sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிற்காக நான் பாடிய பாடல்!

/

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிற்காக நான் பாடிய பாடல்!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிற்காக நான் பாடிய பாடல்!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இளையராஜாவிற்காக நான் பாடிய பாடல்!


PUBLISHED ON : ஏப் 20, 2025

Google News

PUBLISHED ON : ஏப் 20, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையராஜாவுடனான குவைத் பயணத்தின் போது, அவருடன் மிகுந்த எச்சரிக்கையுடன் பழகினேன். எதற்கு எரிமலை ஆவார். எதற்கு சந்தனமாய் மாறுவார் என்றே யூகிக்க முடியாத, மனிதர்.

மேதைகளை அவர்களது போக்கிலேயே விட்டுவிட வேண்டும். அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டாலோ, பேசினாலோ, நன்கு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டி வரும்.

'லேனாவை பிசினஸ் வகுப்பிற்கு உயர்த்துங்கள்; விமானத்தில் என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில், அவர் தான் அமர வேண்டும். குவைத் ஹோட்டல் அறையில், எனக்கு அடுத்த அறையில் அவர் தங்க வேண்டும்...' என்றெல்லாம் விழா ஏற்பாட்டாளர்களிடம் அவர் அடுக்கி சொல்லியது, ஏதோ ஒரு வகையில் அவரது நல்லெண்ண வளையத்திற்குள் இருப்பதாகவே, நான் புரிந்து கொண்டேன்.

அவராக கேட்டாலொழிய, நானாக பேச்சு கொடுத்து, அவரை நச்சரிக்கக் கூடாது என்பதிலும், குறிப்பாக இருந்தேன்.

எங்கள் இருவரின் பயணத்தை தெரிந்து கொண்ட என் வட்டத்தினர், என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.

'இளையராஜாவை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள்; எங்களை அவரிடம் அழைத்து போங்கள்...' என்றெல்லாம், இவர்கள் கோரிக்கை வைக்க, 'ஏதடா இது வம்பா போச்சு...' என, எண்ணினேன். இவர்களைத் தவிர்க்கவும் வேண்டும்; இதை மென்மையாக அவர்களுக்கு உணர்த்தவும் வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தேன்.

நாங்கள் இருவரும் குவைத்தில் இருந்து வந்து இறங்கிய மறுநாளே, இளையராஜாவிடமிருந்து போன் வந்தது. நான் ஓர் இடம். என் மொபைல் போன் ஓரிடம் என்பதால், அவரது அழைப்பை வெகுநேரம் கழித்தே பார்த்தேன். 'பக்' என்றது.

என்னவாக இருக்கும்? என் யூகங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தி, நானே அதுவாக இராது; இதுவாக இராது என, நிராகரித்தேன்.

நான் அழைத்த போது, அவர் சொன்ன விஷயம், என் எல்லா யூகங்களுக்கும் அப்பாற்பட்டு இருந்தது.

'லேனா! குவைத்தில், டீத்துாள் பாக்கெட் வாங்கினேன் அல்லவா? அதில் ஒன்று குறைகிறது. உங்கள் பெட்டியுடன் கலந்திருக்குமா பாருங்களேன்...' என்றார்.

'பக்' இரண்டு.

'வாய்ப்பு இல்லையே, சார். நான் இன்னும் என் பெட்டியை திறந்து பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கூப்பிடுகிறேன். திரும்ப கூப்பிட்டால் தொந்தரவு இல்லையே...' என்றேன்.

'எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க...' என்றார்.

பெட்டியை திறந்து பார்த்தால்...

ஆம்! டீ பாக்கெட் இருந்தது.

'ஐயோ! நம்மைப் பற்றி என்ன முடிவிற்கு வருவாரோ தெரியவில்லையே... எப்படி இந்த தவறு நடந்திருக்கும்...'

'பிளாஷ்பேக்' ஓட்டினேன்.

என் பெட்டியையும், இளையராஜா பெட்டியையும், 'பேக்' செய்தவர்கள், இளையராஜாவின் பெட்டியில் இடம் இல்லாமல் போகவே, என் பெட்டியில் வைத்து விட்டு, அதைச் சொல்லாமல் விட்டு விட்டனர்.

போச்சு! மிஞ்சப் போவது திருட்டு பட்டம் தானா? அவருக்கு போன் செய்து, 'இருக்கு சார்...' என்றேன், எடுத்த எடுப்பில்.

