/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிடம் எவரும் கேட்டிராத கேள்விகள்! (15)
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிடம் எவரும் கேட்டிராத கேள்விகள்! (15)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிடம் எவரும் கேட்டிராத கேள்விகள்! (15)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிடம் எவரும் கேட்டிராத கேள்விகள்! (15)
PUBLISHED ON : ஏப் 13, 2025

குவைத்தில் ஏழு நட்சத்திர ஹோட்டலில், அடுத்தடுத்த அறைகளில் இளையராஜாவும், நானும் தங்கியிருந்தோம். இப்படி ஒரு நேரமற்ற நேரத்தில் அவர் என்னை, 'இன்டர்காமில்' அழைப்பானேன்?
'லேனா! என் அறை வாசலில் யாரோ கதவைத் தட்டுறாங்க. நான் யாரையும் சந்திக்க விரும்பலை. அவர்களை என்னன்னு கேட்டு அனுப்பிடுங்க...' என, குரலில் சிறு காட்டத்துடன், பதற்றமும் இருந்தது.
பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்ட நான், அறை வாசலில் இருந்த அவர்களை, ஒருவித ஐயப்பாட்டுடன் பார்த்தேன். பார்க்க நாகரிகமாகத் தான் இருந்தனர்.
'வணக்கம். என்ன விஷயம்?' என்றேன்.
'போடா புண்ணாக்கு...' என்பதைப் போலத் தான், அவர்கள் என்னை பார்த்தனர். 'நீ யார் இதை கேட்க...' என்பது போலவும், அவர்களது பார்வை இருந்தது. என்னை அவர்களுக்கு தெரியவில்லை. நான் வேறு, இதற்கு ஏற்றாற்போல், என் கறுப்புக் கண்ணாடியை அணிந்திருக்கவில்லை.
'ராஜா சாரின் தீவிர ரசிகர்கள் நாங்கள். அவரைப் பார்க்கணும்...' என்றனர்.
'அப்பாயின்மென்ட் வாங்கி இருக்கிறீர்களா?' என் கேள்வியும், தோரணையும் இவன், இளையராஜாவுடன் சம்பந்தப்பட்டவன் தான் என்பதை, அவர்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
நான் தொடர்ந்தேன்...
'சாருக்கு உடல்நலமில்லை. இப்பத்தான் மாத்திரை போட்டு படுத்திருக்கிறார். தயவுசெய்து, 'பிரண்ட் லைனர்ஸ்'சுடன் பேசி, 'அப்பாயின்மென்ட்' பெற்ற பின், நாளை பார்க்கலாம். இப்ப பார்க்க முடியாது...' என்றேன்.
'நாங்க ஒருவித வெறியில் வந்திருக்கிறோம். அவரை பார்க்காம போறதா இல்லை. விடிய விடிய இங்கே நிற்போம்...' என்றார், பிடிவாதமாக ஒருவர்.
'தயவுசெய்து புறப்படுங்கள். பெரிய வி.ஐ.பி.,யை, அவரது சம்மதம் இல்லாமல், இப்படி நேரம் கெட்ட நேரத்தில் கதவை தட்டியதற்காக, உங்களை பற்றி வரவேற்பறையில் புகார் செய்யப் போகிறேன்...' என்றேன்; என் குரலில் உறுதி இருந்தது.
கண்ணீர் புகைக் குண்டை வீசினால், தலை தெறிக்க ஓடுவரே, போராட்டக்காரர்கள்! அப்படி ஓட ஆரம்பித்து விட்டனர், நால்வரும்.
குவைத்தில் இதற்கெல்லாம் தண்டனை உண்டு.
மறுநாள், குவைத்தில் நடந்த நிகழ்வில், முன்னணி திரையுலக நாயகருக்கு தரப்படுவதை போல் ஆர்ப்பரிப்பும், ஆரவாரமுமாக குவைத் தமிழர்கள், இளையராஜாவை கொண்டாடியதை மறக்கவே முடியாது.
மறுநாள், குவைத் தமிழர் ஒருவர், வீட்டில் விருந்து. விருப்பமில்லாமல் தான் வந்தார், இளையராஜா.
குவைத்தை விட்டு நாங்கள் புறப்படும் நாளன்று காலையில், எங்களை ஒரு மிகப்பெரிய பல்பொருள் அங்காடிக்கு அழைத்து சென்றார், 'பிரண்ட் லைனர்ஸ்' என்.சி.மோகன்தாஸ்.
இளையராஜாவையும், என்னையும் பார்த்து, 'உங்களுக்கு வேண்டிய எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். விலையைப் பற்றிய கவலை வேண்டாம். கொடுக்க நாங்க இருக்கிறோம்...' என்றார்.
பொதுவாக, குவைத்திற்கு வரும் தமிழர்கள், பேச்சாளர்கள், 'இன்ன தொகை தந்தால் வருகிறோம்...' என, கேட்பதுண்டு. நாங்கள் எதுவும் கேட்டு பெறவில்லை என்பதால், எங்களுக்கு இந்த சலுகை.
