தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கலெக்டர் மருமகள்!

கலெக்டர் மருமகள்!

கலெக்டர் மருமகள்!


PUBLISHED ON : ஆக 30, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''உமா, இந்த வாரம், நாகலிங்கத்தை பார்த்து வரலாம்ன்னு இருக்கேன். அவர் மகள் பிரியாவுக்கும், நம் மகனுக்கும், வர்ற தை மாதம் திருமணம் நடத்திடலாம்,'' என்று, வாசுதேவன் சொல்ல, உமாவுக்கு கொஞ்சம் தயக்கம்.

''ரெண்டு குடும்பமும் பார்த்து, பல ஆண்டுகள் ஆச்சு. தொடர்பும் இல்லை. அப்படி இருக்க, எந்த நம்பிக்கையில் போய் நிப்பீங்க... அந்த பெண்ணுக்கு, இன்னும் திருமணமாகாம இருக்கும்ன்னு என்ன நிச்சயம்?''

''சந்தேகமே வேணாம். எங்களுடைய ஆரம்ப கால தொடர்பு அப்படி. திருமணம் போன்ற பெரிய விஷயங்களை எனக்கு சொல்லாமல் செய்ய மாட்டார். நான் எப்போ நேரில் வந்து முறையா கேட்கப் போறேன்னு, எதிர்பார்த்துகிட்டிருப்பார். 'அருணுக்கு, பிரியா தான் மனைவி'ன்னு, கையில் அடிச்சு, சத்தியம் செய்ததை யார் மறந்திருந்தாலும், அவர் மறந்திருக்க மாட்டார்,'' என்றார்.

வார இறுதியில், நாகலிங்கத்தை பார்க்க புறப்பட்டார், வாசுதேவன்.

நாகலிங்கம் வீட்டை அடைந்தவருக்கு, வியப்பு அள்ளியது. ஓட்டு வீடாக இருந்தது, நவீன மாடி வீடாக மாறியிருந்தது. வீட்டின் முன் கார், சுற்றி தோட்டம். இது, நாகலிங்கம் வீடுதானா என்று சந்தேகம். பெயர் பலகையை பார்த்து உறுதி செய்த பின், உள்ளே போனார்.

வாசுதேவனை பார்த்ததும், ''வாங்க அண்ணே,'' என்று வரவேற்று, காபி கொடுத்து உபசரித்தாள், நாகலிங்கத்தின் மனைவி.

அவளை உள்ளே அனுப்பி விட்டு, அங்கே வந்த நாகலிங்கம், வாசுதேவனை வேண்டாத விருந்தாளியை போல் பார்க்க, ''என்ன லிங்கம்... என்னை தெரியாத மாதிரி பார்க்கறே,'' என்று கேட்டார், வாசுதேவன்.

''ஆளை தெரியுது. ஆனால், முன் தகவல் இல்லாமல் ஓடி வந்தது ஏன்னுதான் தெரியலை.''

''உன்னை பார்க்கணும்ன்னு தோணிச்சுன்னு வச்சுக்கயேன். முன்பை விட, இப்ப நீ உயர்ந்த நிலையில் இருப்பதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

''அஞ்சு வருஷம் சிங்கப்பூர்ல, 'கான்ட்ராக்ட்' வேலை பார்த்து சம்பாதிச்சது. விடு... வந்த விஷயத்தை சொல்லு... எனக்கு நிறைய வேலை இருக்கு.''

''அருணுக்கும், பிரியாவுக்கும் திருமணம் பேசி முடிக்கலாம்ன்னு வந்தேன்,'' என்றார், வாசுதேவன்.

''பிரியாவுக்கு, இப்ப திருமணம் முடிக்கிறதா இல்லை. அடுத்த மாசம், அவள், வேலைக்காக, அமெரிக்கா போகிறாள். அங்கேயே மாப்பிள்ளை பார்க்க போறேன். அதன்பின், அங்கேயே, 'செட்டில்' ஆகிறதா உத்தேசம். நீ வேணும்னா, உன் மகனுக்கு, சேகர் மகளை பாரேன்,'' என்றார், நாகலிங்கம்.

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது, வாசுதேவனுக்கு.

''பிரியாவை கொடுக்க விருப்பமில்லைன்னா, விடு... என் மகனுக்கு, எந்த பொண்ணை கட்டணும்ன்னு, நான் முடிவு பண்ணிக்கறேன். கொஞ்சம் வசதி வந்ததும், பழசெல்லாம் மறந்து போகுதுல்ல,'' என்றபடி, விருட்டென்று எழுந்து, வெளியேறினார்.

