தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நகைச்சுவை மன்னன் எஸ்.வி.சேகரின் டிராமாயணம் (16)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி.சேகரின் டிராமாயணம் (16)

நகைச்சுவை மன்னன் எஸ்.வி.சேகரின் டிராமாயணம் (16)


PUBLISHED ON : ஆக 22, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 22, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலவாக்கத்தில் திருடர்கள் என்ற நாடகம், 'குமுதம்' வார இதழில் வந்தது போலவே, பின் ஒரு நாளில், பெரிய தம்பி என்ற நாடகம், 'கல்கி' இதழில், தொடராக வந்தது.

அந்த தொடர் முழுவதையும் படித்த, அமெரிக்காவில், 'சிவாஜி கலைமன்றம்' நடத்தி வரும், ஸ்ரீதர் என்பவர், எஸ்.வி.சேகரை தொடர்பு கொண்டு, 'அமெரிக்காவில், இந்த நாடகத்தை நாங்கள் நடத்தலாம் என்று இருக்கிறோம். உங்கள் அனுமதி தேவை...' என்றார்.

'தாராளமாக நடத்தலாம். ஆனால், நான் ஒருவனாவது வந்தால் தான் நாடகம் நன்றாக இருக்கும்...' என்றார்.

'சரி வாருங்கள்...' என்று சொல்லி, டிக்கெட் அனுப்பி வைத்தார்.

'நாடகத்தில் என் கேரக்டர் தவிர, மற்ற கேரக்டர்களில் நடிக்க விரும்புபவர்கள், 'ஸ்கிரிப்டை' நன்றாக படிக்க வேண்டும். நான் அனுப்பும் கேசட்டை கேட்டு, அதன்படி பேச வேண்டும்...' என்று சொல்லி, ஆடியோ கேசட்டை அனுப்பி வைத்தார்.

அதன்படி, அமெரிக்கா சென்று, அங்குள்ள நம் தமிழ் நெஞ்சங்களை வைத்து, வெற்றிகரமாக நாடகம் நடத்தினார். அந்த நாடகம் முடிவதற்குள்ளாக, அங்குள்ள பல்வேறு தமிழ் அமைப்பினர், 'இதே போல, எங்களுக்கும் நாடகம் நடத்திக் கொடுங்கள்...' என்று சொல்லி, 'அட்வான்ஸ்' கொடுக்க முன் வந்தனர்.

'அட்வான்ஸ்' வாங்க மறுத்து, 'இனி, என் குழுவுடன் வந்து தான் நாடகம் நடத்துவேன்...' என்று சொல்லி, அதன்படி, பலமுறை குழுவுடன்

சென்று, அங்கேயே முகாமிட்டு,

32 நாட்களில், 28 நாடகங்கள் போட்டார். அதன்பின், சிங்கப்பூர், மலேஷியா மற்றும் குவைத் என்று, ஆறு மாதங்களில், ஏழு நாடுகளுக்கு சென்று நாடகம் போட்டார்.

அமெரிக்காவில் நடிக்க வந்த புதியவர் ஒருவர், ஒரு காட்சியில் பதற்றமாகி, பொம்மை துப்பாக்கியால் ஒருமுறை சுடுவதற்கு பதிலாக, பலமுறை சுட்டுக்கொண்டே இருந்தார்.

'இப்படியே நீ சுட்டுக்கொண்டு இருந்தால், ரசிகர்கள், நிஜ துப்பாக்கியை எடுத்து, உன்னை சுட்டு விடுவர்...' என்றதும், அரங்கத்தில், 'குபீர்' சிரிப்பு. அந்த காட்சியும் சமாளிக்கப்பட்டது.

இந்தோனேஷியா தலைநகர் ஜகர்த்தாவில் கிடைத்த மகத்தான வரவேற்பால், அரங்கு இருக்கைகளுக்கு அதிகமாக டிக்கெட் விற்று விட்டனர். டிக்கெட் வாங்கிய ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக, 30 அடி நாடக மேடையை, 10 அடியாக சுருக்கினார். கொஞ்சம் காலை எட்டி வைத்தாலும், யார் தலை மீதாவது பட்டு, வாமன அவதாரமாகிவிடும் என்ற நிலை; ஜாக்கிரதையாக நடித்து முடித்தனர்.

நாடகம் நடக்கும் என்று அறிவித்து விட்டால், எவ்வளவு புயல், மழை என்றாலும், எப்படியும் நடத்தி விடுவார். சென்னையில், 1985ல், புயல், மழை வீசிய அன்று, நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியவர் நேரத்திற்கு வர முடியவில்லை.

நாடகத்தில், சம்பாதேவி என்று பெயர். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்தார். முதல் காட்சி முடிந்த கொஞ்ச நேரத்தில், ஒரிஜினலாக நடிக்க வேண்டியவர் மேடைக்கு வந்து விட்டார்.

சில வினாடிகள் யோசித்த

எஸ்.வி.சேகர், சட்டென, 'நீ, சம்பாதேவியோட தங்கை கும்பாதேவி தானே...' என்றதும், ரசிகர்களிடம் பலத்த கரகோஷம்.

இப்படி சந்தோஷம் மட்டுமே அவர்களுக்கு சொந்தம் என்று, நினைக்க வேண்டாம். இப்போதும், நினைத்து நினைத்து, வருந்தும் சோகமும், அவர்கள் குழுவிற்கு உண்டு. அது, அடுத்த வாரம்.

புலிகள் மிரட்டல் கடிதம்?

ஒருமுறை, அமெரிக்காவில் நாடகம் போடத் தயராகும்போது, சென்னையில் உள்ள நாரதகான சபா செயலர் மூலம், எஸ்.வி.சேகருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'அமெரிக்காவில், எஸ்.வி.சேகர் நாடகம் போட வந்தால், அந்த மேடையை குண்டு வைத்து தகர்ப்போம்...' என்று, விடுதலைப் புலிகளின் பெயரில்

எழுதப்பட்டு இருந்தது.

திட்டமிட்டபடி அமெரிக்கா சென்றார்; நாடகம் போட்டார். ஒவ்வொரு மேடையிலும் இந்த

கடிதத்தை படித்தும் காட்டினார். இது, புலிகளின் கடிதமாக இருக்காது. அவர்கள் இப்படி எல்லாம் எழுத மாட்டார்கள் என்றும் சொன்னார்.

தொடரும்

எல். முருகராஜ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us