/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - என் வீடு தேடி வந்த ரஜினி! (17)
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - என் வீடு தேடி வந்த ரஜினி! (17)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - என் வீடு தேடி வந்த ரஜினி! (17)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள் - என் வீடு தேடி வந்த ரஜினி! (17)
PUBLISHED ON : ஏப் 27, 2025

சதுரங்கம் படப்பிடிப்பில் இருந்த ரஜினியை, பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து, பேட்டி எடுக்க காத்திருந்தேன்.
அவர் பார்வையில் படும்படி, நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டேன்.
'டேக்'குகளுக்கு இடையே, என்னை பார்த்த ரஜினி, 'படப்பிடிப்பிற்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத இவன், நம்மையே பார்த்துக் கொண்டிருக்கிறானே...' என, எண்ணியிருக்க வேண்டும்.
அடுத்த காட்சிக்கு தயாராகும் முன், என்னை நோக்கி வந்தார், ரஜினி.
'எனக்காகவா காத்திருக்கிறீர்கள்?'
'ஆமாம்...' என்ற என் பதிலுக்கு, பார்வையில் வியப்புக்குறி காட்டினார்.
'நான், லேனா தமிழ்வாணன். 'கல்கண்டு' இதழிலிருந்து வந்திருக்கிறேன். உங்கள் பேட்டி வேண்டும்...' என்றேன்.
'கல்கண்டு?' என்றவரின் முகத்தில், வினாக்குறி. 'கல்கண்டு' அவர் கேள்விப்பட்டிராத பெயராக இருந்திருக்க வேண்டும்.
அவரை பேட்டிக்கு அணுகிய ஆரம்ப பத்திரிகையாளர்களுள், நானும் ஒருவன் என நினைக்கிறேன்.
'படப்பிடிப்பு முடிய நேரமாகும். மாலையோ, நாளையோ வாங்களேன்...' கனிவாகவே பேசினார்.
'பரவாயில்லை. காத்திருக்கிறேன்...' என்றேன்.
இயக்குனர் துரை, 'பேக்கப்' சொல்ல, 'மேக்கப்' கலைத்து, நேரே என்னிடம் வந்தார்.
இந்த சந்திப்பு நடந்து, 47 ஆண்டுகள் ஓடிவிட்ட நிலையில், அவர் பேட்டியில் சொன்ன பதில்கள் அனைத்தும், நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.
ஒன்று மட்டும் தான், உங்களுக்கு புதிதாக இருக்கும் என நினைக்கிறேன்.
'கருப்பாக இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்...' என்றார்.
அந்த கால கதாநாயகர்களின் தோற்ற(ம்) இலக்கணங்கள், மிக உயர்ந்தவை. அப்படிப்பட்ட காலகட்டத்தில் நுழைந்த இவருக்கு, இப்படி ஒரு தன்னம்பிக்கையா!
இதையே பேட்டி கட்டுரையின் தலைப்பாக்கி, அட்டையிலும் வெளியிட்டேன். சம்பந்தப்பட்டவர்களுக்கு, பேட்டியை படித்து காட்டுவது, என் பாணி. முதலில் வேண்டாம் என்றவர், 'சரி படிங்க...' என்றார்.
தொலைபேசியில் தான் படித்து காண்பித்தேன்.
'நல்லா வந்திருக்கு...' என்றார்.
இதன் பின், சித்ரா லட்சுமணன் ஏற்பாட்டில், 'பிலிமாலயா' இதழுக்காகவும், ரஜினியை அவரது பெட்ரூமிலேயே பேட்டி எடுத்தேன்.
கடந்த, 1981ல், ரஜினி - லதா திருமணம். இதே ஆண்டில் தான், என் இளவல், ரவி தமிழ்வாணனின் திருமணம்.
இந்த ஒற்றுமையை கொண்டாடும் வகையில், இந்த இரு ஜோடிகளுக்கும், சைதாப்பேட்டை இல்லத்தில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார், தொழிலதிபர் வி.ஜி.பன்னீர்தாஸ்.
ரஜினி - லதா, ரவி - வள்ளி ஜோடிக்கு அளிக்கப்பட்ட விருந்தில், அடியேனும் ஆஜர்.
மாலை முதல் இரவு உணவு வரை, ரஜினியோடு சாவகாசமாக பேசிக் கொண்டிருக்க கிடைத்த, நல்ல வாய்ப்பு அது.
ரஜினி, தன் புகழ், செல்வாக்கு, செல்வம் எல்லாவற்றையுமே, தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் இருக்கிறாரே, இந்த கலையை திரையுலகில் எவரிடமும் நான் கண்டதில்லை.
