
கருப்பு என்றால் கேவலமா?
என் உறவினர் மகனுக்கு பெண் பார்க்க சென்ற வரன் வீட்டார், 'பொண்ணு ரொம்பவும் கருப்பா இருக்கே...' என, முகம் சுளித்தனர்.
வரனின் தந்தையோ, 'பொண்ணு கருப்பா இருந்தாலும் எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க, எனக்கு சம்மதம். ஆனா, ஒரு நிபந்தனை. வரதட்சணையாக, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் தரணும். என்ன சொல்றீங்க?' என, பெண்ணின் அப்பாவை கிடுக்குப்பிடியாய் கேட்டார்.
'இல்லீங்க. 10 லட்சம் ரூபாய் தர்ற அளவுக்கு, நாங்க வசதியானவங்க கிடையாது. வேற இடம் பார்த்துக்கங்க...' என, சொல்லி விட்டார், பெண்ணின் அப்பா.
அதன் பின், மகனுக்கு பல இடங்களில் பெண் தேடி அலைந்திருக்கின்றனர்.
'சிவப்பு நிறம் தான் கிடைக்கவில்லை. மாநிறப் பெண்ணாக இருந்தாலும் சொல்லுங்கள்...' என, திருமண தரகர்களிடம் சொல்லி வைத்தும் பலனில்லை.
இறுதியில், வேறு வழியின்றி முதலில் பார்த்த அந்த கருப்பு நிறப் பெண்ணையே முடித்து விடலாம் என, பெண்ணின் அப்பாவை அணுகினார்.
அவரோ, 'உங்க மகனுக்கு என் பெண்ணை தர சம்மதம். ஆனால், ஒரு நிபந்தனை. எங்களுக்கு, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் தரணும்...' என்றார். அவ்வளவு தான். முகம் தொங்கியபடி, விடை பெற்றார், பையனின் அப்பா.
கருப்பு நிறத்தை குறையாக எண்ணி, கல்யாண சந்தையில் லாபம் ஈட்டி விடலாம் என, நினைப்பவர்களுக்கு இந்நிகழ்வு சரியான சவுக்கடி தானே!
— கே.ஜெகதீசன், கோவை.
வாழ்ந்து காட்டி போதிக்கலாமே!
வெளியூரிலுள்ள என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தேன்.
அவர் வீடு இருக்கும் பகுதியில், தனியார் கல்லுாரி ஒன்று இயங்கி வருகிறது. அதில் பயிலும் மாணவர்கள், கல்லுாரியின் எதிரிலுள்ள காபி ஷாப்புக்கு, காபி குடிக்க வந்து போவதைக் கவனித்தேன்.
அவ்வாறு காபி ஷாப்புக்கு வரும் மாணவர்கள், டீ, காபி குடித்துவிட்டு புறப்படும் போது, கடையைச் சுற்றிலும் சிதறிக் கிடக்கும் குப்பைகளை சேகரித்து, அங்குள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததை கவனித்தேன்.
இதுபற்றி, அந்த காபி ஷாப் உரிமையாளரிடம் விசாரித்தேன்.
'கல்லுாரியில் பயிலும் சீனியர் மாணவர் ஒருவர், காபி குடிக்க வரும்போதெல்லாம், சக மாணவர்கள் முன், குப்பைகளை அகற்றிவிட்டு செல்வதை, வழக்கமாக வைத்திருந்தார். முதல் ஆளாக, அந்த மாணவர் துவங்கிய நற்செயல், அடுத்து அவருடைய நண்பர்கள், அதற்கடுத்து மற்ற மாணவர்கள் என, அனைவரையும் செய்யும்படி துாண்டிவிட்டது.
'இப்போது என் காபி ஷாப்புக்கு வரும் பெரும்பாலானோர், குப்பைகளை குப்பைத் தொட்டியிலேயே போட்டு விடுகின்றனர். அதையும் மீறி, புதியவர்கள் போடும் குப்பைகளை, அவர்கள் அகற்றி விடுகின்றனர்...' என்றார்.
'எறும்பை பாருங்கள், அவை யாருக்கும், எதையும் போதிப்பதில்லை. அவை வாழ்ந்து காட்டுகிற முறையே மற்றவருக்கான போதனை...' என்றார், பெஞ்சமின் பிராங்க்ளின்.
அதைப்போல, யாருக்கும் அறிவுறுத்தாமல், யாரையும் வற்புறுத்தாமல், தன் செயலைப் பார்த்து, மற்றவர்களையும் திருந்தச் செய்ததோடு, அந்த நல்ல செயலை தொடர்ந்திடவும் துாண்டிய, சீனியர் மாணவரின் முயற்சி, உண்மையிலேயே பாராட்டுக்கும், பின்பற்றுதலுக்கும் உரியது.
வடிவேல் முருகன், நெல்லை.
அச்சக உரிமையாளரின் புதிய முயற்சி!
உறவினரது வீடு கிரகப்பிரவேசத்துக்கு சென்றேன். அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும், மெயின் ரோட்டின் முனையிலிருந்து, சிறியதான இரும்பு ஸ்டாண்டு வைத்து, அதில், கிரகப்பிரவேச விழா, 'போஸ்டர்' ஒட்டப்பட்டு, கூடவே, போஸ்டரில் அம்புக்குறி அறிவிப்பும் இருந்தது.
இப்படியே வழி நெடுகிலும், ஆங்காங்கே ஸ்டாண்டு வைக்கப்பட்டு இருந்தது. அந்த அடையாளத்தை பார்த்து, சுலபமாக வீட்டை அடைந்தோம்.
உறவினரிடம், 'இந்த ஏற்பாடு சூப்பராக இருக்கிறது. யாரிடமும் வழி கேட்க வேண்டியது இல்லை...' என்றேன்.
'அச்சகம் வைத்துள்ள நபர், விசேஷ வீடுகளுக்கு, வழிகாட்டி ஸ்டாண்டு வைத்து, அதில் போஸ்டர் ஒட்டி தருவதையும் வேலையாக கொண்டுள்ளார். விழா முடிந்ததும், போஸ்டரை அகற்றி, ஸ்டாண்டை எடுத்து சென்று விடுவார்.
'இதனால், இவருக்கு நிறைய, 'ஆர்டர்' வருகிறது. அச்சகத்தில் கிடைத்த வருமானத்தை விட, இதில் நிறைய வருமானம் கிடைக்கிறது...' என்றார், உறவினர்.
அந்த நபரின் வித்தியாசமான முயற்சியை பாராட்டினேன்.
சூழ்நிலை மற்றும் காலத்திற்கு ஏற்ப, தொழிலில் வித்தியாசத்தை புகுத்தினால், நன்கு வருமானம் ஈட்டலாம் என்பதற்கு, இதுவே சான்று!
- எம்.மொவன்குட்டி, கோயம்புத்துார்.