தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

'கொரோனா' பரவல் இரண்டாம் அலையின் தீவிர தாக்கத்திலிருந்து மீண்டெழ, அரசும், மருத்துவத் துறையும் போராடி வருகின்றன. கடந்த ஆண்டு போலவே, இப்போதும், அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவை பிரிவுகளில் தபால் துறையும் இடம் பெற்று, சேவையாற்றி வருகிறது.

இந்நிலையில், அன்று காலை, அலுவலக தபால்களை வாங்குவதற்காக, தபால் அலுவலகம் சென்றிருந்தேன். சிகப்பு கலர் மெயில் வண்டி, அப்போது தான் அலுவலகத்தினுள் நுழைந்தது. அவர்கள் மூட்டைகளை இறக்கி, தபால் பெட்டி எண் குறிப்பிட்டு வரும் கடிதங்களை பிரித்துக் கொடுக்க சற்று நேரம் ஆகும் என்பதால், சைக்கிளை ஓரம் கட்டி, கோணிப் பையை கக்கத்தில் இடுக்கியபடி நின்றிருந்தேன்.

அந்த காலை நேரத்திலும், பலர், தபால் அலுவலகத்தினுள் போவதும், வருவதுமாக, 'பிசி'யாக இருந்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, இவர்கள் எதற்காக இப்படி அல்லாடுகின்றனர் என்று யோசித்தேன்.

அப்போது, பெரியவர் ஒருவர், 'இந்த ஜனங்களைப் புரிந்து கொள்ளவே முடியல...' என்று அலுத்தபடி, என் அருகில் வந்து நின்றார்.

அவரை ஆசுவாசப்படுத்தி, 'என்ன விஷயம்...' என்று கேட்டேன்.

என் சைக்கிளையும், கோணிப் பையையும் பார்த்ததுமே, தபால் எடுக்க வந்திருக்கிறேன் என்று அறிந்து, 'மெயில் வண்டி இப்பத்தான் வந்திருக்கு... பிரித்துக் கொடுப்பர்...' என்றவர் தொடர்ந்தார்:

நான், சென்னை - கிளை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து, சில மாதங்களுக்கு முன்தான் பணி ஓய்வு பெற்றேன். போன வருஷம் ஊரடங்கின்போது, தினமும், நானும், இன்னும் சிலரும் அலுவலகத்துக்கு சென்று, தொய்வு ஏற்படாமல், முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினோம்.

இப்போதும் அதே நிலை ஏற்பட்டிருப்பதால், என் வீட்டிற்கு அருகில் இருக்கும் இந்த அலுவலகத்துக்கு வந்து, ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்க வந்தேன். ஆனா, இந்த ஜனங்க படுத்தற பாடு இருக்கே, அப்பப்பா...

இந்திய தபால் துறை, இந்த, 'கொரோனா' காலத்திலும் அற்புதமாகச் செயலாற்றி வருகிறது. ஆனால், நம் மக்கள், இந்தத் துறை ஊழியர்களைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

'என் தபால் ஏன் லேட்டு?' என்று, போஸ்ட்மேனைக் கலாய்ப்பதில் துவங்குகிறது, இந்தப் படுத்தல் லிஸ்ட். பஸ், ரயில் ஓடாத இந்த நேரத்திலும், தன் மெயில் வேன்கள் மூலம் சர்வீசை தொடரும் தபால் துறையை மட்டும், ஏன் இப்படிக் கேட்க வேண்டும்?

கேட்டால், 'ஏன், சம்பளம் வாங்கல... செய்யட்டுமே...' என்று குதர்க்கம்.

உலகமே இயங்காமல் நின்றாலும், தபால் சேவை துளி பிசகாமல் நடந்தாக வேண்டும், இவர்களுக்கு. அங்கு, சட்டம் பேசுபவர்கள், வேறு எந்த மாநில - மத்திய அரசு அலுவலகத்திலும் வாயைத் திறக்க மாட்டார்கள். இது, முதல் வகை.

'சார், நான் அமெரிக்காவுக்கு அவசரமா ஒரு பார்சல் அனுப்பணும்... ஆஸ்திரேலியாவுக்கு குழம்புப் பொடி அனுப்பணும்... அண்டார்டிக்காவுக்கு கபசுர குடிநீர் அனுப்பணும்...' என, இன்டர்நேஷனல் என்ன, லோக்கல் விமானமே பறக்கவில்லை என தெரிந்தும், தினமும் பத்திரிகை படிக்கிற அறிவுஜீவிகள் சிலர், கவுன்டர் அருகே நின்று, கையை உதறுவர்.

'உங்கப்பாவா ப்ளைட் விடறாரு?' என, எதிர் கேள்வி கேட்காமல், பொறுமையாக பல்லைக் கடித்து, பதில் சொல்வர், ஊழியர்கள். வீட்டில் ஊறப் போட்ட பாஸ்புக், கிஸான் விகாஸ் பத்திரங்களுடன், வரிசையில் நின்று, ('லாக் டவுனில்' வீட்டில் போரடித்ததால், மனைவியின் பிடுங்கலில் இருந்து தப்ப, வெளியே சுற்ற, போலீசுக்கு காரணம் காட்ட) கவுன்ட்டரை முற்றுகையிடுவது...

