
மு.சுப்புலட்சுமி, மதுரை: அந்துமணி என்றாலே நினைவுக்கு வருவது, பயணக்கட்டுரைகள் தான். இப்போது அவற்றை மறந்தது ஏனோ...
பொறுப்பாசிரியர் இப்போதெல்லாம் வெளியூருக்கும் அனுப்புவதில்லை; வெளிநாட்டுக்கும் அனுப்புவதில்லை. ஆபீசிலேயே அமர்ந்து வேலை செய்ய சொல்கிறார்.
இந்த பதிலை பொறுப்பாசிரியர் வெளியிடுவாரா என்றும் தெரியவில்லை!
********
*பெ.பொன்ராஜபாண்டி, மதுரை: 'தமிழகத்தில் இனி தமிழில் மட்டுமே அரசாணைகளில் கையெழுத்திட வேண்டும்...' என, தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பால், தமிழ் வளருமா?
தமிழ் வளராது; ஆனால், அதிகாரிகளுக்கு தமிழில் எழுத, நல்ல பயிற்சியாக அமையும்!
********
*வெ.மு.ஷா.நவ்ஷாத் முகம்மது, மதுரை: யாரையும் இகழாமல், தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாதா?
முடியும்! முன்னாள் முதல்வர் கருணாநிதியை, பேச்சுக்காக ஒன்றிரண்டு வாக்கியங்களில் வசை பாடிவிட்டு, முழுக்க முழுக்க இந்த மாநிலத்துக்கு தான் செய்த சாதனைகளை, மேடைதோறும் சொல்லி பிரசாரம் செய்து வெற்றி பெற்றவர், அ.தி.மு.க., ஜெயலலிதா!
*********
ரா.ராஜ்மோகன், திண்டிவனம்: 'தேர்தலில் போட்டியிட, வலிமையான, நேர்த்தியான, தேவையான கூட்டணியை அமைப்போம்...' எனக் கூறும், அரசியல் தலைவர்கள், 'தனித்துப் போட்டியிடுவோம்...' எனக் கூற, மறுப்பது ஏன்?
ஓட்டு பெற முடியாதே! நம் மாநிலத்தின் இரு பெரிய கட்சிகளுமே, தனித்துப் போட்டியிட்டால், வெற்றியே பெற முடியாது என்ற நிலை தான் உள்ளது!
இந்த வகையில், 'வெற்றியே கிடைக்காவிட்டாலும், என் கட்சிக்கான ஓட்டு சதவீதத்தைப் பார்ப்பதற்காகவாவது தனித்துப் போட்டி...' என, ஒவ்வொரு முறையும் களமிறங்கும் சீமானை பாராட்டலாம்!
********
மு.நாகூர், சுந்தரமுடையான், ராமநாதபுரம்: ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது பற்றி...
மலைப் பகுதிகளில் மட்டுமல்ல; கடற்கரை உட்பட எந்த இடத்திலுமே, எவ்வித பிளாஸ்டிக்கையும் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பதே, அனைத்து உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது!
**********
டி.ஜெயசிங், கோவை: பெரிய பெரிய நிறுவனங்கள், 'தினமலர்' நாளிதழில், முழு பக்க, இரு பக்க விளம்பரமாக கொடுத்துக் கொண்டே இருக்க, என்ன காரணம்?
நம் நாளிதழின் விற்பனை தான் காரணம்! ஏராளமான வாசகர்கள், நம் நாளிதழில் வெளியாகும் விளம்பரங்களைப் படித்து, விளம்பரதாரர்களை அணுகுவதால், அவர்களுக்கு வியாபாரம் பெருகுகிறது. இதனாலேயே, நம் நாளிதழில் விளம்பரம் செய்ய விரும்புகின்றனர், விளம்பரதாரர்கள்!
************
ஆர்.வி.ஜெயதேவி, லாஸ்பேட்டை, புதுச்சேரி: எங்கள் வீட்டு பூனைக்குட்டிக்கு, அந்துமணி என, செல்லமாக பெயர் வைத்திருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சந்தோஷப்படுகிறேன்!
************