இளையராஜா, ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தால், தனக்கென்று என்ன தான் எடுத்துக் கொள்வார் என்ற ஆவல் மிகுதியில், நான் தான், 'டிராலிமேன்' ஆனேன்.
அவர் எடுத்த ஒரே பொருள். பிரிட்டனில் தயாரான லிப்டன் டீ. அதுவும் சாஷே என்பரே, அதுபோன்ற பாக்கெட்டுகள். வேறு எதையும் திரும்பிக் கூட பார்க்கவில்லை, இளையராஜா.
'வீட்டினருக்கு?' என்றேன்.
மறுத்தார்.
குவைத்தை விட்டு புறப்பட்ட அன்று, விமான நிலைய வி.ஐ.பி., லவுன்சில் நானும், இளையராஜாவும் மட்டும் தான். நல்ல மூடில் இருந்தார்.
'இது பேட்டி அல்ல. வெறும் உரையாடல் தான். சில கேள்விகள் கேட்கலாமா?' என்றேன்.
'நல்லா கேளுங்க...' என்றார்.
'நல்ல டியூன் ஒன்று, காரில் போகும் போது, உங்களுக்கு தோன்றுகிறது என்றால், ஸ்டூடியோவிற்கு போகும் முன், 'ஹம்மிங்கா' அதை பதிவு செய்து, 'ஸ்டாக்' டியூன் போல் வைத்து கொள்வீர்களா?' என்றேன்.
திடமாக மறுத்து, 'டைரக்டர், 'சிச்சுவேஷனை' சொல்லும் போது, ஹார்மோனியப் பெட்டியுடன் அமர்வேன். அப்போது தோன்றுவது தான். மற்ற நேரங்களில் டியூன் பற்றி சிந்திப்பதே இல்லை...' என்றார்.
எனக்கு ஒரே வியப்பு!
'நீங்கள் அடிக்கடி விரும்பிப் பாட வைக்கும் பாடகிகள் (பெயர்களை சொன்னேன்.) உச்ச ஸ்தாயியில் திணறுகின்றனர். ஏழு கட்டை - எட்டு கட்டையில், கீச்சுக் குரலாகி விடுகின்றனர். எப்படி இதை அனுமதிக்கிறீர்கள்?' என்றேன்.
இளையராஜாவின் நல்ல மூடை இந்த கேள்வி கெடுத்து விட்டது என்றே நினைக்கிறேன். அவர் முகம் மாறி விட்டது.
என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். பயல் பாயின்ட்டை பிடிச்சுட்டான். இவன் சொல்றது உண்மை தான் என்பது போல் இருந்தது, அவரது பார்வை.
'சில பாடகர்களை, உங்களுடன் வெகுநாள் பயணித்தவர்கள் என்பதால், அவர்களை திரும்ப திரும்பப் பாட வைத்தீர்கள். அவர்கள் நல்ல பாடகர்கள் இல்லை...' என்றேன்.
'யாரை சொல்கிறீர்கள்?' என்றார்.
பெயர்களை சொன்னேன். அவர் கொஞ்சம், 'ஷாக்' ஆன மாதிரி தெரிந்தது.
'உங்கள் மகன், யுவன்சங்கர் ராஜா, நல்ல இசையமைப்பாளர் தான். ஆனால், நல்ல பாடகர் இல்லை. அவர் பாடுவதில் ஸ்ருதி பேதம் இருக்கிறது. பிர்காக்களில் பிழை இருக்கிறது. மேலும், இயல்பாக பழக மாட்டேன் என்கிறார். இது, அவரை ஆணவக்காரர் போல் காட்டுகிறது...'
இப்படி யெல்லாம், இளையராஜாவிடம் எவரும் அவ்வளவு சுலபத்தில் பேசவோ, கேட்டு விடவோ முடியாது என, நினைக்கிறேன். எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டார். விமானத்தில் வெடிப்பாரோ!
'லேனா! எனக்கு எந்த வெளிநாட்டின் மீதும் விருப்பம் இல்லை. நம் நாடு, கலைகளின் தாயாகிய சரஸ்வதி வாழும் நாடு. அவளை விட்டு நீங்கி வருவதில், எனக்கு உடன்பாடே இல்லை. இந்த மண்ணில் என்ன இருக்கிறது என்கிறீர்கள்? 'முல்லைச்சரம்' இதழை, தனிமனிதராக, பெருமுயற்சியில் தளராமல் நடத்தி வரும், கவிஞர் பொன்னடியாருக்கு நான் துணை நிற்கவே வந்தேன். எப்படா நம் ஊருக்கு போவோம் என, இருக்கிறது...' என்றார்.
இன்னும் பல விஷயங்களை, என்னிடம் மனம் விட்டு பேசினார். ஓர் இசை மேதையுடன், மூன்று தினங்களுக்கு மேல் நிழலாய் இருந்து, அவருடன் பயணித்ததை வாழ்க்கையில் எனக்கு வாய்த்த மிகப்பெரிய நற்பேறாய் கருதுகிறேன்.
இளையராஜாவுடனான என் அனுபவங்களுள், இன்னும் இரண்டை சொல்ல வேண்டும்.
தொடரும்.
லேனா தமிழ்வாணன்