
அன்புள்ள சகோதரிக்கு—
வயது: 48, எனக்கு ஒரே மகன். இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்டேன். அரசு பணியில் உள்ளேன். பெற்றோருக்கு ஒரே மகள், நான். என் நிலைமைக்கு வருந்தி, அடுத்தடுத்து தாயும், தந்தையும் இறந்தனர்.
புகுந்த வீட்டினரின் புறக்கணிப்பால், பெற்றோருக்கு சொந்தமான வீட்டில் நானும், மகனும் மட்டுமே வாழ ஆரம்பித்தோம். எனக்கு நீயும், உனக்கு நானும் தான் உலகம் என்று, மகனிடம் சொல்லிச் சொல்லி வளர்த்தேன்.
அவனும் என் மீது மிகுந்த பாசமாக இருப்பான். அதுவே இப்போது வினையாகி விட்டது. பி.இ., படித்து, தற்சமயம் வேலைக்கு செல்கிறான், மகன்.
வேலைக்கு போகும் நேரம் தவிர, மற்ற நேரம் முழுதும், வீட்டிலேயே இருப்பான். அவனுக்கென்று நண்பர்கள் அதிகம் இல்லை. வெளியே சென்று விட்டு வா என்று கூறினால், 'உனக்கு துணையாக இருக்கிறேன்...' என்று, என்னுடனே இருப்பான். கூடமாட வேலை செய்வான். நான் இல்லாமல், 'டிவி' கூட பார்க்க மாட்டான்.
திருமணம் செய்து வைத்தால் சரியாகி விடும் என்று நினைத்து, பெண் பார்க்க ஆரம்பித்தேன். உடனே, 'எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. கடைசி காலம் வரை, உனக்கு துணையாக இருப்பேன். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம்...' என்கிறான்.
'என் கஷ்ட, நஷ்டங்களை அவன் மீது திணித்து, என்னை விட்டு அகலாமல் இப்படி வளர்த்து விட்டேனோ... வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சந்தோஷங்களை அவனிடமிருந்து பறித்து விட்டோமே...' என்று, தினமும் குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன்.
என் மகன், திருமணமாகி, மனைவி, குழந்தைகள் என, இனிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் சந்தோஷமாக வாழ, என்ன செய்ய வேண்டும், சகோதரி.
— இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
பொதுவாக அம்மாக்களுக்கு மகள்களை விட மகன்கள் மீது தான் ஈர்ப்பும், பாசமும் அதிகம். அதுவும் கணவனை இழந்த நீ, உன் மகனை சர்வரோக நிவாரணியாக பாவித்து வளர்த்திருக்கிறாய்.
கணவன் மற்றும் பெற்றோரின் மரணம், உன்னை வெகுவாக பாதித்துள்ளன. அதிலிருந்து மீள, மகனின் அருகாமை வெகுவாக உதவியுள்ளது. மொத்தத்தில் உன் மகனை, 'அம்மா கோண்டுவாய்' வளர்த்துள்ளாய்.
உன் மகனுக்கு 'ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்' எனும் மனநோய் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த மனநோய் உள்ள ஆண்கள், அம்மாக்களை காதலிப்பர். பெண் கடவுளாய் பாவித்து ஆராதிப்பர்.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* சுடச்சுட காப்பியும், சமோசாவும் பரிமாறி, மகனுடன் மனம் விட்டு பேசு.
'மகனே, எனக்கு தங்க மகனாய் இருந்து என் வாழ்நாளில், 25 ஆண்டுகளை மகிமைபடுத்தி விட்டாய். அள்ளக்குறையாத அன்பையும், பாதுகாப்பையும் வாரி வாரி வழங்குகிறாய். மெய்காப்பாளனாக இருந்து என்னை அரவணைத்தாய். இதுபோதும் எனக்கு.
'இனி நீ, திருமணம் செய்து கொண்டு, எனக்கு பேரனையோ, பேத்தியையோ கொஞ்சக் கொடு. இதுவரை எனக்கு சந்தோஷமான விஷயங்களை செய்த நீ, திருமணம் செய்து, எனக்கு பேரானந்தத்தை கொடு.
'பிரம்மசாரியாக இருந்து, என் வாழ்நாளுக்கு பிறகு தன்னந்தனியன் ஆகாதே. நம்முடன் நம் சந்ததி நின்று விடாமல், ஆல் போல் தழைக்க வேண்டும். வரும் உன் மனைவி எப்படி இருந்தாலும், அவளையும் உன்னுடன் சேர்த்து அரவணைத்துக் கொள்வேன்.
'திருமணம் தான் ஒரு ஆணை முழுமையாக்கும். இரு குழந்தைகளை பெற்று தந்தை ஸ்தானத்தை ஆத்மார்த்தமாக அனுபவி. ஊருடன் ஒத்துவாழ் மகனே...' எனக்கூறு
* உனக்கும், மகனுக்கும் இடையே கண்ணாடி சுவர் அமைத்து விலகி நில். உன்னுடைய தொடர் பாராமுகம், அவனுக்குள் பல நல்ல விளைவுகளை உருவாக்கும்
* மகனின் திருமணமான, திருமணமாகாத நண்பர்களை தொடர்பு கொண்டு, அவர்களை மகனிடம் திருமண அவசியத்தை பேசச் சொல்
* 'நீ திருமணம் செய்து கொள்ளா விட்டால், நான் தனி வீடு பார்த்து போய் விடுவேன்... நீ திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்...' என, 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்
* தரகர் மூலமும், 'மேட்ரிமோனியல்' மூலமும் தைரியமாக பெண் பார்க்க ஆரம்பி. பெண்ணின் புகைப்படத்துடன் கூடிய விபரக்குறிப்புகளை, மகனிடம் காட்டு. அனிச்சையாக அவனுக்குள் ஆர்வம் உண்டாக வாய்ப்பிருக்கிறது
* உன் மகனை நல்லதொரு மனநல மருத்துவரிடம் அழைத்து போய், தொடர் ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்
* உறவுக்காரர்கள் இருந்தால், அவர்கள் வீடுகளுக்கு மகனை அழைத்து போ. அழகான முறைப்பெண்களை பார்த்தாலும், மகன் மனம் மாறுவான்.
விரைவில் நீ பாட்டியாக வாழ்த்துகள்! -
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.