இது, பெரிய ஏமாற்றம். நட்புக்கு செய்த துரோகம் என்று மனம் குமைந்தார்.

நாகலிங்கம் சொன்ன சேகர், ஏழை. சொந்த வீடோ, வசதியோ இல்லாத தினக்கூலி. அவர் மகளை கை காட்டியதன் மூலம், 'உன் தகுதிக்கு, அந்த இடம் தான் சரி வரும். என் மகளை கேட்காதே...' என்று சொல்லாமல் சொல்லி, தன்னை மட்டம் தட்டியதை நினைத்து, அவமானமாக இருந்தது, வாசுதேவனுக்கு.

பழைய விஷயங்களை, நாகலிங்கம் மறந்திருந்தாலும், வாசுதேவனுக்கு, அவரின் வாக்குறுதிகள் நினைவுக்கு வந்தது.

நாகலிங்கத்துக்கு, அப்போது வேலை இல்லை; வருமானமும் இல்லை. அப்போதே தலைமை செயலகத்தில் பணி. சொந்த வீடு, வசதி என்று இருந்தார், வாசுதேவன்.

நாகலிங்கம் வரும்போதெல்லாம் அவருக்கு உணவு கொடுத்து, கை செலவுக்கு பணம் கொடுத்து, 'நம்பிக்கையோடு இரு. தொடர்ந்து முயற்சி செய். வேலை நிச்சயம் கிடைக்கும்...' என்று, ஊக்கப்படுத்துவார்.

அதன்படியே கிடைக்க, மகிழ்ந்தார், நாகலிங்கம்.

'வாசு... வாழ்க்கை முழுசும், நம் தொடர்பும், உன் தயவும் எனக்கு இருந்துகிட்டே இருக்கணும்... நாளைக்கு, எனக்கு திருமணமாகி, பெண் குழந்தை பிறந்தால், நீ என் நிலைமையை பார்க்காம பெரிய மனசு பண்ணி, அவளை, உன் மகனுக்கு கட்டிக்கணும். சரியா...' என்று, வாய்மொழி ஒப்பந்தம் செய்து கொண்டார்.

பெண் குழந்தை பிறக்க, அவளுக்கு பெயர் வைக்க சொல்லி, வாசுதேவன் மடியில் குழந்தையை வைத்தார், நாகலிங்கம்.

'பிரியா...' என்று, பெயர் சூட்டினார், வாசுதேவன்.

'இன்னையிலருந்து இவ, உன் வீட்டு மருமக...' என்று சொன்னார், நாகலிங்கம்.

ஒவ்வொரு சந்திப்பிலும், அதை உறுதி செய்து கொண்டே இருப்பார். உத்தியோக நிமித்தம், விலகி தொலைவில் போன பின்பும், அந்த வார்த்தையும், வாக்குறுதியும் அப்படியே இருந்து வந்தது. ஆனால், புது பணக்காரனானதும் எல்லாம் காற்றில் பறந்து விட்டதே என்று வருந்தினார்.

மனதில் சவால் எழுந்தது.

'நாகலிங்கம், உன்னை விட வசதியான வீட்டில், உன் மகளை விட அதிகம் சம்பாதிக்கிற, 'சாப்ட்வேர்' படிச்ச பெண்ணை, மகனுக்கு கட்டி வச்சு காட்டலை, பேரை மாத்திக்கறேண்டா...

'என்னையா எடை போடற... சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், வந்து நின்னதும், கைச் செலவுக்கு பணமில்லாதபோது கை ஏந்தினதும் மறந்து போச்சா... பொண்ணை மடியில் போட்டு பேர் வைக்க சொல்லி, அவள், இனி உன் மருமகள்னு உருகினதெல்லாம் மறந்து போச்சா...' என்றெல்லாம் யோசித்தபடியே, நடந்தார்.

''வணக்கம்... நல்லா இருக்கீங்களா...'' என்ற சேகரின் குரல், சிந்தனையை கலைக்க, நிமிர்ந்தார், வாசுதேவன்.

ஒடுங்கிய தேகம். இடுங்கிய கண்கள். எலும்பு துருத்திய கன்னங்களுமாக பழைய வேட்டியுடன் எதிர்பட்ட, சேகரைப் பார்த்து, ''நீயும் இங்க தான் குடியிருக்கியா,'' என்று கேட்டார்.

