/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: நடுநிசியில் அழைத்த இளையராஜா!
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: நடுநிசியில் அழைத்த இளையராஜா!
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: நடுநிசியில் அழைத்த இளையராஜா!
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: நடுநிசியில் அழைத்த இளையராஜா!
PUBLISHED ON : ஏப் 06, 2025

ஆரம்ப காலத்தில், இளையராஜாவின் அண்ணன் வரதராஜன், 'பாவலர் பிரதர்ஸ்' என்ற பெயரில், சிறு சிறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதில், இளையராஜாவும் அங்கம் வகித்தார்.
என் தந்தை தமிழ்வாணன், நாடக ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்பது, பலர் அறியாத செய்தி. 'புலித்தேவன்' எனும், சரித்திர நாடகம் மற்றும் 'பைத்தியங்கள் பலவிதம்' எனும், சமூக நாடகம் என, இரண்டு நாடகத்தின் ஆசிரியர், அவர்.
சமூக நாடகத்திற்கு, 'பாவலர் பிரதர்ஸ்' தான் இசை. இந்த நாடகம், சென்னை, தி.நகர், வாணி மகாலில் நடந்த போது, நான், பள்ளி மாணவன். இந்த நாடகத்தை பார்க்க, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வந்து விட வேண்டும் என, கண்டிப்பாக சொல்லி இருந்தார், என் தந்தை.
'பாவலர் பிரதர்ஸ்' பிற்காலத்தில் இவ்வளவு சிறப்பாகத் திகழ்வர் என்றோ, இளையராஜா இப்படி மாபெரும் இசையமைப்பாளராக வளர்வார் என்றோ தெரிந்திருந்தால், அன்றே அவருடன், புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பேன்.
இளையராஜா மீது எனக்கு இருந்த அபிமானம் காரணமாக, எங்கள் மணிமேகலைப் பிரசுரத்தில், அவரைப் பற்றி ஒரு புத்தகம் வெளியிடலாம் என, இளவல் ரவியிடம் யோசனை சொன்னேன். ரவியும், 'சரி...' என்றார்.
புத்தகம் வெளிவந்த சில மாதங்களில், இளையராஜாவிடமிருந்து, எனக்கு ஒரு கடிதம் வந்தது. பாராட்டு கடிதமாக இருக்கும் என, பிரித்துப் படித்தால், அது ஒரு காரசாரமான கடிதம்.
'என் அனுமதியின்றி எப்படி என்னை பற்றி நீங்கள் புத்தகம் வெளியிடலாம்? புத்தகங்களை, 'வாபஸ்' வாங்குங்கள். இல்லையேல், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்...' என்பது, இக்கடிதத்தின் சாராம்சம்.
'என்ன இது, புது வம்பு? கிணறு வெட்டப் பூதமல்லவா கிளம்பி விட்டது...' என, கலங்கிப் போனேன். அவருக்கு இந்நுால், பெருமை சேர்க்கும் என, நான் கணிக்க, தேவையில்லாமல் ஒரு மாபெரும் கலைஞனை காயப்படுத்தி விட்டோமே என, வருந்தினேன்.
இக்கடிதம், ஒரு வழக்கறிஞரின் நோட்டீஸ் போலவே இருந்தது. வார்த்தைகள் சட்ட அறிவு கொண்ட ஒருவர் வழியே உருவாக்கப்பட்டதை உணர்த்தியது.
திருடனைத் தேள் கொட்டிய கதை தான். இளையராஜா, எனக்கு கடிதம் போட்டிருக்கிறார் என, பெருமை அடித்துக் கொள்ள வழியில்லை.
ரவியை கலந்தேன்.
'அடுத்து நோட்டீஸ் வரலாம். அப்போது பதிலிடுவோம். ஒருவரைப் பற்றி நுால் எழுத, எந்த அனுமதியும் தேவையில்லை. யாரோ ஒருவர் அவரைத் தவறாக வழிநடத்தியுள்ளனர்...' என, நம்பிக்கை அளித்தார், ரவி.
இந்நிலையில், கவிஞர் பொன்னடியானின், 'முல்லைச்சரம்' இதழின் ஆண்டு விழா, ராணி சீதை அரங்கில் நடந்தது. இளையராஜாவும் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசினேன்.
விழாவில், பலர் முன்னிலையில், என் நுாலை கண்டிப்பார் என, எதிர்பார்த்தேன். பொதுவெளியில் கூட, கோபத்தை வெளிப்படுத்தத் தயங்காதவர், இளையராஜா. மறந்து விட்டாரா, மன்னித்து விட்டாரா என தெரியவில்லை. அந்தப் பேச்சையே எடுக்கவில்லை.
இதே, 'முல்லைச்சரம்' இதழின் மேம்பாட்டிற்காக, ஒரு விழா நடத்த, 'குவைத் பிரண்ட் லைனர்ஸ்' அமைப்பின் நிறுவனர், எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், இளையராஜாவையும், கவிஞர் பொன்னடியானையும், என்னையும் குவைத்திற்கு அழைத்திருந்தார்.
இளையராஜாவிடம் சம்மதம் பெற, பெரும்பாடு பட்டார், ரவி தமிழ்வாணன். எல்லா ஏற்பாடுகளையும் செய்து, குவைத்தில் விழா அறிவிப்பெல்லாம் செய்த பின், 'நான் வரவில்லை...' என்றார், இளையராஜா.
