
பா - கே
பீச் மீட்டிங். நண்பர்கள் அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம்.
ஒரு காலத்தில், நாடக நடிகராக, பிரபல நாடக கலைஞர்களின் நாடகங்களில் நடித்தவர் அவர். ஓரிரு பழைய படத்திலும் தலை காட்டியுள்ளார்.
தற்சமயம் புறநகர் பகுதி ஒன்றில் சொந்த வீட்டில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது மூப்பு காரணமாக, எப்பவாவது எங்களை சந்திக்க, தன் நண்பரான குப்பண்ணாவுடன் வருவதுண்டு.
அன்று வந்திருந்தார்.
பொதுவாக, முதியவர்களிடம், பழைய விஷயங்களையோ, அவர்களது அனுபவங்களையோ கேட்டால், மிகவும் ஆர்வத்துடன் பேசுவரே! இவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல!
அவரிடம், நாடகங்கள் பற்றி கேட்க, அபிநயத்தோடு சொல்ல ஆரம்பித்தார்:
தமிழ் நாடக கலையின் முன்னோடி என குறிப்பிடப்படும், சங்கரதாஸ் சுவாமிகள், சிறப்பான பல நாடகங்களை எழுதியவர்; சிறந்த நடிகரும் கூட. இயல்பாகவே உயரமும், திடகாத்திரமான உருவமும், கறுத்த நிறமும் கொண்டவர். அத்துடன் கணீர் குரலுக்கும் சொந்தக்காரர். 'சத்தியவான் - சாவித்திரி' நாடகத்தில், எமன் வேடத்தில் அட்டகாசமாக பாடியபடி மேடைக்கு வர, நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கர்ப்பவதிக்கு, கரு கலைந்துவிட்டது. பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
அன்று முதல், 'சத்தியவான் - சாவித்திரி' நாடகத்தில், சுவாமிகள், எமன் வேடத்தில் வரும் காட்சிக்கு முன், 'இப்போது சுவாமிகள் எமன் வேடத்தில் வரப் போகிறார். பயந்த சுபாவம் கொண்டவர்களும், கர்ப்பவதிகளும் சபையில் இருந்தால், வெளியில் சென்றுவிடலாம்...' என்று அறிவிப்பர். அதன்படி குறிப்பிட்டவர்கள் வெளியேறிய பிறகே, மீண்டும் நாடகம் துவங்கும்.
அன்றைய நாடகங்களில் வேறு சில வேடிக்கைகளும் உண்டு.
'பிரகலாதா' நாடகத்தில், நரசிம்ம வேடத்தில், நடிக்கும் பலருக்கு திடீரென ஆவேசம் வந்து விடும். உண்மையாகவே, இரண்யன் வேடமேற்று இருப்பவரை குத்தி கிழிக்க முனைந்து விடுவர். எனவே, அவரை சுற்றி, 10 பேர் நின்று, உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருப்பர். உணர்ச்சி வேகத்தில் பாயும்போது, 'கப்'பென்று பிடித்துக் கொள்வர்.
இதேபோல், காளி வேடம் போடுபவர்களை கட்டுப்படுத்த முடியாமல், சங்கிலியால் கட்டி, மறுமுனையை, திரைமறைவில் ஒருவர் பிடித்துக் கொள்வார். ஆவேசம் வருவது போல் இருந்தால், சங்கிலியைப் பிடித்து இழுத்து, கட்டுப்படுத்துவார்.
சுத்துப்பட்டு, 10 கிராமங்களில் மதிக்கத்தக்க பண்ணையார் ஒருவர், என்.எஸ்.கிருஷ்ணனின் தீவிர ரசிகர். அவர் தான், தன் கிராமத்தில், என்.எஸ்.கிருஷ்ணனின், 'நல்லதம்பி' நாடகம் நடைபெற வேண்டும் என்று விரும்பி ஏற்பாடு செய்திருந்தார்.
என்.எஸ்.கிருஷ்ணனின், 'நல்லதம்பி' நாடகம், ஆரம்பம் முதல் நிறைவு வரை நகைச்சுவை பிரதானமாக அமைந்த நாடகம்.
அப்படிப்பட்ட அற்புதமான நகைச்சுவை நாடகம் நடந்த போது, அதைக் காண திரண்டிருந்த இரண்டாயிரம் பேர் கொண்ட மக்கள் கூட்டத்தில், ஒருவர் கூட சிரிக்கவில்லை.
நாடகம் பார்த்த ஒருவர் கூட சிரிக்காதது, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஆச்சரியமளித்தது.
