
பா - கே
நண்பர் ஒருவரது மகன், சமீபத்தில், மலையேற்ற குழு ஒன்றுடன், எவரெஸ்ட் சிகரம் ஏறி, சாதனை புரிந்துள்ளான். அதைக் கொண்டாடுவதற்காக, தன் வீட்டில் நடைபெறும், 'கெட் டு கெதர் பார்ட்டி'க்கு அழைப்பு விடுத்திருந்தார், நண்பர்.
தவிர்க்க முடியாமல், நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம். நண்பர் மகனை பாராட்டி, பயணம் பற்றி விசாரித்தேன்.
'இதற்கு முன் இரண்டு முறை, இமயமலையில் ஏறி இருந்தாலும், எவரெஸ்ட் சிகரத்தை எட்ட முடியாமல் திரும்பி விட்டோம். இந்த முறை, ஷெர்பாஸ் உதவியோடு சாத்தியமானது...' என்றான்.
'ஷெர்பாஸா? அப்படி என்றால் என்ன?' என்றேன், நான்.
அருகில் இருந்த, மலையேற்ற குழுவின் தலைவர், தொடர்ந்து கூற ஆரம்பித்தார்:
இமயமலையின் கிழக்கு பகுதியில் வாழும் மக்களை, ஷெர்பாஸ் என அழைப்பர்.
திபெத்திலிருந்து நேபாளம், இந்தியா மற்றும் பூடான் பகுதிகளில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள். இவர்கள், மலையேறுபவர்களுக்கு உதவுபவர்கள் என்ற அடிப்படையில் அறியப்பட்டவர்கள்.
கடந்த, 1924ல், வெளிநாட்டைச் சேர்ந்த, மலையேற்ற குழு ஒன்று, எவரெஸ்ட் ஏறியபோது, ஷெர்பாஸ்கள் தான் உடன் சென்றனர். தங்கள் சுமைகளை துாக்கவும் இவர்களை கூட அழைத்து சென்றனர். அன்று இப்படி கூட சென்ற, ஷெர்பாவுக்கு ஒரு நாள் கூலி, 12 அணா.
என்ன, 12 அணாவா என திகைக்காதீர். அன்று, 12 அணாவுக்கு, 15 கிலோ அரிசி வாங்க முடியும்.
வேலை இல்லாத நாட்களில், மரம் வெட்டும் பணி செய்வர். இதன் மூலம் வாரத்திற்கு, 10 ரூபாய் கிடைக்குமாம்.
'பிறகு ஏன் மலை ஏறணும், எடை துாக்கணும்?' என்றால், 'மரம் வெட்டுவதை விட, மலை ஏறுவது சுலபம்...' என்பர், ஷெர்பாஸ்.
இன்று, ஷெர்பாவுக்கு அரசு நிர்ணயித்துள்ள கூலி என்ன தெரியுமா? 48 ஆயிரம் ரூபாய். இது, ஒரு பயணத்திற்கு மட்டுமே. காலப்போக்கில், நிறைய ஷெர்பாக்கள், பணக்காரர்களாக ஆகிவிட்டனர்.
நேபாள அமைச்சரவையில், கிருபாசுர் ஷெர்பா என்பவர், கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சராகவும் இருந்துள்ளார்.
லக்கி ஷெர்பா என்பவர், நேபாளம் சார்ந்த ஆஸ்திரேலிய துாதர் பணியில் இருந்தார்.
நேபாளத்தில் மட்டும், சுமார், 1.40 லட்சம் ஷெர்பாக்கள் உள்ளனர். அமெரிக்காவின், நியூயார்க் நகரில், 16 ஆயிரம் ஷெர்பாக்கள் உள்ளனர்.
இவர்கள் வெற்றிக்கு காரணமாக இருப்பது எது தெரியுமா?
அவர்களுடைய நுரையீரல் சற்று விரிவானது, குறைந்த ஆக்சிஜன் போதுமானது. இதுதவிர, உடல் வலு போன்ற காரணங்களாலும், அவர்களை எவரெஸ்ட் சிகரத்தை எளிதில் தொட வைக்கிறது.
