
நெகிழ வைத்த திருநங்கை!
எங்கள் பகுதியில், கூலி வேலை செய்யும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த, மகள், 30 வயதை நெருங்கிக் கொண்டிருந்தாள். திருமணம் செய்து தரும் வசதி, பெற்றோருக்கு இல்லை.
அக்குடும்பத்தோடு நெருங்கிய நட்பிலிருந்த திருநங்கை, திடீரென ஒருநாள், தரகர் மூலம், வரன் ஒன்றை ஏற்பாடு செய்து அழைத்து வந்தார். மேலும், திருமண செலவு முழுவதையும் தானே ஏற்பதாக, உறுதியும் அளித்தார்.
சொன்னவாறே, தன்னிடமிருந்த நகைகள் மற்றும் சேமிப்பு தொகையை, அப்பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து, திருமணத்தையும் முன்னின்று நடத்தி, அனைவரையும் நெகிழச் செய்தார்.
பிறரின் பார்வையில், வெறும் காட்சிப் பொருளாக, ஏளனமாக பார்க்கப்படும் திருநங்கையருக்கும், இளகிய மனமும், மனிதநேயமும் இருக்கிறது என்பதற்கு, சாட்சியாக விளங்கும் அத்திருநங்கையை, அனைவரும் பாராட்டினர்.
மூன்றாம் பாலினத்தவர்களை, மதிக்காவிட்டாலும் பாதகமில்லை, அவமரியாதை செய்யாமல் இருந்தாலே போதும்!
எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
வேலைக்கார பெண்ணின் விவேகம்!
பக்கத்து கிராமத்திலிருந்து வந்து, எங்கள் குடியிருப்பில் உள்ள சில வீடுகளில், வேலை செய்துவிட்டு போவார், ஒரு பெண்மணி.
சில ஆண்டுகள் வரை, வந்து சென்றவர், அதன்பின் காணவில்லை. ஒருநாள், அப்பெண்ணை, பரபரப்பான நகர வீதியில், மின் சாதன பழுது நீக்கும் கடை ஒன்றில் பார்த்ததும், 'இங்கே என்ன செய்கிறீர்கள்...' என்றேன்.
'இந்த கடையை நான் தான் நடத்துகிறேன்...' எனக் கூறி, தொடர்ந்தார்...
'இங்குள்ள வீடுகளுக்கு வேலைக்கு சென்று வந்தபோது, ஒவ்வொரு நாளும், ஒரு வீட்டில் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பிரிஜ், வாஷிங்மிஷின் மற்றும் 'டிவி' என, மின் சாதன பொருட்கள் பழுதாகும். அப்போது, பழுதை நீக்க வருபவர்களுக்கு உதவியாக இருக்கும்போது, இதன் தொழில்நுட்பத்தை நாமும் கற்றுக்கொண்டால் என்னவென்று தோன்றியது.
'இத்தொழில் தெரிந்த ஒருவரிடம், முறையாக சில மாதங்கள் கற்றேன். இந்த கடையை வாடகைக்கு பிடித்து, தொழில் துவங்கினேன். இப்போது, உதவிக்கு ஆள் வைத்து வேலை செய்யுமளவிற்கு உயர்ந்திருக்கிறேன்...' என்றார்.
வெறும் வீட்டு வேலையோடு, சொற்ப வருமானத்தில் வாழ்வை சுருக்கிக் கொள்ளாமல், ஊக்கத்துடன் கைத்தொழில் கற்று, வளர்ச்சிக்கு பாதை அமைத்துக்கொண்ட, அப்பெண்ணை பாராட்டி வந்தேன்.
சி. அருள்மொழி, கோவை.
பெருமைப்படுத்திய, புலம் பெயர்ந்தவர்!
என் வீட்டருகே குடியிருக்கும் பீகாரை சேர்ந்த நண்பர், 'வெல்டிங்' தொழில் செய்கிறார். இங்கு வந்து, 15 ஆண்டுகள் ஆகிறது.
அவரிடம், 'சொந்த ஊருக்கு செல்லும் எண்ணம் இல்லையா...' என்றேன்.
'இங்கிருந்து எப்போது ஊருக்கு சென்றாலும், அங்கு ஒரு வாரத்திற்கு மேல் இருக்க மாட்டேன். உடனே, தமிழகம் திரும்பி விடுவேன். காரணம், எங்கள் ஊரில், நான் மதிப்புடன் வாழ்ந்ததே இல்லை.
'என் வயது, 40. ஜாதி, பொருளாதாரம் மற்றும் கூலி வேலை செய்பவன் என, பலமுறை அவமதிக்கப்பட்டு தான், தமிழகம் வந்தேன்.
'எங்கள் ஊரில் மாதத்தில், 10 நாள் வேலை கிடைப்பதே அபூர்வம். அப்படியே கிடைத்தாலும், அதற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பது அரிது. ஆனால், இங்கே, மாதம் முழுவதும் வேலையும், நிறைவான ஊதியமும் கிடைப்பதுடன், எங்கள் ஊரில் கிடைக்காத, மரியாதையும் கிடைக்கிறது.
'என்னை, 'அண்ணா, தம்பி, சார்' என்று அழைப்பது கண்டு நெகிழ்ந்து போவேன். இந்த, 15 ஆண்டுகளில், என் ஜாதியை யாரும் விசாரித்ததில்லை. வருமானம், படிப்பு குறித்து கூட கேட்டதில்லை. சொந்த ஊரில் இருந்ததை விட, இங்கு, பாதுகாப்பாய் உணர்கிறேன். அதனால், சொந்த ஊருக்கு செல்லும் எண்ணமே இல்லை...' என்றார்.
தமிழனாய் பிறந்ததற்காக, முதன் முதலில் மகிழ்ச்சி அடைந்தேன்.
— எஸ். கண்ணன், தஞ்சாவூர்