அவர்களுக்கு, 'ஓர்க் ப்ரம் ஹோம், 50 சதவீத அட்டெண்டன்ஸ்' என, எல்லா சலுகையும் வேண்டும். ஆனால், தபால் அலுவலகத்தில் எல்லா கவுன்ட்டரும், எப்போதும், கூடுதல் நேரமும் வேலை பார்க்க வேண்டும். இவர்கள், இரண்டாவது வகை.

மூன்றாவது வகையினர், 'நான் யாருன்னு தெரியுமா...' எனும், உதார் விடுபவர்.

'நான் சீனியர் சிட்டிசன்; வரிசையில் நிற்க மாட்டேன்...' என்று, போஸ்ட்மாஸ்டர் மேஜை அருகில் நின்று, அவர் காலையில் சாப்பிட்ட உப்புமாவை அரை மணி நேரத்தில் செரிக்க வைக்கும் வல்லமை படைத்தவர்கள்.

முன்னாள் ஊழியர்கள், அனைத்துத் துறை பென்ஷனர்கள், வீட்டில் கணினித் துறையில் வேலை பார்க்கும் பிள்ளை, பெண் இருக்க, பேத்தி - பேரனுக்கு, 'ஆன்லைனில்' பணம் கட்டாமல், 'இதோ தான இருக்கு போஸ்ட் ஆபிஸ், ஒரு நிமிஷத்துல வரேன்...' என்று, வரிசையில் நின்று, பி.பி.எப்., செல்வமகள் திட்டத்தில் பணம் கட்டும் தாத்தா - பாட்டிகளும் இதில் அடக்கம்.

'ஆன்லைன் சர்வீஸ்' மற்றும் ஏ.டி.எம்., கார்டு உபயோகிக்க மாட்டேன் என்று, அடம் பிடிப்பவர்களும் உண்டு. இங்கு வந்து, வரிசையில் நின்று, 'பாஸ்புக்'கில், தேதி முத்திரை குத்தினால் தான், துாக்கம் வரும் பலருக்கு.

அடுத்ததாக, வரிசையில் நின்றிருக்கையில், 'ஏன், வரிசை நகரலே... அந்தக் காலத்துல நாங்கல்லாம் எப்படி வேலை செய்வோம் தெரியுமா... இப்ப, இவங்களுக்கு என்ன வேலை இருக்கு... வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யிறதுக்கு வலிக்கறது. கஷ்டம்னா, 'ரிசைன்' பண்ணிட்டுப் போக வேண்டிய தானே...' என்று, கரித்துக் கொட்டி, சூழ்நிலையைக் கெடுப்பவர்கள், நான்காம் வகை.

இவர்களுக்கு, 'பேங்க், போஸ்ட் ஆபிஸ், இ.பி., ஆபிஸ், இன்கம்டேக்ஸ்' என, எந்த சேவையிலும், எப்போதும் திருப்தி இருக்காது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சட்ட திட்டங்களுடன் துவங்கிய தபால் அலவலகம், இன்று, ஏகப்பட்ட சட்டத் திருத்தங்களுடன், ஒருங்கிணைந்த வங்கிகளுடன் சேர்ந்து, பலதரப்பட்ட சர்வீஸ்களை வழங்கி வருகிறது. இனியும் வரும்; வளரும்.

இன்று, 'கொரோனா' தடுப்பு மாத்திரை மற்றும் மருந்துகளை, கள்ளச்சந்தை உருவாகாமல் அரசு விற்க நினைத்தால், தபால் அலுவலகம் தான், முதல், 'சாய்ஸ்!'

அதனால், இந்த நெருக்கடி காலத்தில், அங்கு பணிபுரிபவர்களுக்கு, புன்னகையைக் கொடுங்கள். கண்காணிப்பு கேமராவோ, ஒழுங்காக இடைவெளியைப் பின்பற்றி அனுப்ப, 'வாட்ச்மேன்' இல்லாத தைரியத்தில், கூட்டமாக கும்மியடித்து, அவர்களுக்கு, 'கொரோனா'வைக் கொடுக்காதீர்கள்.

தபால் துறை ஊழியர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது; அவர்களுக்கு நோய் தொற்று பரவாது என்பது என்ன நிச்சயம். மக்கள் புரிந்து கொள்வரா...

- இவ்வாறு கூறி முடித்தார்.

அவர் கூற்றில் இருந்த நியாயத்தை அசைப்போட்டபடி இருக்க, உள்ளே இருந்து, 'தபால் ரெடி... வாங்கிக்க வரலாம்...' என்று, வழக்கமான குரல் கேட்க, ஓடோடி சென்று, கோணிப் பையில் அள்ளிப் போட்டு, அலுவலகம் வந்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us