PUBLISHED ON : மே 23, 2021

அப்பா விருப்பப்படி, உயர் படிப்பு படித்தாரா அல்லது எஸ்.வி.சேகரின் விருப்பப்படி சினிமா போட்டோகிராபராக மாறினாரா... இதைத் தெரிந்து கொள்ளும் முன், அவரது பள்ளி வாழ்க்கை அனுபவத்தை தெரிந்து கொள்வோம்.
எப்போதுமே சராசரி மாணவராக தான் இருந்தார், வளர்ந்தார், எஸ்.வி.சேகர். தன்னையும், தன்னைச்சுற்றி இருப்பவர்களையும் எப்போதும் கலகலப்பாக வைத்துக் கொள்வதில் படு சமர்த்தர்.
தஞ்சை கொங்கணேஸ்வரன் பள்ளியில், ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த முதல் நாள், வகுப்பு நடந்து கொண்டிருந்தது.
'எப்படிடா இருக்கு வகுப்பு...' என்று கேட்டார், தலைமையாசிரியர்.
'ரொம்ப இருட்டா இருக்கு...' என்று, பதில் தந்திருக்கிறார்.
'அப்ப இந்த வகுப்பை விட்டுட்டு, அந்த வகுப்பில் போய் உட்காரு...' என்று சொல்லி விட்டார், தலைமையாசிரியர். அது, இரண்டாம் வகுப்பாக, ஒரே நாளில், 'டபுள் புரமோஷன்!'
இவருக்கு இந்த சலுகை கிடைக்க காரணம், எஸ்.வி.சேகர் தாத்தா, பஞ்சாபகேச அய்யர் தான். பள்ளியின் தலைமையாசிரியர்.
அப்பாவின் சென்னை மாறுதலுக்கு பிறகு, சேகரும் சென்னைவாசி ஆனார்.
வீட்டுப்பக்கத்தில் உள்ள கடைகளில், நோட்டு, புத்தகம், பென்சில், நொறுக்குத் தீனி என்று, எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். குறிப்பேடில் குறித்து வைத்து விட்டால், அதை சரிபார்த்து பணம் கொடுத்து விடுவார், அவரது அப்பா. ஆனால், பிள்ளைகள் கையில் காசைக் கொடுக்க மாட்டார். சிறுவயதில், காசு புழங்க ஆரம்பிப்பது அவ்வளவு நல்லதல்ல என்பது, அவரது கொள்கை.
இந்நிலையில், பள்ளி வாசலில் ஐஸ் விற்ற பாட்டியிடம், எல்லாரும் ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். கையில் காசு இல்லாத காரணத்தால், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார், எஸ்.வி.சேகர்.
இதைக் கவனித்த பாட்டி, அவரை அருகில் அழைத்து, 'நீயும் ஒரு ஐஸ் சாப்பிடு ராசா...' என்றார்.
'என்கிட்ட காசு இல்ல பாட்டி...' என்றார்.
'பராவாயில்லை.... நாளைக்கு வந்து, 10 பைசா கொடு...' என்று சொல்லி, ஐசை கையில் திணித்தார்.
ஐஸ் சாப்பிட்டு, வீட்டிற்கு வந்தவருக்கு, தொண்டையில் வலி ஏற்பட்டு, 'டைபாய்டு' காய்ச்சல் வந்து விட்டது. ஒரு மாதம் பள்ளிக்கூடம் பக்கமே போக விடாமல், படுக்க வைத்து விட்டது.
ஒரு மாதம் கழித்து பள்ளிக்கூடம் போனவரை, வாசலில் நின்றிருந்த ஐஸ் விற்கும் பாட்டி, கழுத்தில் துண்டை போட்டு இழுக்காத குறையாக, தன் பக்கம் இழுத்து, 'எங்கே ஐஸ் வாங்கி சாப்பிட்ட காசு...' என்று, கேட்டார்.
'ஐயோ... மறந்து போச்சு பாட்டி. நாளைக்கு தர்றேன்...' என்றார்.
'நாளைக்கு ஒரு ரூபாய் கொண்டு வா...' என்றார், பாட்டி.
பத்து பைசா, ரன் வட்டி, மீட்டர் வட்டியை விட மோசமாக வளர்ந்து, ஒரு ரூபாயாக நின்றது. எதுவும் பேச முடியாமல், ஒரு ரூபாயை எடுத்து வந்து தருவதாக சொல்லி, வந்து விட்டார்.
அந்த ஒரு ரூபாயை திரட்ட, அவர் போட்ட ஐடியா தான் சூப்பர்.
அது என்ன?
இவரைப் பற்றி அவர்
நான் சகலகலா வல்லவன் என்றால், எஸ்.வி.சேகர், சகல கால வல்லவன். எங்கும் எதிலும் மாறாதிருக்கும் மனத் தெம்பும், திறமையும் அவருக்கு உள்ளது. நாடகத் துறையில் செலுத்திய கவனத்தை, சினிமாவில் செலுத்தாதது, பல நடிகர்கள் கைவசப்படுத்த அவர் விட்டுக் கொடுத்த இடமானது. யார் கண்டது, நான் வழக்கம்போல வியக்கும்படி, ஒருநாள் இவர் சுவாமி சேகரானந்தாவாக வந்தாலும், ஆச்சரியப்பட மாட்டேன்.
- நடிகர் கமலஹாசன்
— தொடரும்
எல். முருகராஜ்
