/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இப்படிக்கூட வாய்விட்டுச் சிரிப்பாரா ஜெயலலிதா! (9)
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இப்படிக்கூட வாய்விட்டுச் சிரிப்பாரா ஜெயலலிதா! (9)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இப்படிக்கூட வாய்விட்டுச் சிரிப்பாரா ஜெயலலிதா! (9)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: இப்படிக்கூட வாய்விட்டுச் சிரிப்பாரா ஜெயலலிதா! (9)
PUBLISHED ON : மார் 02, 2025

எங்கள் இல்லத்துத் திருமண அழைப்பிதழைப் பார்த்து, ஜெயலலிதா, இது, காதல் திருமணமா என்று கேட்ட கேள்வியை, நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நாங்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
ஜெயலலிதாவே மவுனத்தைக் கலைத்தார்.
'பெண், மலேசியா என்று போட்டிருக்கிறதே, அதனால் தான் கேட்டேன்...' என்றார்.
'தமிழகம் தான் மேடம்! உங்கள் பக்கம் தான். முந்தின தலைமுறையிலேயே மலேசியாவிற்கு போய் அங்கேயே, 'செட்டில்' ஆன குடும்பம்...' என்றேன்.
'அப்படியே இருந்தாலும், காதல் திருமணமா இருக்கலாம்ன்னு யோசிச்சேன்...' என்றார்.
நான் பதில் சொல்வதற்குள், முந்திக் கொண்ட தங்கை மகன், மணிகண்டன், 'இனிமேல் காதலிக்க ஆரம்பிச்சுடுவாங்க, மேடம்...' என்றானே பார்க்கலாம்!
ஜெயலலிதாவின் முன் உதிர்க்க வேண்டிய ஜோக்கா இது.
ஆனால், ஜெயலலிதா சிரித்தார் பாருங்கள்... அப்படி ஒரு சிரிப்பு.
ஜெயலலிதா இப்படிக் கூட வாய்விட்டு கலகலவென்று சிரிப்பாரா என்று, வியக்குமளவுக்கு இருந்தது.
இப்படிப்பட்ட சிரிப்பை இதற்கு முன்னும், அதற்கு பின்னும் நான் பார்க்கவோ, கேள்விப்படவோ இல்லை.
ரசிக்க வேண்டிய ஜோக் தான் என்றாலும், தங்கை மகன் தயக்கமில்லாமல் நொடிப் பொழுதில் உதிர்த்த இந்த ஜோக்கை, ஜெயலலிதா நல்ல தொனியில் எடுத்துக் கொண்டது, அவர் உற்சாகமான மனநிலையில் இருந்தார் என்பதை, சொல்லாமல் சொல்லியது.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று, நான் ஒரு கொக்கியைப் போட்டேன்.
'உங்களோடு பேச, சற்று நேரம் எடுத்துக் கொள்ளலாமா, மேடம்?'
பதில், உடல் மொழியாக வந்தது. வலக்கையை நன்கு நீட்டி, தாராளமாக என்பது போல் சம்மதம் தந்தார்.
'ஊர்ல திருமணம் முடிஞ்சுது, மேடம். இங்க பக்கத்துல, ஏவி.எம்.ராஜேஸ்வரியில் தான் வரவேற்பு. நீங்க அவசியம் வந்து மணமக்களை வாழ்த்தணும்...' என்றேன்.
ஒரு சில வினாடிகள் அமைதி காத்தார்.
திருமண அழைப்பிதழ் கொடுக்க வருகிறோம் என்று கேட்ட போது, சம்மதம் வந்து விட்டதால், அதுவே திருமணத்திற்கு வருவதான சம்மதமாகத் தானே இருக்க முடியும் என, கணக்குப் போட்டேன்.
ஜெயலலிதா, அந்த சில வினாடியில் காத்த மவுனம், இன்னொரு, 'பிளாஷ்பேக்'கையும் என் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
பத்திரிகையாளர்களுடன் ஜெயலலிதா, இடைவெளி காத்த நேரம் அது.
ஜெயலலிதாவுக்கு, 'துக்ளக்' சோ மீது மட்டும் தான் நன்மதிப்பு இருந்தது. வேறு எந்த பத்திரிகையாளர்களும் அவரை நெருங்கவே முடியாது என்ற நிலை.
ஜெயலலிதாவின் தனிமைப் போக்கு, அவரைப் பற்றி பலதரப்பட்ட கருத்துகளை, பத்திரிகையாளர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.
மக்கள் ஆதரவு போதும், நீங்கள் எதற்கு குறுக்கே என, அவர் எண்ணுகிறாரோ என, பத்திரிகை உலக சகோதரர்கள் ஊகம் செய்யவும், அப்போது சூழ்நிலை இருந்தது.