''பக்கத்தில் தான் வீடு. ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்கறேன். வந்து, ஒரு காபி சாப்பிட்டு போகலாமே,'' என்று வேண்டினார்.

சற்று முன், நாகலிங்கம் பேசியதை நினைத்தபடியே, ''சரி, வர்றேன்,'' என்று, சேகரை பின் தொடர்ந்தார்.

புதிதாக ஒருவரை, அப்பா அழைத்து வருவதைப் பார்த்ததும், தன்னிடம், 'டியூஷன்' படித்துக் கொண்டிருந்த குழந்தைகளிடம், ''எழுதிகிட்டிருங்க... இதோ வரேன்,'' என்று சொல்லி, எழுந்தாள், சாந்தி.

வாசுதேவனை வணங்கி, ''வாங்க, வாங்க...'' என்று புன்னகையுடன் வரவேற்று, அமர்வதற்கு, பழைய மடிப்பு நாற்காலியை போட்டு, குடிக்க தண்ணீர் கொடுத்து, பவ்யமாக நின்றாள்.

''வாசுதேவன் மாமா... சின்ன வயசுல பார்த்திருப்பே,'' என்ற சேகர், வாசுதேவனிடம், ''என் மகள், சாந்தின்னு பேரு. டிகிரி முடிக்கப் போறாள். பய புள்ளைக்கு, ஐ.ஏ.எஸ்., ஆகணும்ன்னு ஆசை. படிப்புல அப்படி ஒரு ஆர்வம். என்னால தான் அதிகமா உதவ முடியலை. இதோ, 'டியூஷன்' எடுத்து, அதில் வரும் பணத்தில் படிப்பு செலவை பார்த்துகிட்டு, எனக்கும் கொடுக்கறா.''

''என்னப்பா, வந்தவர்கிட்ட பஞ்சப்பாட்டு பாடிகிட்டு. நீங்க வித்தியாசமா நினைச்சிக்காதீங்க... அப்பா, எப்பவும் இப்படி தான்.''

சிறிது நேரம் அந்தப் பெண்ணின் பேச்சு நடவடிக்கைகளை பார்த்தார், வாசுதேவன்.

சட்டென்று, ''சேகர்... என் மகன், ஐ.டி.,ல வேலை பார்க்கறான். 40 ஆயிரம் சம்பளம். நிறம், உயரம்ன்னு எல்லாம் உன் பொண்ணுக்கு பொருத்தமா இருக்கும். அவனுக்கு, உன் மகளை கொடுக்கறியா?'' என்று கேட்டார்.

சேகர் திகைக்க, அதிர்ந்தாள், சாந்தி.

வீட்டிற்கு வந்ததும், ''என்னமோ அந்த பொண்ண எனக்கு பிடிச்சு போச்சு. மகனுக்கு வசதியான இடத்தில் பெண் எடுத்து நாகலிங்கத்தின் மூக்கை உடைக்கணும்ன்னு, நினைச்சேன்.

''ஆனால், அதை விட அந்த ஏழை வீட்டு பெண்ணை, நம் செலவில் திருமணம் செய்து, மருமகளாக்கி, அவள், ஐ.ஏ.எஸ்., கனவுக்கு வசதி செய்து கொடுப்பதுன்னும், அதுதான் உண்மையான சவால்ன்னும் தோணிச்சு. சரின்னு சொல்லிட்டு வந்தேன். நீங்களும், ஒரு முறை அந்த பெண்ணை பார்த்துட்டு உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க,'' என்றார்.

''தேவை இல்லைப்பா. நீங்க எடுத்த முடிவு எனக்கு பிடிச்சிருக்கு,'' என்றான், அருண்.

''இரண்டு பேரும் போட்டி போட்டு, ஒரு ஏழைப் பெண்ணுக்கு இரக்கம் காட்டும்போது, ஒரு பெண்ணாகிய நான் மட்டும் அதற்கு குறுக்கே நிற்பேனா... எதிர்கால கலெக்டர், மருமகளா வரப்போகிறாள்ன்னு சொன்னால் எனக்கு கசக்குமா என்ன,'' என்றாள், உமா.

காலண்டரில் முகூர்த்த தேதி தேட ஆரம்பித்தார், வாசுதேவன்.

எஸ். அறிவுநம்பி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us