PUBLISHED ON : டிச 25, 2016

ஸ்ரீராமரை நேருக்கு நேராக தரிசித்தவர், போதனா என்பவர். இவர், தெலுங்கில், ஸ்ரீமத் பாகவதத்தை எழுதியபடி இருந்தார். திடீரென, ஒரு இடத்தில் கற்பனை தடைபட, அப்படியே தூங்கி விட்டார். அப்போது, அங்கு வந்த ஸ்ரீராமர், தடைபட்ட பகுதியை தன் திருக்கரங்களாலேயே பூர்த்தி செய்தார். தூங்கி எழுந்த போதனா, உண்மையை உணர்ந்து, 'இந்த எளியோனுக்காக வந்து எழுதி, என் கவலை தீர்த்த பகவானே... உன் தரிசனம் பெறாமல் போய் விட்டேனே...' என்று, அழுது புலம்பினார்.
இத்தகவல், ஊர் முழுதும் பரவ, மக்கள் எல்லாம் திரண்டு வந்து, போதனாவை ஆலயத்திற்கு அழைத்து சென்று, மரியாதை செய்தனர். இதை அறிந்த வாரங்கல் அரசர், மகிழ்ந்து, 'சகல மரியாதையும் செய்து அவரை இங்கே அழைத்து வாருங்கள்; அவர் எழுதிய பாகவதத்தை எனக்கு சமர்ப்பணம் செய்யட்டும்...' என்று கூறி, பரிசுப் பொருட்களை தன் பணியாளர்களிடம் கொடுத்து அனுப்பினார்.
அரசரின் செல்வக் குவியலுக்கும், மரியாதைகளுக்கும் மயங்கவில்லை போதனா. மாறாக, 'நான் எழுதிய இந்நூல், ஸ்ரீராமருக்கே சமர்ப்பணம்; வேறு யாருக்கும், இதை சமர்ப்பித்து, இதன் பெருமையை குலைக்க விரும்பவில்லை... தயவு செய்து, இப்பரிசு பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்...' என்று கூற, பணியாளர்கள் அரண்மனை திருப்பி விட்டனர்.
இதனால், மனம் வருந்திய போதனாவின் மனைவி, தன் சகோதரன் ஸ்ரீநாத கவிக்கு விவரம் சொல்லியனுப்பினாள். அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த ஸ்ரீநாத கவி, சித்து வேலைகள் தெரிந்தவர்.
போதனாவிற்கு புத்தி புகட்ட, ஏராளமான உணவுப் பொருட்களை, போதனாவின் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார், ஸ்ரீநாத கவி. ஆனால், போதனா, 'எவ்வளவு பேர் வந்தாலும், உபசரிக்கக் கூடிய அளவிற்கு, சரஸ்வதி தேவி எனக்கு அருள் புரிவாள்...' என்று கூறி, அனைத்தையும் திருப்பியனுப்பினார்.
உடனே, தன் சீடர்களை அழைத்து, 'இன்று, நீங்கள் எனக்கு பல்லக்கு தூக்க வேண்டாம்...' என்று கூறி, பல்லக்கில் ஏறி, சித்து விளையாட்டால், அந்தரங்கத்தில் இயங்கச் செய்து, போதனா இருக்கும் இடத்திற்கு வந்தார்.
அச்சமயம், போதனாவும், அவர் மகனும், வயலில் உழுதபடி இருந்தனர். அப்போது, அந்தரத்தில் மிதந்தபடி வரும் பல்லக்கில் ஸ்ரீநாத கவியை கண்டார் போதனா. உடனே, தன் மகனிடம், 'உழுது கொண்டிருக்கும் மாடுகளை அவிழ்த்து விடு; கலப்பையையும் அப்படியே விட்டு விட்டு கரையேறு...' எனக் கூறி, தானும் கரையேறினார்.
மாடுகளில்லாமல், கலப்பை மட்டும் தானே உழுதது. அதைப் பார்த்த ஸ்ரீநாத கவி, போதனாவின் தூய்மையான பக்தியை உணர்ந்து, 'போதனா... சித்து வேலையை காட்ட நினைத்த எனக்கு, உன் தூய்மையான பக்தியை காட்டி விட்டாய்...' என்று கூறி, மன்னிப்பு கோரினார்.
பின், ஸ்ரீநாத கவியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதனா, அவருக்கும், அவருடைய சீடர்களுக்கும் சரஸ்வதி தேவியின் அருளால், பெரும் விருந்து படைத்தார்.
பின், ஸ்ரீமத் பாகவதத்தை ஸ்ரீராமருக்கு சமர்ப்பணம் செய்து அரங்கேற்றினார். அந்த அரங்கேற்றத்திற்கு, ஸ்ரீநாத கவி, அரசருடன் பங்கேற்று, மரியாதை செய்தார்.
சித்து வேலைகளில் ஈடுபடாமல், தூய பக்தி கொண்டு வாழ்ந்த போதனா, தெலுங்கில் எழுதிய பாகவதம், இன்றும், பலராலும் பாராயணம் செய்யப்
படுகிறது.
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
எங்கள் நாயகனே என்னுயிர்த் தலைவா
ஏலவார் குழலிமார் இருவர்
தங்கள் நாயகனே தக்க நற் காமன்
தனது உடல் தழல் எழ விழித்த
செங்கண் நாயகனே திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தம் மேவிய சீர்
அங்கணா அடியேன் ஆதரித்து அழைத்தால்
அது எந்துவே என்று அருளாயே!
விளக்கம்: அடியேனின் ஆருயிர்க்கு முதல்வனான எங்கள் தலைவனே... நறுமணம் கமழும் கூந்தல் கொண்ட உமை - கங்கையெனும் இருவர்க்கும் தலைவனே... மன்மதன் எரிந்து போகும்படியாக தழல் எழும் நெற்றிக்கண்ணை உடையவனே... திருப்பெருந்துறையில் உள்ள செழுமையான மலர்களை உடைய குருந்த மரத்தினடியில் எழுந்தருளியிருக்கும் தனிப்பெரு முதலே சிவபெருமானே... அடியேன் மிகுந்த அன்போடு அழைக்கிறேன்... என்னவென்று கேட்டு, எனக்கருள் புரி!
