/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
இது விசேஷம் இது வித்தியாசம்: மரத்திற்கு ஒரு கோவில்!
/
இது விசேஷம் இது வித்தியாசம்: மரத்திற்கு ஒரு கோவில்!
இது விசேஷம் இது வித்தியாசம்: மரத்திற்கு ஒரு கோவில்!
இது விசேஷம் இது வித்தியாசம்: மரத்திற்கு ஒரு கோவில்!
PUBLISHED ON : ஏப் 20, 2025

மரம் வளர்ப்போம் என்பது, வெற்றுக் கோஷமல்ல. மகாபாரதக் காலத்திலேயே மரங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமாக, ஒரு அரசமரத்துக்கு கோவிலே எழுப்பியுள்ளனர், முன்னோர். இந்த கோவில், கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூர் மாவட்டம், விதுராஸ்வதா கிராமத்தில் உள்ளது.
மகாபாரதத்தில் முக்கிய பாத்திரம், விதுரர். கவுரவர்களின் தந்தை திருதராஷ்டிரனின், சகோதரர். இவரது தந்தை, வியாசர். தாய், பராஷ்ரமி என்ற பணிப்பெண். முற்பிறப்பு ஒன்றில் சிறுவனாக இருந்த, விதுரர், பட்டாம்பூச்சிகளின் மீது முள்ளைக் குத்தி, அவை வேதனையுடன் பறப்பதைப் பார்த்து, ரசித்தார்.
இதன் விளைவாக மறுபிறப்பில், மாண்டவ்யர் என்ற முனிவராகப் பிறந்தார். செய்யாத திருட்டு குற்றத்துக்காக அவமானப் படுத்தப்பட்டார். உடலில் ஆணி அடிக்கப்பட்டும், கழுவில் ஏற்றப்பட்டும் கொல்லப்பட்டார்.
எமலோகம் சென்றதும், முற்பிறப்பில் செய்த தவறுக்காக, தனக்கு மறுபிறப்பில் இப்படி ஒரு தண்டனை கிடைத்ததை அறிந்தார், மாண்டவ்யர்.
எமதர்மனிடம், 'குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறைத் திருத்த வேண்டியது, பெற்றோர் கடமை. எனவே, குழந்தைகள் தவறு செய்தால், அதில் பாதி பாவம், பெற்றோரை சேர வேண்டும்...' என, வேண்டுகோள் வைத்தார், மாண்டவ்யர்; அதை ஏற்றார், எமதர்மன்.
இருப்பினும், அறியாமல் செய்த பாவத்துக்கு தண்டனை தந்த எமதர்மனை, பூமியில் மனிதனாகப் பிறக்க சாபமிட்டார்.
எமதர்மனும், விதுரராகப் பிறந்தார். அவரை பலர் முன்னிலையில், 'வேலைக்காரி பெற்ற மகனே...' என, அவமானப்படுத்தினர், கவுரவர்கள். மனமுடைந்து, அவர்களை விட்டு பிரிந்தார், விதுரர்.
பாரதப் போரில், போர்க்களத்தில் ரத்த ஆறு ஓடியதைப் பார்த்து, மன அமைதிக்காக, தீர்த்த யாத்திரை புறப்பட்டார், விதுரர். வழியில் மைத்ரேய மகரிஷியை சந்தித்தார்.
'அரச மரக்கன்று ஒன்றை நட்டு பராமரித்து வந்தால், மன அமைதி கிடைக்கும்...' என்றார், மைத்ரேயர். அவ்வாறு அவர் அரசமரம் நட்ட இடமே, 'விதுராஸ்வதா' ஆனது. அஸ்வதா என்றால் அரசமரம். விதுரர் நட்டதால், விதுராஸ்வதா ஆனது.
பிற்காலத்தில் இங்கு கோவில் எழுந்தது. சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் சுதை சிற்பங்கள், கோவில் வாசலில் அமைக்கப்பட்டன.
விதுரர் நட்ட மரம், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பின், 2001ல் சாய்ந்து விட்டதாக சொல்கின்றனர். அதன்பின், புதிய மரம் நடப்பட்டது. மரத்தின் கீழ் ஏராளமான நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சுதந்திரப் போராட்ட காலத்தில், இங்கு தேசியக்கொடி ஏற்ற முயன்ற, 35 வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால், இவ்வூரை, 'தெற்கு ஜாலியன் வாலாபாக்' என அழைக்கின்றனர். அந்த நினைவுச் சின்னமும் இங்கு உள்ளது.
பெங்களூருவிலிருந்து பல ரயில்கள் விதுராஸ்வதா கிராமத்துக்கு செல்கின்றன. சாலை மார்க்கத்தில், தும்கூர் வழியாக செல்லலாம். 86 கி.மீ., துாரம். காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
தி. செல்லப்பா