திரையுலகிற்கு தம் குடும்ப உறுப்பினர்களை அனுப்பி வைத்த எவரும், அவர்களை, 'அப்படியே' திரும்ப பெற்ற வரலாறு, மிகக் குறைவு. இழந்திருக்கின்றனர் என்பதே அதிகம். தடுக்கி விழுந்தால் மாபெரும் பள்ளங்கள், அவர்களை விழுங்கத் தயாராக இருந்தது தான் காரணம்.
ஏன் தான் இவர்களை நடிக்கவும், இயக்கவும் அனுப்பி வைத்தோமோ என, எண்ணி எண்ணி வருந்தாத திரைக் குடும்பங்களே இல்லை எனலாம்.
பணம், புகழ் ஏராளமாக கிடைத்தும், பெருமைப்பட முடியாதபடி, இவர்கள் செய்த காரியங்கள் அமைந்து விட்டன.
ரஜினியின் ஆரம்ப கால அட்டகாசங்கள் பற்றி, நான் சொல்ல வேண்டியது இல்லை. அவரே மேடையில் வெளிப்படையாக, பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். எப்படி, எப்படியோ இருந்தவர் இன்று, நல்ல குடும்ப தலைவராக திகழ்வதும், ஆகாத பழக்கங்களை எல்லாம் கைவிட்டு விட்டதும், திரையுலகில் எந்த நாயகன் வாழ்விலும் இதுவரை நடந்திராத அதிசயம் என்பேன்.
நடிகர்கள் சிலரை, நீங்கள் கொண்டிருக்கும் அபிமானம் காரணமாக சந்திக்க விழைந்து, அது சாத்தியப்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம். சந்தித்து விட்டு வந்தால், அவர்களைப் பற்றிய, 'இமேஜ்' உங்களுக்குள் பெரும்பாலும், 'டேமேஜ்' தான் ஆகியிருக்கும்.
'போயும், போயும் இந்தாளை போய் பார்க்க வந்தோமே...' என்ற உணர்வோடு தான், நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும்.
ரஜினியை சந்தித்து விட்டு திரும்புபவர்களின் உணர்வு, இப்படி இராது. மாறாக, உங்களுக்குள் பன்மடங்கு உயர்ந்து நிற்பார்.
'இந்த வயதில், இவர் மேலும், மேலும் படங்களை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டுமா...' என, என்னிடம் கேட்பவர்கள் உண்டு. இவரால் திரையுலகிலும், அதற்கு அப்பாற்பட்டும் எத்தனை ஆயிரம் பேருக்கு பிழைப்பு நடக்கிறது தெரியுமா என்பதே, இவர்களுக்கான என் பதிலாக இருக்கும்.
கடந்த, 1981க்கு பின், ரஜினியுடன் எத்தனை, எத்தனை சந்திப்புகள்! சொல்லிக் கட்டுப்படி ஆகாது.
இவற்றுள், சம்பவங்களாக சிலவற்றை மட்டும் பகிர்ந்து கொள்ள விருப்பம். என் மகன், அரசு ராமநாதனின் திருமண வரவேற்பிற்கு ரஜினியை அழைத்து, என் வட்டாரத்தினரிடம் கொஞ்சம், 'கெத்து' காட்ட விரும்பினேன்.
ரஜினி வீட்டு ஊழியர்கள் போல், வேறு எந்த நடிகர் வீட்டையும் ஒப்பிட முடியாது. ரஜினி வீட்டில், போனை எடுத்து பேசுபவர்கள், மிக பொறுப்பாக பதில் சொல்வர். ரஜினிக்கும் சரிவர தகவல் போகும். அவரது பதிலையும், நமக்கு மறக்காமல் சொல்வர். இந்த ஒழுங்கையும், நேர்த்தியையும் ஒவ்வொரு நடிகரும் கற்றுக் கொள்ளவும், பின்பற்றவும் வேண்டும்.
அழைப்பிதழ் கொடுத்த போதே, 'அன்று, பெங்களூரில் இருக்கேனே, லேனா சார்...' என, ஏக்கமாக சொன்னார்.
திருமண வரவேற்பு முடிந்த மறுநாள் ரஜினி, பெங்களூரிலிருந்து என்னுடன் பேசினார்.
'ரஜினி பேசுறேன்...'
'இப்படி கூட இன்ப அதிர்ச்சி குடுப்பீங்களா, சார்...'
'மகன், மருமகள் எப்ப அமெரிக்கா போறாங்க?'
'ஒரு வாரம் இருப்பாங்க, சார்...'
'அப்படியா, சரி. அவங்களை நான் பார்க்கணும். வாழ்த்தணும். உங்க வீட்டுக்கு நாளைக்கு வரட்டுமா?'
'நிஜ... ம்மா... வா... சொ... ல்றீங்க?' என திணறினேன்.
எவர் வீட்டிற்கும் எளிதில் செல்லாத ரஜினி, என் வீடு தேடி வந்தார் என சொன்னால், நம்புவீர்களா?
—தொடரும்.
- லேனா தமிழ்வாணன்