தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/கோலம்!

கோலம்!

கோலம்!


PUBLISHED ON : டிச 18, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 18, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்கழி பிறந்தாச்சு; கோலங்கள் அணிவகுப்பும் வந்தாச்சு!

மார்கழி மாதம், தேவர்கள் துாங்கி விழிக்கும் காலம் மற்றும் 'மாதங்களில் நான் மார்கழி' என்று, ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில் சொல்லி இருப்பதால், அம்மாதம் பூஜை, பஜனைகள் செய்ய, மிக விசேஷமாக சொல்லப்படுகிறது.

வானில் வலம் வரும் தேவர்களை மகிழ்விக்க, வீடுதோறும் விதவிதமாய் கோலம் வரைவது, விசேஷமாக கருதப்படுகிறது. விஞ்ஞான ரீதியாகவும் அம்மாதத்தில் விடியற்காலை காற்றில், ஓசோன் அதிகமாக இருப்பதாக அறிகிறோம். அதன் பயனைப் பெறவே, விடியற்காலை பஜனையையும், கோலம் போடுவதையும் உருவாக்கினர், நம் முன்னோர்.

மார்கழியில் வாசலில் கோலமிட்டு, அதன் நடுவில் சாணம் உருட்டி வைத்து, பூசணிப்பூ செருகி வைப்பதிலும் ஒரு தத்துவம் உள்ளது.

சாணத்தை பிள்ளையாராக பாவித்து, மார்கழி மாதத்தில் அதிகம் பூக்கும் பூசணிப் பூக்களை அதில் செருகி வைப்பர்.

வாசலில் கோலமிடுவது, அழகுக்கு மட்டுமல்ல. தீய சக்திகள் நம் வீட்டுக்கு உள்ளே நுழையாமல் தடுக்கவும் தான் கோலமிடுகிறோம். சாணம் ஒரு சிறந்த கிருமி நாசினி, முற்றத்தின் துாய்மையைக் காக்கிறது. பூக்கள், இறைவனுக்கு சமர்ப்பணமாகின்றன. கோலம் போடுகையிலும், இறைவனை எண்ண வேண்டும் என்பதற்காகவே, இந்த ஏற்பாடு.

கோலம் என்றால் என்ன?

இது நல்ல தமிழ் சொல். அழகு, ஒப்பனை, ஒழுங்கு என்று பொருள். ஒழுங்கு இல்லாததை, 'அலங்கோலம்' என்பர். அலங்காரமாக ஊர்வலம் போவதை,'ஊர்கோலம்' என்போமே... 'கோல்' என்றால், புள்ளி என்று பொருள். புள்ளிகள் வைத்துப் போடுவதால், கோலம் என்கிறோம்.

'கோலமிடுவது கோழி கூவுமுன்னே' என்பது பழமொழி. அதிகாலை நீராடியபின், வாசலில் நீர் தெளித்து கோலம் போடுவது, ஹிந்து மத சம்பிரதாயம்.

கோலத்திற்கு அரிசி மாவே ஏற்றது. வெள்ளையை கண்டு பேய், பிசாசு வராது என்பது நம்பிக்கை. கோலம் போடுவதால், வீட்டில் அஷ்டலட்சுமியும் வாசம் செய்வதாக, ஐதீகம்.

கோலத்துக்கு அழகூட்ட!

கோலத்தை சுற்றிலும் ஆங்காங்கே சற்று நெருக்கமாக செம்மண்ணை பொட்டு பொட்டாக இடுங்கள். கோலத்தின் அழகு துாக்கலாக இருக்கும்.

எங்கெங்கே கோலம் போட வேண்டும்?

வீட்டு வெளி முற்றம், படிக்கட்டுகள், திண்ணை, கூடம், பசுக்கூடம், துளசி மாடம், பூஜையறை மற்றும் சுப காரியம் நடத்துமிடம் போன்ற இடங்களில் கோலம் போடுவது நல்லது.

கோலம் எப்படி போட வேண்டும்?

குனிந்து நின்று போட வேண்டும். உட்கார்ந்தபடி போடக் கூடாது. வலக்கையால் தான் கோலமிட வேண்டும்.

புள்ளிகள் வைக்கும் போது, ஏணியில் ஏறுவது போல் ஏறு வரிசையில் வைக்க வேண்டும். கோடுகளையும் அப்படியே போட வேண்டும். மேலிருந்து கீழாக போடக் கூடாது.

ஈரிழைக் கோலம் மங்கலத்தைக் கொடுக்கும், ஒரு கோடு, மூவிழைக் கோலம் அமங்கலத்தைக் குறிக்கும். விழாக் காலத்திற்கு நாலிழைக் கோலம் நல்லது.

தொகுப்பு : எஸ். கலாரஞ்சனி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us