PUBLISHED ON : மார் 28, 2021

பானுமதியின் தொழில் பக்தி!
திரைப்பட வாழ்வின் அடுத்த, 'ரவுண்ட்' குணச்சித்திர நடிகையாக துவங்கியது, பானுமதிக்கு. அதன் ஆரம்ப புள்ளியாக, ஏவி.எம்.,ன் அன்னை படத்தில், பொறுப்பான வளர்ப்பு அம்மா கதாபாத்திரம். பானுமதிக்காக அளவெடுத்து தைத்தது போல, வேடப் பொருத்தம் அமைந்திருந்தது.
அன்றைக்கு, பானுமதி பாடி நடிக்கும் காட்சிக்கான பாடல் எழுத, கண்ணதாசன் வந்தபோது, பானுமதியும் அங்கு வந்து சேர்ந்தார்.
தத்தெடுத்த குழந்தையை கொஞ்சிக் கொண்டே, வளர்ப்பு அம்மா பாடும் சூழல். பாடல் வரிகள் எப்படி இருக்க வேண்டும் என்று, கவிஞரிடம் சொல்லி, அவரே தேர்வு செய்தார்.
இசையமைப்பாளர் சுதர்சனம் மெட்டுக்கு, 'பூவாகி, காயாகி கனிந்த மரம் ஒன்று... பூவாமல், காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று...' என, பாடல் வரிகளை சொன்னார், கவிஞர்.
'அற்புதமான வார்த்தைகள், மிஸ்டர் கண்ணதாசன்...' என்று பாராட்டினார்.
பாடலுக்கு வாத்தியத்தின் இசை, எந்தெந்த இடத்தில் சேர்க்க வேண்டும் என்று, இசையமைப்பாளரிடம் குறிப்பு சொல்லி, அதன்படி, அவர் பாடி, பாடல் பதிவு செய்வதில் பங்கு கொண்டார்.
மூன்று முறை அந்த பாடலை, 'ரெக்கார்டிங்' செய்தோம். இதில், மூன்றாவது, 'டேக்' தான், எங்கள் எல்லாருக்கும் திருப்தி தர, ஓ.கே., சொன்னோம். இரண்டாவது, 'டேக்'கில், வாத்திய இசை சில இடங்களில் சரியாக அமையவில்லை.
'இரண்டாம், 'டேக்' தான் நன்றாக இருக்கிறது. அதில், நான் நன்றாக பாடியிருக்கிறேன். அதையே, ஓ.கே., செய்யுங்கள்...' என்று சொல்லி சென்று விட்டார், பானுமதி.
அவருக்கு தெரியாமல் நாங்கள், மூன்றாவது, 'டேக்'கை ஓ.கே., செய்து, படப்பிடிப்புக்கு எடுத்து வந்து விட்டோம்.
'குழந்தையை தோளில் சாய்த்தபடி, பாடி, நடிக்க வேண்டும். அதற்கு முன், ஒருமுறை பாடலை ஓட விடுங்கள்...' என்றார்.
பாடலை போட்டோம். கேட்டதும், 'இது, நான், ஓ.கே., செய்த பாடல் இல்லையே...' என்றார்.
'இதுதான் மேடம் நீங்க, ஓ.கே., செய்தது...' என்று சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததோடு, 'தியேட்டருக்கு வாங்க, நான், ஓ.கே., செய்த பாடலை காட்டுகிறேன்...' என்று சொல்லி, வேகமாக, 'ரெக்கார்டிங்' தியேட்டருக்கு நடக்க துவங்கி விட்டார்.
நாங்கள், அவரை பின் தொடர்ந்தோம்.
பானுமதிக்கு முன்னே ஓடிய அசிஸ்டென்ட், சவுண்ட் இன்ஜினியர் சம்பத்திடம் சென்று, 'பானுமதியம்மா, 'ரெக்கார்டிங்' செய்த பாடலை கேட்க வருகிறார்...' என்று தகவல் சொன்னார்.
அப்போது, அங்கிருந்த இசையமைப்பாளர் சுதர்சனம், சம்பத்திடம் பாடலை போடச் சொன்னார்.
'நான், ஓ.கே., செய்த இரண்டாம், 'டேக்' பாடல், இது தான்...' என்று, உறுதி செய்தார். அதை விட்டு, மூன்றாவது, 'டேக்' பாடலை எடுத்து வந்த விஷயம் வெட்ட வெளிச்சமானது.
தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து, கோபம் கொண்ட பானுமதி, 'இந்த பாடலை வைத்து படம் எடுப்பதாக இருந்தால், நான் நடிப்பேன். இல்லையென்றால் சாரி...' என்றார், உறுதியான குரலில்.
பின்னர், அவர் தேர்வு செய்த பாடலை கொண்டு வந்து படமாக்கப்பட்டது.
'இப்படி, அவரின் அதீத பங்களிப்பு, சில நேரங்களில் எங்களுக்கு தொந்தரவாகவும் இருந்திருக்கிறது...' என்று, ஏவி.எம்.குமரன், தன் அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார். இதுதான், பானுமதி, தொழில் மீது கொண்ட ஈடுபாடு; பக்தி.
இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவரான, ஹிந்தி நடிகர், பால்ராஜ் சஹானி, அன்னை படம் பார்த்து விட்டு, பானுமதிக்கு கடிதம் எழுதினார்.
அதில்...
'நேற்று மாலை, என் வேண்டுகோளுக்கிணங்க, அன்னை படத்தை போட்டுக் காட்டினர். அதன் ஹிந்தி பதிப்பில், நான் நடிக்கிறேன். எனக்கு தமிழ் தெரியாவிட்டாலும், பலமுறை படத்தை பார்த்தேன்.
'அன்னை படத்தை பொறுத்தவரை, உங்கள் நடிப்பு சிறப்பானது மட்டுமல்ல; மிக மிக உயர்வானது. வாய் திறந்து வசனம் எதுவும் பேசாமல், பார்வையாலும், நடை, உடை பாவனைகளாலும் நீங்கள் செய்திருக்கும் நடிப்பு பற்றி தரமான விமர்சகன், ஒரு புத்தகமே எழுதலாம்.
'என் பாராட்டுதல்கள் மட்டும், உங்களது நடிப்பு வெற்றிக்கு, ஒரு பரிசாகி விடாது. நம் நாட்டு படங்களை விட்டுத் தள்ளுங்கள். மேல் நாட்டு படங்களில் கூட, மிக மிக அபூர்வமாக தான் இம்மாதிரி உயர்வான நடிப்பை, நாம் பார்க்க முடிகிறது...' இவ்வாறு எழுதியிருந்தார்.
நடிகர் சோவுக்கு, பானுமதி கொடுத்த அதிர்ச்சி...
— தொடரும்
சபீதா ஜோசப்

