sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவேன்! (8)

/

விண்ணையும் தொடுவேன்! (8)

விண்ணையும் தொடுவேன்! (8)

விண்ணையும் தொடுவேன்! (8)


PUBLISHED ON : ஏப் 27, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதைச் சுருக்கம்: திருவண்ணாமலை கலெக்டரான புகழேந்தி, கயல்விழி பற்றி தகவல் கிடைத்ததும், பல கட்ட நடவடிக்கைகளை எடுத்தான். கயல்விழிக்கு கொலை பாதகம் செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என, உறுதி எடுத்தான். இது, அவனது மனைவி, சுபாங்கிக்கு பிடிக்காமல், புகழேந்தியுடன் சண்டை போட்டாள்.

திருவண்ணாமலை எஸ்.பி., ஈஸ்வரியிடம், கயல்விழி பற்றி விசாரிக்க கூறினான். போனில் தகவல் சொன்ன பஸ் கண்டக்டரை கண்டுபிடித்து அழைத்து வந்தார், ஈஸ்வரி. கண்டக்டரிடம் விசாரித்ததில், நாலைந்து முரடர்கள், கயல்விழியை பஸ்சிலிருந்து இறக்கி, இழுத்து சென்றதையும், தன்னையும் கொலை செய்வதாக மிரட்டியதையும் கூறினான்.

வீட்டுக்கு வந்த புகழேந்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தாள், சுபாங்கி. பேசிக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் இருவருக்கும் பிரச்னை வந்து விடுகிறது.

சுபாங்கி சொன்னதைக் கேட்டு, புகழேந்திக்கு மனது வலித்தது.

தான் மட்டுமின்றி, அவளும் கஷ்டப்படுவது தெரிந்தது. இத்தனை நாட்களும் தான் மட்டுமே பாதிக்கப்பட்டதாக நினைத்து கொண்டிருந்தான். அவளும் சேர்ந்தே பாதிக்கப்பட்டிருப்பதை, இப்போது உணர்ந்து கொண்டான். தன்னை விட அவள் நிலைமை இன்னும் மோசம் என, தோன்றியது.

'நானாவது ஆண். நடுத்தர வர்க்கம். எதையும் தாங்கிப் பழக்கப்பட்டவன். ஆனால், பாவம் இவள் அப்படி இல்லை. ராஜா வீட்டு கன்றுக்குட்டி. செல்வச் செழிப்பில் மிதந்தவள். ஏதோ ஒரு வேகத்தில் முடிவெடுத்து விட்டு, இப்போது அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல், அனுசரித்து போகவும் இயலாமல் திண்டாடுகிறாள். இந்த நிலைமையில் குழந்தை வேறு.

'ப்ச்ச். என் தவறு தான் இது. எதிலும் நிதானத்தை கையாளுகிற நான், இதில் கவனமில்லாமல் இருந்தது பெரும் தவறு. யோசித்திருக்க வேண்டும். சற்று ஆராய்ந்து பார்த்திருந்தால், நிறைய விஷயங்கள் பிடிபட்டிருக்கும்; தெளிவு கிடைத்திருக்கும். உணர்வுபூர்வமான நெகிழ்வில் ஏற்பட்டு விட்ட தவறு.

'இதற்கு மேலும் இவளை வருத்தப்பட விடக் கூடாது. குழந்தை நம் பொறுப்பு. கையில் குழந்தை என்றால், மற்றுமோர் திருமணம் யோசிக்கப்படலாம்; தாமதப்படுத்தப்படலாம். பணக்காரர்களுக்கு எல்லாம் சுலபம் தான் என்றாலும், குழந்தை என்ற இடையூறு வேண்டாம்.

'குழந்தையை நாம் வைத்துக் கொண்டு, இவளை இந்த திருமண பந்தத்திலிருந்து விடுவித்து விடலாம். அது தான் சரி. அது தான் நியாயம். அதைத்தான் செய்ய வேண்டும்...'

