
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழா, பங்குனி உத்திரம். இன்று, பங்குனி உத்திரம். தமிழகத்தில் இந்த விழாவை சிவன் - பார்வதி, திருமால் - லட்சுமி, முருகன்- - தெய்வானை திருமண நாளாகக் கொண்டாடுகின்றனர். தர்ம சாஸ்தாவின் அம்சமான, அய்யப்ப சுவாமியின் பிறந்தநாளும் இதுவே.
மகாபாரதத்தில், அர்ஜுனன், பங்குனி உத்திரத்தன்று பிறந்தான் என, சொல்லப்பட்டுள்ளது. பங்குனியை, 'பல்குன மாதம்' என்பர். இதனால், அர்ஜுனனுக்கு, 'பல்குனன்' என்ற சிறப்புப் பெயர் இருக்கிறது.
வட மாநிலங்களில், இந்நாளில், ஹோலி பண்டிகை விசேஷம். 'ஹோலி' என்ற சொல்லுக்கு, புனிதம் என, பொருள். பிரகலாதனின் அப்பாவான, இரண்யனின் தங்கை ஹோலிகா.
பிரம்மனிடம் பெற்ற அழியா வரத்தின் காரணமாக, தன்னையே கடவுளாக அறிவித்து, உலகமே தன்னை வணங்க கட்டளையிட்டான், இரண்யன். ஆனால், தன் இஷ்ட தெய்வமான நாராயணனையே வணங்கினான், பிரகலாதன்.
ஆத்திரமடைந்த இரண்யன், அவனைக் கட்டுக்குள் கொண்டு வர, பல வழிகளிலும் முயற்சித்து தோற்றான். தங்கை ஹோலிகாவின் உதவியை நாடினான்.
ஹோலிகாவிடம், நெருப்பு சுடாத ஆடை இருந்தது. அதைப் போர்த்தி, பிரகலாதனை மடியில் இருத்தி, நெருப்பின் நடுவில் அமர்ந்தாள்.
சற்றும் கலங்காமல், நாராயணனை மனதில் நினைத்தான், பிரகலாதன். அவரது கருணையால், ஹோலிகா போர்த்தியிருந்த ஆடை பறந்து வந்து, பிரகலாதனை போர்த்திக் கொண்டது. ஹோலிகா இறந்தாள்; பிரகலாதன் பிழைத்தான்.
அவளது பெயரால், இந்தப் பண்டிகை, ஹோலி எனப்பட்டது. அநியாயத்தை வேரறுத்து, நியாயத்தை நிலை நிறுத்திய புனித நாள் என்ற அடிப்படையிலும், இதை, ஹோலி என்பர்.
இன்று, ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடியை வீசுவது வழக்கம். இதற்கு செவி வழிக்கதை ஒன்று உண்டு.
ராதையை தோழியாகக் கொண்ட கிருஷ்ணருக்கு, தான் கருப்பாக இருக்க, அவள் சிவப்பாக இருக்கிறாளே என, சற்று வருத்தம். இதையறிந்த, அவரது வளர்ப்பு அம்மா யசோதை, ராதையின் முகத்தில் கருப்பு பொடி பூசி, 'அவளும் கருப்பு தான்...' என, வேடிக்கையாக சொன்னாளாம்.
இதனால், அவரவருக்கு விருப்பமானவர்களை, என்ன நிறத்தில் காண விரும்புகின்றனரோ, அந்த வண்ணப்பொடி துாவி விளையாடுவதாக கருத்து உண்டு.
அறிவியல் ரீதியாக, பங்குனி உத்திரத்தன்று, சூரியனின் கதிர்கள் மாறுபட்ட அலைகளுடன் பூமியில் பரவுகிறது. அப்போது, பல வண்ணங்கள் எழுகின்றன. இந்த வண்ணங்கள் பூமியிலுள்ள உலோக, அலோக பொருட்கள் மீது பட்டு, அதன் சக்தியை அதிகரிக்கிறது.
வண்ணப்பொடி துாவி விளையாடுவதும், மனதிற்கு உற்சாகத்தை அளிக்கிறது. இது தான் வண்ணப்பொடியின் ரகசியம்.
தி. செல்லப்பா