'பேக்கிங் செய்தவர்கள் உங்களிடம் சொல்லி இருக்கலாம்ல?' என, சரியாக நாடி பிடித்ததில் எனக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

என் மகன், அரசு ராமநாதனின் திருமணத்திற்கு இளையராஜாவை அழைக்க முடிவு செய்தேன்.

'உங்களுக்கு தெரியுமே லேனா! நான், திருவண்ணாமலை கிரிவலத்தில் இருக்கும் நாள் அது...' என்றதும், எனக்கு, 'பொசுக்' என, ஆகிவிட்டது.

ஒரு வாரம் ஆகியிருக்கும். இளையராஜாவிடமிருந்து போன் அழைப்பு!

'என்ன சார், இப்படி ஆச்சரியப்படுத்துறீங்க...' என்றேன்.

'நாளைக்கு மகன், மருமகளோட என் வீட்டிற்கு வர முடியுமா? குடும்பத்தோட வாங்க...' என்றார்.

'என்ன சார் சொல்றீங்க?' எனக்கு தலை, 'கிர்' என்றது.

என்னை மட்டும் அமர வைத்து, இளையராஜாவின், 'ட்ரூப்' முழுவதுமாக அமர்ந்து இசை வாசித்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது.

தி.நகர், முருகேசன் தெருவில் உள்ள, அவரது வீட்டில், இரு கார்களில் நாங்கள் போய் இறங்கியதும், வாட்ச்மேன் கூட மிரண்டு போனார்.

மகனுக்கும், மருமகளுக்கும் பரிசுகள் கொடுத்தார். அவரது மிகப்பெரிய பூஜை அறைக்கு அழைத்துப் போய், அங்கு இருவருக்கும் ஆசிகள் வழங்கினார்.

'இந்த பூஜை அறையில் ஜேசுதாஸ் வந்து பாடுவார். நானும், அவரும் மட்டும் தான் இருப்போம்...' என்றார்.

எனக்கு இது செய்தியாக இருந்தது.

'லேனா, நன்றாக பாடுவான்...' என, என் அக்கா லட்சுமி முருகப்பன் சொல்லப் போக, நான் மிரண்டேன்.

'சும்மா பாடுங்க. 'ரெக்கார்டிங்'கா பண்ணப் போறேன்?' என்றார், இளையராஜா.

இளையராஜா, நாற்காலியில் அமர்ந்து கொள்ள, நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்து கொண்டோம்.

எப்படியோ பாடி விட்டேன்.

இளையராஜா ஒன்றும் சொல்லவில்லை. ஒரு சிங்கத்தின் முன் குதியாட்டம் போட்ட மான்குட்டியின் கதையாய் ஆகிவிட்டது, என் கதை. கடித்து குதறாமல் விட்டதே பெரிய விஷயம். அவர் முன் பாடியதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பாய் வருகிறது.

அடுத்த ஆளுமை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பேரும், புகழும் அடைந்து விட்ட ரஜினியை, இன்று பலரும் ஏகமாய் கொண்டாடுகின்றனர். ஆனால், இவரது, பதினாறு வயதினிலே படத்தையும், பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படத்தையும் பார்த்த பின், 'தமிழ் திரையுலகை பெரும் கலக்கு கலக்கப் போகிறார், இவர்...' என, வெகு முன்னரே கணித்தேன். இப்படி ஒரு, 'கிராண்ட் என்ட்ரி'யை, எத்தனை நடிகர்களால் கொடுக்க முடியும்?

கடந்த, 1977ல், 'கல்கண்டு' இதழ் பொறுப்பை ஏற்றேன். இதே ஆண்டு தான், பதினாறு வயதினிலே படமும் வெளியானது.

ரஜினியை பேட்டி காண முடிவு செய்து, சதுரங்கம் படப்பிடிப்பு நடக்கும், பிரசாத் ஸ்டூடியோவிற்கு புறப்பட்டேன்.

அப்போதெல்லாம் அப்பாயின்மென்டாவது, கிப்பாயின்மென்டாவது? நேரே கிளம்பி விட்டேன்.

எங்கள் முதல் சந்திப்பு சற்றே சுவையானது.



தொடரும்.

லேனா தமிழ்வாணன்







      Dinamalar
      Follow us