முடிவு செய்த பின், அவள் தோளை அணைத்திருந்த கையை மெல்ல விலக்கிக் கொண்டான். பின்னர், மயிலிறகால் வருடித் தருவது போன்று மென்மையாக, இதமாக பேச ஆரம்பித்தான்.

''கவலைப்படாதே, சுபாங்கி. எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு. குழந்தை பிறக்கட்டும். பிறகு இதை பற்றி பேசலாம்.''

''வெறும் பேச்சா. இல்லை செயல்படுவீங்களோ?''

''நான் வெற்றுப் பேச்சு பேசுகிறவன் இல்லை என்பதை, நீ அறிவாய்.''

அவள் முகத்தில் ஒருவித விடுதலை உணர்ச்சி ஏற்பட்டதை கவனித்தான்.

''சரி வா... போய் சாப்பிடலாம். திரும்ப நான் ஆபீசுக்கு போகணும்,'' என்றான், புகழேந்தி.

''வாங்க. நான் சாப்பாடு போடுறேன்,'' என்றாள், சுபாங்கி.

''பெரியவர் போடட்டும். நாம் சாப்பிடலாம்.''

''இல்லைங்க. நான் சாப்பிட்டு விட்டேன். டாக்டர் என்னை நேரத்துக்கு சாப்பிடச் சொல்லி இருக்கார். அப்போது தான், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பானாம்,'' என, சுபாங்கி கூறியதும், புன்சிரிப்பு சிரித்தான், புகழேந்தி.

''வந்து உட்காருங்க,'' என்றாள்.

மேஜை மீது அனைத்தையும் வைத்து விட்டு காத்து நின்றிருந்தார், சமையற்காரப் பெரியவர்.

''நீங்க போங்க பெரியவரே. நான் போடுறேன்.''

சந்தோஷமாக நகர்ந்து கொண்டார். 'அம்மா தினமும் இப்படி நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்...' என, நினைத்து கொண்டார்.

நீண்ட நாட்களுக்கு பின், சுபாங்கியின் கையால் சாப்பிடுவதை உணர்ந்தான், புகழேந்தி. கல்யாணமான புதிதில், ஓரிரு நாட்கள் சாப்பிட்டது தான். அப்போது இத்தனை வெறுப்பு இல்லை அவளிடம். சுமூகமாகத்தான் இருந்தது.

அதன் பின்னரே, கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, பூதாகார நிலையை எட்டி விட்டது. மீண்டும் சுமூக நிலை ஏற்பட வழியே இல்லை என்று தான் நினைத்திருந்தான், புகழேந்தி.

இன்றென்னவோ அதிசயமாக சாப்பாடு போடுகிறாள். நல்லபடியாக பேசுகிறாள். ஒருவேளை விவாகரத்து பெறலாம் என, சூசகமாக தெரிவித்ததால் இருக்குமோ!

''என்ன யோசனை? சாப்பிடுங்கள்,'' என்றாள்.

சாம்பார் சாதத்தை ஒரு கவளம் எடுத்து வாயருகில் கொண்டு போனான், புகழேந்தி. அப்போது, மொபைல் போன் ஒலித்தது. கையில் எடுக்காமல், ஒலிப்பெருக்கியை அழுத்தி, அப்படியே பேசத் துவங்கினான்.

''எஸ்?''

''குட் ஆப்டர்நுான் சார்.''

''சொல்லுங்க, ஈஸ்வரி...''

''அந்தப் பெண்ணை பற்றின முழு விபரமும் கண்டுபிடிச்சாச்சு, சார்.''

''கிரேட் ஜாப்! யார் அவள்?''

''நரிக்குறவப் பெண்.''

''என்னது?''

''ஆமாம், சார். நாலைந்து ஆண்டுகளுக்கு முன், அவளுடைய அப்பா அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.''

''மை காட்! ஏன்?''

''முற்போக்குவாதி, தோழர்களோடு பழகியவர். தான் படித்ததோடு மட்டுமின்றி, தன் இனமும் படித்து முன்னேற வேண்டும் என, ஆசைப்பட்டவர். பாடிகோடா என்ற அவரது பெயரை, அன்பரசன் என, மாற்றினர். ஆடிகோடி என்ற அவரது மனைவியின் பெயர், தங்கம்மா ஆனது. இந்தப் பெண், கயல்விழி. இவளது தம்பி, கணேசன்.