பொதுவாகவே சிரித்த முகமாக இருப்பர். அமைதி மற்றும் அதிக எதிர்பார்ப்பு இல்லாமை கூடுதல் தகுதி.
ஆனாலும், ஷெர்பாஸ் அனைவரும் சிறப்பானவர்கள் என, கருத முடியாது. இதுவரை, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியவர்களில், 340 பேர் இறந்துள்ளனர். இதில், மூன்றில் ஒருவர் ஷெர்பாஸ். இந்த, 340 பேரில், 200 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
கமி ரீட்டா என்ற ஷெர்பாவை, எவரெஸ்ட் நாயகன் என, அழைக்கின்றனர். காரணம், அவர் இதுவரை, 30 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 10 நாள் வித்தியாசத்தில் இருமுறை எவரெஸ்ட் உச்சியைக் கண்ட பெருமை, இவருக்கு உண்டு. இவர் வயது: 55.
பெண் ஷெர்பாக்களும் மலை ஏறுவதில் வல்லவர்கள். இவர்களை, ஷெர்பானி என அழைப்பர். இதில், ஐந்து பெண்கள், மலை ஏறிய குழுவுடன் இணைந்து செயலாற்றியவர்கள்.
எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.
- என்று கூறி முடித்தார், மலையேற்ற குழு தலைவர்.
அப்போது அங்கு வந்த நண்பர், சாப்பிட அழைக்க, லென்ஸ் மாமாவை தேடினேன். அவர் கண்ணிலேயே படவில்லை. சரி, ஏதோ, 'காரியமாக' உள்ளே சென்றிருப்பார் என நினைத்து, நான் சாப்பிட ஆரம்பித்தேன்.
ப
நிறைய புத்தகங்கள் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பலரும் கூறியுள்ளனர். புதிது புதிதாக, புத்தகம் படிக்கும்போது, நமக்குள் என்னென்ன உணர்வுகள் ஏற்படும் தெரியுமா?
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நமக்கு அதுவரை தெரியாத விஷயங்கள் தெரிய வரும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நம்முடைய பொதுப் புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள் எல்லாவற்றை பற்றியும் கேள்விகள் உருவாகும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நமது அறிவுப்பரப்பு, 1 மில்லி மீட்டராவது விசாலமாகும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நம்முடைய உணர்வுகள் கூர்மையடையும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நாம் அதுவரை நம்பியிருந்த உண்மைகள் பொய்களாக மாறும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நம்முடைய வீடு, ஊர், மாவட்டம், மாநிலம், நாடு, இனம், மதம், ஜாதி மற்றும் மொழி இவையாவும் மறைந்து போகும். பிரபஞ்ச மனிதனாக உணர முடியும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, உலகின் எந்த மொழி பேசும் மனிதர்களின் வாழ்வை, அவர்களுடைய பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, அந்த மொழி தெரியாமலேயே புரிந்துகொள்ள முடியும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நம்முடைய மூட நம்பிக்கைகள் ஒழிந்து, அறிவியல் பார்வை உருவாகும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, சனாதனத்துக்கும், மரபுக்கும், நவீனத்துக்கும் உள்ள வேறுபாடுகள் தெரியும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, வரலாற்றுக்கும், புராண இதிகாசங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, நாம் வாழும் சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, காக்கை - குருவி, கடல், மலை என, இயற்கையை ஆராதிக்க தோன்றும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, காதலின் ஊற்றுக்கண் பொங்கிப் பிரவகிக்கும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, ஜாதி, மதத்தின் பின்னுள்ள சதி வலைகளை புரிந்து கொள்ள முடியும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, பார்க்கிற அத்தனை ஜீவ ராசிகள் மீதும் அன்பு கொள்ளத் தோன்றும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, சமத்துவமற்ற ஏற்றத்தாழ்வுகளுள்ள இந்த சமூகத்தின் மீது கோபம் பொங்கும்
* ஒரு புத்தகத்தை படிக்கும் போது, மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பை மாற்றத் தோன்றும்.
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.