தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : டிச 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செண்பகா பதிப்பக வெளியீடான, 'பவிஷ்ய புராணம்' நூலிலிருந்து: பதினெட்டு புராணங்களுள் ஒன்று, பவிஷ்ய புராணம். இப்புராணத்தில், இடைச்செருகலாக, பழைய விவிலியத்தில் உள்ள, ஆதாம் - ஏவாள் கதையிலிருந்து, இஸ்லாமிய மன்னர்கள், பிருதிவிராஜன் கதை, கபீர் மற்றும் குருநானக் வரலாறு மற்றும் பிரிட்டிஷ் அரசி விக்டோரியா மகாராணி போன்றோர் பற்றியும் கூறுகிறது. பவிஷ்ய புராணத்தின், மூல நூல் எப்போது அழிந்தது என்று தெரியவில்லை. ஆனால், மூல புராணத்தை கற்ற பவுராணிகர்கள், பின்னால், வந்த அரசர்களிடம் சன்மானம் பெற விரும்பி, அவரவர் மனப்போக்கில் புதுப் புராணம் இயற்றி, இடைச்செருகலாக அந்தந்த மன்னர்களைப் பற்றி பாடியுள்ளனர். இதனாலேயே சர்வமத விஷயங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில் காலமான, நெடுஞ்செழியனின் மனைவி, டாக்டர் விசாலாட்சி, முன்பு ஒரு பேட்டியில் சொன்னது: ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்டார், என் கணவர். அதற்காக, அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தார். அதே ராஜாஜி ஆட்சியின் போது தான், நான், மருத்துவ மேற்படிப்புக்கு, அமெரிக்கா செல்ல, அரசு நிதியுதவி கிடைத்தது. மாற்று கட்சிக்காரரின் மனைவி என்பதற்காக, எனக்கு கிடைத்த உதவியை, ராஜாஜி தடை செய்யவில்லை.

தேர்வில், பாசாகி விட்டோம் என்பதை, 'தேர்வில், சித்தியடைந்து விட்டோம்...' என்று குறிப்பிடுகின்றனர், ஈழத் தமிழர்கள்.

அவ்வை சண்முகம் எழுதிய, 'எனது நாடக வாழ்க்கை' நூலிலிருந்து: பாலாமணி அல்லது பக்காத் திருடன் என்ற படத்துக்கு, பாடல்கள் எழுத, கவிஞர் பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்தனர். அவர், ஈரோட்டுக்கு வந்து, எங்களோடு தங்கினார். பாரதிதாசன் கவிதைகளில் உள்ளத்தை பறி கொடுத்தவன் நான். அதனாலேயே, அவரையே இப்படத்திற்கு பாடல்களை எழுதச் சொல்லலாம் என்று பட அதிபர்களை வற்புறுத்தினேன்.

இதன் மூலம், கவிஞரோடு, நெருங்கிப் பழகவும், உரையாடவும் வாய்ப்பு கிடைத்தது.

என் சகோதரர், டி.கே.முத்துசாமி தான், படத்தின் சங்கீத இயக்குனர். அவரோடு பாரதிதாசன் நல்லமுறையில் ஒத்துழைத்தார். பாலாமணி படத்துக்குரிய பாடல்கள் அனைத்தும், ஈரோட்டிலேயே எழுதப்பட்டன.

திரைப்படங்களுக்கு பாட்டு எழுதுவதில் கவிஞருக்கு அவ்வளவாக விரும்பம் இல்லை. மற்றவர்கள் வற்புறுத்தலுக்காக, ஏதோ எழுதுவார். உடனே, ஏதாவது இலக்கிய பேச்சு துவங்கும்; அதிலேயே மூழ்கி, சுவையோடு பேசியபடி இருப்பார். மீண்டும் யாராவது பாடல்களை பற்றி நினைவூட்டுவர்.

'அது கிடக்குதப்பா... எழுதினால் போச்சு; சினிமா பாட்டு தானே...' என்று கூறி, மீண்டும் பேச்சை துவங்குவார்.

'த ஆர்ட் ஆப் கரேஜியஸ் லிவிங்' நூலிலிருந்து: ஒருவரை தைரியசாலி என்று சொன்னால், அவருக்கு பயமே ஏற்படாது என்பது அர்த்தமல்ல. ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு என்றாலும், தைரியம் என்பது மனதை பொறுத்தது; பயம், உடல் சார்ந்தது.

உயரமான மாடிப் படியில் ஏறினால், மூச்சு இரைக்கிறது; அது, உடலின் வாகு. சில விபரீதமான சம்பவங்களையோ, பயங்கரங்களையோ பார்க்கும் போது, தன்னிச்சையாக பயப் படுகிறது, உடல்.

மாவீரன் நெப்போலியனால், 'தைரியசாலிகளுக்கு எல்லாம் தைரியசாலி' என்று புகழப்பட்டவர், அவருடைய தளபதி, மார்ஷல் நே!

ஆனால், வாட்டர்லூ யுத்தத்தின் போது, குதிரை மீது ஏறி உட்காரக் கூட முடியாத அளவுக்கு அவரது கால்கள் பயத்தில், 'கிடுகிடு'வென்று நடுங்கத் துவங்கின. உடனே தம் கால்களை அலட்சியமாக நோக்கி, 'ஏ நடுங்கும் கால்களே... நன்றாக நடுங்குங்கள்; நான், உங்களை எங்கே கூட்டிச் செல்லப் போகிறேன் என்பதை நீங்கள் அறிந்தால், இன்னும் மோசமாக நடுங்குவீர்கள்...' என்று கூறி, அடுத்த வினாடி, குதிரையில் ஏறி, யுத்த களத்தின் மையப்பகுதிக்கு புறப்பட்டு விட்டார், மார்ஷல்.

'அச்சம் என்பது உடலில் ஏற்படுவதே தவிர, உள்ளத்துக்கு ஏற்படுவது கிடையாது...' என்று நம்பினார், மார்ஷல். தைரியசாலி, பய உணர்வுகளுக்கு அடிபணியாமல், அதை வென்று, தானே எஜமானனாக ஆகிறான்; தைரியமற்றவனோ, பயத்துக்கு அடிமை ஆகிறான்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us