நாடகத்தில், ஏழு காட்சிகள் முடிந்து விட்டன. இவர்களை எப்படியாவது சிரிக்க வைத்துவிட வேண்டும் என்று, மேடையில் சும்மாவே ஒரு குட்டிக்கரணம் போட்டார், என்.எஸ்.கிருஷ்ணன். ஒருவர் மட்டும், 'களுக்' என்று சிரித்து விட்டார். மறுகணம், கூட்டத்தில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர், கோபத்தோடு எழுந்தார்.
சிரித்தவனை பார்த்து, 'ஏலே... எதுக்காக சிரிக்கே? இங்கிட்டு இருக்கிற அத்தனை பேரும் சிரிக்காம பாக்குறோம்ல்லே...' என்று சத்தம் போட்டார்.
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஆச்சரியம். 'ஒரே ஒருவன் சிரித்தான். அதற்கும் இந்த பெரியவர் கோபித்துக் கொள்கிறாரே... பண்ணையாரும் அதை ஆமோதிப்பது போல் அமைதியாக இருக்கிறாரே...' என்று நினைத்தார்.
அடுத்து, அந்த பெரியவர் கூறியது தான், 'ஹை-லைட்!'
'ஏலே... அவன் என்ன நகைச்சுவையா பண்றான்? புத்தி சொல்றான்ல... நாம எப்படி நடந்துக்கணும்ன்னு கத்துக் கொடுக்கிறான்யா. அதை பார்த்து புத்திசாலித்தனமா பொழைச்சிக்குவியா? அதை விட்டுட்டு, கூறுக்கெட்டுத்தனமா சிரிக்கியே...' என்றார்.
என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கண்கள் கலங்கி விட்டன. மக்கள் முன் வந்து நின்று, 'என்னை எல்லாரும் மன்னிக்கணும். ரசிக்க தெரியாத ஜனங்களுக்கு முன் நாடகம் போடும்படி ஆயிடுச்சேன்னு தப்பா நினைச்சிட்டேன். நீங்க என்னை வெறும் நடிகரா பார்க்கல; புத்தி சொல்ற மகானா பார்க்கிறீங்கன்னு நினைக்கிற போது, என்ன சொல்றதுன்னு தெரியல...' என்று சொல்லி, விழுந்து வணங்கினார்.
அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்தது, சக்தி நாடக சபா. இந்த நாடக சபா நடத்திய, 'கவியின் கனவு' என்ற நாடகம் எஸ்.டி.சுந்தரம் என்பவரால் எழுதப்பட்டு, மக்களின் அமோக ஆதரவு பெற்றிருந்தது. ஒரு ஊரில் அந்த நாடகம் நடந்த போது, அதை பார்ப்பதற்காக, ஒரு குறிப்பிட்ட ரயிலில் கூட்டம் கூட்டமாக செல்வர். அதனால், அந்த ரயில், 'கவியின் கனவு ரயில்' என்றே அழைக்கப்பட்டது.
பகுத்தறிவு பிரசார நாடகங்கள் நடத்துவதில், தனக்கென தனி முத்திரை பதித்தவர், எம்.ஆர்.ராதா. நாடகங்களில் பல புதுமைகளையும் புகுத்தினார்.
'பதி பக்தி' என்ற நாடகத்தில், மோட்டார் சைக்கிளில் வருவது போல் ஒரு காட்சி. நாடக மேடையில், வண்டி ஓட்டி வருவது சாத்தியமில்லை. ஆனால், நிஜ மோட்டார் சைக்கிளில் மேடைக்கு வருவார், எம்.ஆர்.ராதா. மக்கள் மேல் பாய்ந்து விடுவது போல மேடையின் விளிம்பு வரை வேகமாக ஓட்டி வந்து, லாவகமாக, 'பிரேக்' பிடித்து, அரை வட்டமடித்து நிற்பார். கைத்தட்டலோடு, விசிலும் பறக்கும்.
'இறந்த காதல்' நாடகத்தில், ஜெகதிஷ் என்ற வேடத்தில் நடித்தார், எம்.ஆர்.ராதா. பெரிதும் வரவேற்பு பெற்ற நாடகம் அது. 'எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனை பார்க்க தவறாதீர்கள்...' என்று புதுமையாக விளம்பரப்படுத்தபட்டது.
நாடகங்கள் கொடிக்கட்டி பறந்த அந்த காலத்தில், இப்படி எத்தனையோ சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன...' என்று கூறி முடித்தார், அந்த பெரியவர்.
அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, 'பகபக' வென சிரித்து, நடிகர்களும், மக்கள் ரசனைக்கு ஈடு கொடுத்து நடிச்சிருக்காங்க, மக்களும் நல்லா, 'என்ஜாய்' பண்ணி ரசித்திருக்காங்கபா.
'நீர் சொன்னதைக் கேட்டு, ரொம்ப நாளைக்கு பிறகு, மனசு லேசான மாதிரி இருக்கு...' என்று, வெகுவாக பாராட்டினார், மாமா.