/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம்! (8)
/
நகைச்சுவை மன்னன் எஸ்.வி. சேகரின் டிராமாயணம்! (8)
PUBLISHED ON : ஜூன் 27, 2021

முதல்நாள் இரவில் பஸ் ஏறி, மறுநாள் காலை பெங்களூரு போய், நன்றாக ஓய்வெடுத்து, நாடகம் போட்டு பேர் வாங்கணும் என, ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இரவு வரவேண்டிய பஸ், நள்ளிரவைத் தாண்டியும் வரவில்லை. விசாரித்தபோது, 'ஏதோ பிரச்னை; பஸ் வராது. காலை, 4:00 மணிக்கு வரும்...' என்று, கூறினர்.
சற்றும் மனம் தளராமல் வேறு ஒரு பஸ்சை ஏற்பாடு செய்து கிளம்புவதற்குள், காலை, 10:00 மணியாகி விட்டது. பரவாயில்லை, இப்போது கிளம்பி வேகமாக போனால், மாலை, 5:00 மணிக்குள் போய் விடலாம். நாடகம், 6:00 மணிக்குதானே என்று நினைத்த போது வாணியம்பாடி அருகே, 'டமார்' என்ற சத்தம். பார்த்தால், 'டயர் பஞ்சர்!'
டயர் மாற்றி கிளம்புகையில், வழியில், மேலும் சில பிரச்னைகள். எல்லாவற்றையும் தாண்டி, பெங்களூரில் நாடகம் நடக்கும் கட்டடத்திற்குள் பஸ் நுழைவதற்குள், நாடகத்தை ரத்து செய்து விட்டதாக வந்த அறிவிப்பால், ரசிகர்கள் வெளியேறி விட்டனர்.
'கவலைப்படாதீங்க, சாப்பிட்டுப் போகலாம்...' என்று, நாடகத்தை ஏற்பாடு செய்த கிருஷ்ணன், ஆறுதல் சொன்னார்.
நாடகம் போடாமலே நஷ்டத்ததோடும், தோல்வியோடும் திரும்பினர். இந்த நஷ்டத்தை, அதே பெங்களூருக்கு, 10 பேருடன் ரயிலில் சென்று, நாடகம் போட்டு, சரி செய்தார், எஸ்.வி.சேகர்.
இயக்குனர் விசுவின் தம்பி, கிஷ்மு. சேலத்தில், நாடகத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். அங்கு, நாடகம் நடத்த காரணமாக இருந்த, அர்த்தநாரி என்பவரை மறக்க முடியாது.
கலைஞர்களை மிகவும் பெருமைப்படுத்தினார். குழுவிற்கு நல்ல மரியாதை கிடைத்தது. இதன் பிறகு, இந்தியாவில் இவர்கள் நாடகம் போடாத இடமே கிடையாது. அமெரிக்கா வரை, சர்வ சாதாரணமாக பலமுறை சென்று வந்தனர்.
'நான், வாழ்க்கையில், சிகரெட், மது போன்ற விஷயங்கள் பக்கம் போனதே கிடையாது. என் குழுவினரும் அப்படித்தான். ரொம்ப, 'டிசிப்ளின்' பார்ப்பேன். ஆனால், இதெல்லாம் என் நாடகத்தில் நடிக்க வந்த சிலருக்கு பிடிக்கவில்லை. 'அதெல்லாம் நிறுத்த முடியாது...' என்று கூறினர். முக்கிய பாத்திரத்தில் நடிப்பவராக இருந்தாலும், அவர்களை குழுவிலிருந்தே நீக்கினேன்.
'இந்நிலையில் ஒருநாள், கண்ணாமூச்சி என்ற நாடகத்தில் நடிக்க வேண்டிய கதாநாயகன் சந்திரமவுலி வரமுடியவில்லை. நானே, 'ஹீரோ'வாக நடிப்பது என, முடிவு செய்தேன். என் முடிவை நண்பரும், இணை தயாரிப்பாளருமான சுந்தாவிடம் தெரிவித்தேன்.
'சுந்தாவோ, 'யாரோ நடிச்சு, நம்ப நாடகப்பிரியா அழியறதை விட, உன்னால் தான் நாடக குழுவை மூடுவது என்று முடிவு செய்து விட்டாய். அது, உன்னால் தான் நடக்கணும்ன்னு இருந்தால், யாரால் தடுக்க முடியும்...' என்று, தாமாஷாக சொன்னார்.
'அப்படித்தான், ஜூலை 1, 1974ல், நான், 'ஹீரோ'வானேன். அது, என் தாய் - தந்தையின் திருமண நாள் மட்டுமல்ல; என் மகள் அனுவின் பிறந்த நாளும் கூட.
'மேலும், 'அமெச்சூர் நாடகங்கள் தாம்பரத்தை தாண்டாது...' என்று, நடிகவேள் எம்.ஆர்.ராதா அப்போது சொல்லியிருந்தார். அதற்கு காரணம், 'நகரத்தன்மையுடன் கூடிய கதையும், மக்களுக்கு புரியாத ஆங்கிலம் கலந்த வசனங்களும் தான்...' என்பது அவரது குற்றச்சாட்டு.
'இந்த குற்றச்சாட்டை உடைக்க வேண்டும் என்பதற்காக, கிராமத்து மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில், கதை, வசனத்தில் கவனம் செலுத்தி, மிகவும் எளிமைப்படுத்தினேன்; வெற்றியும் பெற்றேன்...' என்கிறார், எஸ்.வி.சேகர்.
— தொடரும்
இவரைப் பற்றி அவர்
வறுமையின் நிறம் சிவப்பு படம் மூலமாக, நான் உன்னை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினேன் என்று சொல்வதை விட, உன்னை அடையாளம் காட்டக் கூடிய பேறு, எனக்கு கிடைத்தது என்று சொல்வதில் பெருமை அடைகிறேன். என் ஆசை எல்லாம், உன் நாடகங்கள் தமிழ் பேசாதவர்கள் மத்தியிலும் போய்ச் சேர வேண்டும். உலகம் முழுவதும், உன் நாடகங்களுக்கு வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பது தான்.
— இயக்குனர் சிகரம் பாலசந்தர்
-எல். முருகராஜ்