''மற்ற ஜாதிக்காரர்களுக்கு சமமாக நடத்தப்படணும். நம் பிள்ளைகள் படிக்கணும். படித்தால் மட்டுமே சமூகத்தில் நாமும் தலை நிமிர்ந்து வாழ முடியும் என்றெல்லாம் மாநாடு போட்டு கர்ஜித்தவர், இவளது அப்பா.''

''ஓ, பென்டாஸ்டிக்!''

''அதனால் தான், அவர் வெட்டிக் கொல்லப்பட்டார். தோழர்கள் அலுவலகத்தை நெருப்பு வைத்து கொளுத்தினர். ஒட்டுமொத்த நரிக்குறவர்களும், அந்த கிராமத்தை விட்டு ஓடி, பக்கத்து கிராமத்தில் குடிபெயர்ந்துட்டாங்க.''

''இதைப்பற்றி நான் படித்தும், கேள்விப்பட்டும் இருக்கிறேன்.''

''இந்தப் பெண், யு.பி.எஸ்.ஸி., பரீட்சைக்கு தயார் பண்ணிட்டு இருந்திருக்கு. சென்னை அரசு விடுதியில் தான் தங்கி இருந்திருக்கு.''

''அப்படியா, அப்புறம் இங்க எப்படி?''

''அந்தப் பெண்ணோட தம்பி, ஊர் தலைவருடைய பெண்ணைக் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிருக்கான். விடுவாங்களா, அந்த ஜாதிக்காரங்க. அவுங்க தான் இவளோட அப்பாவைக் கொன்னவங்க. தம்பி செய்த காரியத்துக்கு, இப்போ இவளைப் பழிவாங்கியிருக்காங்க.''

''மை காட் படிச்ச பொண்ணா?''

''ஆமாம் சார். தோழர் செல்லக்கண்ணு உதவியில் தான் படிச்சிருக்கு. சென்னை வந்திருக்கு.''

''அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்னீங்க?''

''கயல்விழி.''

''அவுங்கம்மா?''

''இல்ல சார்.''

''இல்லன்னா?''

''கிணத்துல பிணமா கிடந்திருக்காங்க. 'போஸ்ட் மார்டம்' பண்ணி மார்ச்சுவரில வச்சிருக்காங்க.''

''மை காட்.''

ஒரு வினாடி கண்களை மூடி மவுனித்தான், புகழேந்தி.

''சார்?''

''நான் கிளம்பி ஆபீசுக்கு வரேன்,'' என்றவன், அதற்கு மேல் சாப்பிட முடிய வில்லை. கையை உதறி எழுந்தான்.

''ஏன் எந்திரிச்சுட்டீங்க?''

''பாவம், சுபா. அந்தப் பொண்ணு. ரொம்பப் பரிதாபமான நிலைமை.''

''அந்தப் பொண்ணு மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? யாரோ ஒருத்தி உங்களை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்தணும்?''

''நீ அவளைப் பார்த்திருக்கணும், சுபா. மொத்தமும் சிதைச்சு, முட்புதர்ல துாக்கிப் போட்டுட்டு போயிருக்காங்க. அவளுடைய அம்மாவைக் கொன்று, கிணத்துல வீசி இருக்காங்க. இந்த பாழாய் போன, ஜாதி வெறி தான் அத்தனைக்கும் காரணம்.''

''ஜாதி வெறியை உங்களாலோ, மத்தவங்களாலோ அடக்க முடியாது; கட்டுப்படுத்தவும் முடியாது. அடிக்கடி இப்படி தான் கொழுந்து விட்டு எரியும். ஏதோ ஒருத்திக்காக நீங்க உருகறதும், சாப்பாட்டை உதறிட்டுப் போறதும், எனக்கு பிடிக்கல. உட்கார்ந்து அமைதியா சாப்பிட்டு போங்க. உங்களுக்கு சாப்பாடு போடணும்ன்னு, நானே வந்திருக்கேனில்ல!''

