உள்ள, செக் குடியரசில், கிறிஸ்துமஸ் தினத்தன்று, திருமணமாகாத பெண்கள், வீட்டுக்கு வெளியே வந்து, வாயிலுக்கு முதுகை காட்டியவாறு சிறிது தூரத்தில் நின்று கொள்வர். பின், தங்களது ஒரு ஷூவை கையில் எடுத்து, பின்புறமாக வீட்டின் கதவை நோக்கி வீசுவர். பின், அந்த ஷூ எப்படி விழுந்திருக்கிறது என்று பார்ப்பர்.
ஷூவின் முன்புறம், கதவை நோக்கியபடி விழுந்திருந்தால், அவளுக்கு விரைவில் திருமணம் ஆகும். வெளிப்புறத்தை பார்த்தபடி ஷூவின் முனை விழுந்திருந்தால், திருமணம் நடக்க கால தாமதம் ஆகும் என்பது அவர்களின் நம்பிக்கை!
இரண்டு விதமாகவும் இல்லாமல், வேறு விதமாக விழுந்திருந்தால், என்ன செய்வர் என்று தெரியவில்லை. ஒருவேளை, மற்றொரு முறை அதை வீசக்கூடும்!
நார்வே நாட்டில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், துடைப்பம் மற்றும் பாத்ரூம் கழுவும் பிரஷ் போன்ற அனைத்தையும் மறைத்து வைத்து விடுவர். காரணம், அன்று, சூனியக்காரக் கிழவிகள் வந்து, இவற்றில் ஏறி பயணம் செய்வராம். அதனால், இவற்றை எல்லாம் ஒளித்து வைத்து விடுவர். இந்நாளில், ஆண்கள் வெளியில் சென்று, வெட்ட வெளியை நோக்கி சிலமுறை துப்பாக்கியால் சுடுவர்.
தென் அமெரிக்காவில், கிறிஸ்துமஸ் அன்று, பெரிய அளவுள்ள கம்பளிப்பூச்சிகளையும், நத்தைகளையும் எண்ணெயில் பொரித்து, சிறப்பு விருந்து படைப்பர்.
உக்ரைன் நாட்டில், கிறிஸ்துமஸ் மரத்தை, செயற்கை சிலந்தி கூடுகளின் மூலம் அலங்கரிக்கின்றனர். காரணம், முன்னொரு காலத்தில், மனைவியை இழந்த ஏழை மனிதன் ஒருவனுக்கு, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்க, பணம் இல்லையாம். இதைப்பார்த்த அன்பான சில சிலந்திகள், அன்றிரவு, அவ்வீட்டின் கிறிஸ்துமஸ் மரத்தை வெள்ளியாலும், தங்கத்தாலும் அலங்கரித்தனவாம். அதன்பின், அவனுக்கு அதிர்ஷ்டம் கொட்ட, பணக்காரனாக ஆகிவிட்டனாம். அதனால், இன்றும் இந்நாட்டினர், தங்களது கிறிஸ்துமஸ் மரத்தை, செயற்கை சிலந்தி கூடுகளின் மூலம் அலங்கரிக்கின்றனர்.
வெனிசுலாவின் தலைநகர் கரகாஸ் நகரில், கிறிஸ்துமஸ் அன்று, எந்த வாகனத்தையும் ஓட்டக் கூடாது. எங்கு செல்வது என்றாலும் நடந்தே செல்ல வேண்டும்.
சீனாவில் 1 சதவீதம் பேர் மட்டுமே கிறிஸ்துவர்கள். அதனால், பெரு நகரங்களில் மட்டுமே, ஆங்காங்கே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அன்று, பிளாஸ்டிக்கால் ஆன கிறிஸ்துமஸ் மரங்களையே பயன்படுத்துகின்றனர்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளுக்கு கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களை சீனா ஏற்றுமதி செய்வதால், கிறிஸ்துமசுக்கு இரு மாதங்களுக்கு முன்னரே பிசியாகி விடுகிறது, சீனா.
மால்டாவில், கிறிஸ்துமஸ் அன்று, தொட்டில்களில், குழந்தை இயேசு இருப்பதாக நம்புவதால், தொட்டிலை மிக அழகாக அலங்கரிப்பர். இங்குள்ள தூய பீட்டர் மடாலயத்தில், 1670ம் ஆண்டை சேர்ந்த ஒரு தொட்டில் இருக்கிறது; இது, மக்களால் வணங்கப்படுகிறது.
மெக்சிகோவில் டிச., 12லிருந்து ஜன.,6 வரை கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. கழுதையில் அமர்ந்தபடி இருக்கும் மேரி மாதா உருவங்கள், அதிகளவில் அப்போது விற்கப்படும். சிறுவர், சிறுமியர் ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் போய், பாடல் பாடுவர். 'உங்கள் வீட்டில், எங்களுக்கு தங்க அறை வேண்டும்...' என்று, ஜோசப்பும், மேரியும் கேட்பது போல், அப்பாடல் இருக்கும். வீட்டில் உள்ளோர் முதலில் மறுப்பர்; பின், முகம் மலர, உள்ளே அழைத்து, கேக் போன்ற தின்பண்டங்கள் கொடுப்பர்.
ஜி.எஸ்.எஸ்.,