விடுவதாக இல்லை, ரவி. விமானத்தின் படிக்கட்டில் இளையராஜா காலடி வைக்கும் வரை, என்.சி.மோகன்தாசிற்கும், 'பிரண்ட் லைனர்ஸ்' அமைப்பினருக்கும் ஒரே, 'திக் திக்' தான்.
இளையராஜா வருவதாக அறிவித்ததுமே, குவைத் தமிழர்கள் மத்தியில் ஒரே குதுாகலம் தான்.
என்.சி.மோகன்தாஸ், இளையராஜாவுடன் பேசும் போது, 'லேனாவிற்கு என்ன வகுப்பில் டிக்கெட் எடுத்திருக்கிறீர்கள்?' என, கேட்டிருக்கிறார். அவர், எக்கனாமிக் வகுப்பு போதுமென கூறிவிட்டதாக, சொல்லி இருக்கிறார், என்.சி.எம்.,
'அவருக்கும், எனக்கு எடுத்தது போலவே, பிசினஸ் வகுப்பில் டிக்கெட் போடுங்க...' என, உறுதியான குரலில், இளையராஜா சொல்ல, ஆடிப்போனது, 'பிரண்ட் லைனர்ஸ்!' காரணம், இதற்கு மூன்று மடங்கு அதிக கட்டணம்.
அதுமட்டுமல்ல, 'லேனா, எனக்கு பக்கத்தில் தான் அமர வேண்டும்...' எனவும், நிர்ப்பந்தித்துள்ளார், இளையராஜா.
'அப்படியா சொன்னார், அப்படியா சொன்னார்?' என, திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டேன்.
'அடுத்தடுத்த இருக்கை என்றால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரும், 'செக் இன்' செய்ய வேண்டும். நீங்கள் வெகு முன்னதாக, 'செக் இன்' செய்து விடாதீர்கள். அப்புறம், இருக்கைகள் மாறிவிடும். எங்களை பிடித்து ஒரு வாங்கு வாங்கி விடுவார்...' என, குவைத்திலிருந்து தொலைபேசியில் தொடர்ந்து பேசினார், என்.சி.மோகன்தாஸ்.
நல்லவேளையாக, அடுத்தடுத்த இருக்கை. வாழ்க்கையில் முதன்முறையாக, பிசினஸ் கிளாஸ் பயணம். அதுவும் எப்பேர்ப்பட்ட ஆளுமையுடன்! மனசெல்லாம் மத்தாப்பு.
தன் பாஸ்போர்ட்டை என்னிடம் தந்த இளையராஜா, 'இதையெல்லாம் நீங்க பார்த்துக்குங்க. அப்புறம் ஒண்ணு. கடந்து போகிறவர்கள் என்னை தொந்தரவு பண்ணாமப் பார்த்துக்குங்க. நான் துாங்கப் போறேன்...' என்றவர், சில நிமிடங்களில் துாங்கி விட்டார்.
'நம் விமானத்தில் இளையராஜா வருகிறார்...' என, யாரோ போட்டுக் கொடுத்து விட, ஏகப்பட்ட பேர், பிசினஸ் வகுப்பிற்குள் உள்ளே வர ஆரம்பித்து விட்டனர். அவர்களை சமாளிப்பது பெரும்பாடாகி விட்டது.
'படம் எடுக்கணும்...' என்றனர். எழுப்பவே முனைந்து விட்டனர். ஆர்வம் தாண்டிய வெறியை அவர்களிடம் கண்டேன். தடுத்தபோது, 'நீ யாருய்யா எங்களை தடுக்க?' என்றனர்.
'அவனுக்கென்ன துாங்கிவிட்டான் அகப்பட்டவன் நானல்லவா...' என்ற எம்.ஜி.ஆர்., படப் பாடல் நினைவிற்கு வந்தது.
வேறு வழியின்றி தலைமை பணிப்பெண்ணை அழைத்து, முறையிட்டேன். அவர் இரு வகுப்புகளுக்கும் இடையே உள்ள திரைச்சீலையை இழுத்து மூடிவிட்டு, அங்கேயே நின்று எங்களை காப்பாற்றினார்.
இதோடு விட்டனரா?
குவைத்தில் நாங்கள் தங்குவதற்காக, அருமையான ஏழு நட்சத்திர ஹோட்டல், 'புக்' செய்திருந்தனர்.
'எனக்கும், லேனாவுக்கும் அடுத்தடுத்த அறை வேண்டும். அந்த இரு அறைகளுக்குள் போக, வர, கதவு இருக்க வேண்டும்...' என்றார், இளையராஜா.
'அடேங்கப்பா... என்ன பிரியம்...' என, மகிழ்ந்தேன்.
சிரமப்பட்டு ஒதுக்கித் தந்தனர்.
அறைகள் ஒதுக்கப்பட்ட இரண்டு மணி நேரத்திற்கெல்லாம், 'இன்டர்காமில்' என்னை அழைத்தார், இளையராஜா.
'லேனா! தலை ரொம்ப வலிக்குது. மாத்திரை வேணும்...' என்றார். வரவேற்பறைக்கு பேசினேன். உடனே ஏற்பாடு செய்தனர்.
'டாக்டர் இருக்கிறார், அனுப்பட்டுமா?' என்றனர்.
நடுநிசி நெருங்கிய வேளை. இளையராஜாவிடமிருந்து, 'இன்டர்காமில்' மறுபடி போன். இம்முறை அவர் குரலில் ஒருவித காட்டம் இருந்தது.
இந்த நேரத்து அழைப்பு, எதற்காக இருக்கும்?
வரும் வாரம் வரை காத்திருங்களேன்!
தொடரும்.
லேனா தமிழ்வாணன்