''இல்லை, சுபா. என்னால இப்ப சாப்பிட முடியலை.''

உடனே அவள் முகம் ஜிவுஜிவுத்தது. கண்கள் சிவந்து, உதடுகள் துடித்தன. அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை எடுத்து வீசி எறிந்தாள். தட்டு, பெரும் சத்தத்தோடு சுவரில் மோதி கீழே விழுந்தது. அறை முழுவதும் சோறு இறைந்தது. ரசப் பாத்திரமும் வீசப்பட்டதில் ஆறாக ஓடிற்று.

சமையல்காரரும், வேலைக்காரப் பெண்மணியும் எட்டிப் பார்த்தனர். அவர்கள் முகங்களில் கலவரம் தெரிந்தது. வெளியிலிருந்து ஓடிவந்த டிரைவர், நிலைமையை புரிந்து வெளியேற முயன்றான்.

''ஏய் பழனி. நில்லுடா,'' என, அதட்டினாள். நின்றவனின் அருகில் போய், ஓங்கி கன்னத்தில் அறைந்தாள்.

''எவ்வளவு தைரியமிருந்தால் திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையுற மாதிரி நுழைவ. கலெக்டர் வீட்டுக்குள்ள எட்டிப் பார்க்கிற துணிச்சல் எங்கிருந்து வந்தது?''

அதிர்ந்து போனான், புகழேந்தி.

'ஓட்டுனரை கைநீட்டி அடிக்கிற துணிச்சல் இவளுக்கு எங்கிருந்து வந்தது?'

''சுபாங்கி,'' என, அதட்டினான்.

''என்ன?'' என, அதிகார தொனியில் கேட்டாள்.

''பழனியை நீ கை நீட்டி அடிச்சது தப்பு. மன்னிப்பு கேளு.''

''என்னது... நான் மன்னிப்பு கேட்கிறதா?''

''தப்பு பண்ணினவங்க மன்னிப்பு கேட்டுத்தான் ஆகணும்.''

''என்ன அறிவுக்கெட்டத்தனமா பேசறீங்க. ஒரு கார் டிரைவர்கிட்ட, மந்திரி மகள் மன்னிப்பு கேட்கணுமா?''

''நீ இன்னும் மந்திரி மகளாகவே தான் இருக்க.''

''ராஜா மகள், ராஜா மகளாகத்தான் இருப்பா.''

''ராஜா மகளானாலும், மந்திரி மகளானாலும் நியாயம் ஒன்று தான். கை நீட்டி அடிச்சதுக்கு டிரைவர் கிட்ட மன்னிப்பு கேட்டுத்தான் ஆகணும்.''

''ஐயோ, விட்ருங்கய்யா. அம்மா சொல்ற மாதிரி உள்ளே வந்தது, என் தப்பு தாங்கய்யா. என்னை மன்னிச்சிடுங்கம்மா.''

''ஏய் நாங்க பேசிட்டிருக்கோம். நீ கேட்டுக்கிட்டு நின்னதோடு இல்லாம, உள்ள வேற நுழையுறயாடா நாயே. வெளியே போடா.''

தலைகுனிந்து பழனி வெளியே செல்வதை கவனித்து, உள்ளுக்குள் நொந்து போனான்; வெறுப்பும், வேதனையுமாக வெளியேறினான், புகழேந்தி.

''போ, அப்படியே போ. திரும்பி வராமப் போயிடு,'' என பின்னாலிருந்து, சுபாங்கி சபிப்பதை கேட்டுக் கொண்டிருந்த, சமையற்காரப் பெரியவர் நெஞ்சம் கலங்கினார்.

'இந்த அளவிற்கா வெறுப்பும், கோபமும் வரும்? கணவனையா இவ்வாறு சாபமிடுவாள். என்ன பெண் இவள்?'

பெருமூச்சோடு அறையை சுத்தம் செய்யச் சென்றார், சமையற்காரப் பெரியவர்.



- தொடரும்இந்துமதி






      Dinamalar
      Follow us