இப்படி சிறிய அளவில் ஆரம்பித்த இடைவெளி, ராஜபிளவையாக மாற ஆரம்பித்தது. அவ்வாறு நடக்கும்படியான சூழ்நிலைகள் தொடர்ந்து நிலவும்படியாகவே ஜெயலலிதாவின் சில நிலைப்பாடுகளும் இருந்தன.
பத்திரிகையாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டால், அவர்கள் தங்கள் பேனாக்களை, வாள் சுழற்றுவதைப் போல் சுழற்ற ஆரம்பித்து விடுவர்.
ஜெயலலிதாவைப் பற்றி ஊகங்கள், வதந்திகள் அள்ளி விடப்பட்டன. இவை, ஜெயலலிதாவின் கோபத்தை மேலும் கிளறி விட்டிருக்க வேண்டும்.
'என்னை சந்திக்க வந்த போது, உங்களைச் சரிவர உபசரித்தனரா?' எனக் கேட்டார், ஜெயலலிதா.
ஆகா! சப்ஜெக்ட் மாறுகிறாரே!
'நன்றாக மேடம்! கேட்டுக் கேட்டுக் கொடுத்தனர்...' என்றேன்.
ஜெயலலிதாவைத் திரும்பவும் என் கோரிக்கை வளையத்திற்குள் கொண்டு வர விரும்பினேன்.
'வரவேற்பிற்கு அவசியம் வாங்க, மேடம்...' என, சிறு நினைவூட்டலுடன் ஆரம்பித்தேன்.
மறுபடி புன்னகை தான். இந்தப் புன்னகையில், அவர் வருவார் என்ற நம்பிக்கை ஏனோ குறைந்து போனது. இவரைச் சந்திக்க கிடைத்த வாய்ப்பே பெரிதென மனநிறைவு கொள்ளும்படியான மனநிலை, எனக்குள் உருவானது.
பேச நேரம் இருந்ததால், 'உங்கள் மீதான, 'குமுதத்தின்' விமர்சனங்களை எப்படி எடுத்து கொள்கிறீர்கள்?' எனக் கேட்டேன்.
'பத்திரிகைகளுக்கு குறைகளை சுட்டிக்காட்ட உரிமை இருக்கிறது. அதே நேரத்தில், நல்ல விஷயங்களையும் குறிப்பிடலாம் அல்லவா? தாக்குதல் மட்டுமே தொடர்ந்து நடக்கிறது. இதை ஏற்க முடியாதல்லவா?' என்றார்.
'பாராட்டவும் செய்கிறோம், மேடம்...' என்றேன்.
'எனக்கு அப்படித் தோன்றவில்லை...' என்றார்.
வெளிப்படையான கருத்துடன் அவர் பேசியது, அவருக்கே உரிய பாணி.
பொதுவாகவே, பத்திரிகையாளர்கள் மீது அவருக்கு இருந்த வருத்தம், ஆதங்கம் ஆகியவற்றை, இந்த வாக்குமூலத்தின் மூலம் தெரிந்து விட்டது என்றே எனக்குத் தோன்றியது.
இதைத் தாண்டி, சில கடுமையான நடவடிக்கைகளைச் சட்டரீதியாகவும், சட்டம் தாண்டியும் அவர் எடுத்ததாக, என் பத்திரிகையாள நண்பர்கள், என்னிடம் சொல்லியிருக்கின்றனர்.
திருமண வரவேற்பன்று மாலை, முதல் ஆளாக, அ.தி.மு.க., அலுவலகத்திலிருந்து கண்ணியமான தோற்றமுடைய ஒருவர், பெயர் மகாலிங்கம் என்று நினைவு, 'மேடம் கொடுக்கச் சொன்னாங்க...' என்று, ஒரு பெரிய பார்சலையும், பூங்கொத்தையும் கொடுத்தார்.
பார்சல் நன்கு கனத்தது.
வாழ்த்த வந்தவர்கள் குவியவே, இந்தப் பார்சல் பற்றி மறந்தே போனேன்.
திருமண வரவேற்பின் எல்லாப் பரபரப்புகளும் அடங்க, ஒரு வாரம் ஆயிற்று. ஒருநாள் மாலை, குடும்பத்தினர் அனைவரும் வட்டமாக அமர்ந்து பார்சல்களை பிரிக்க ஆரம்பித்தோம்.
நான் தான் கேட்டேன்.
'ஜெயலலிதாம்மா கொடுத்த பார்சல் எங்கப்பா? எடுங்க அதை...' என்றேன்.
குன்றெனக் குவிந்து கிடந்த, முரட்டு முரட்டு பார்சல்களை விலக்கி, ஜெயலலிதா தந்த பார்சலை என்னிடம் தந்தனர். பிரித்துப் பார்த்தால், பெரு வியப்புக் காத்திருந்தது.
இன்று அதன் மதிப்பு, லட்ச ரூபாய்க்கு மேல்!
அது என்ன பரிசு என, நீங்கள் ஊகித்து விட்டீர்களா?
- தொடரும்.
- லேனா தமிழ்வாணன்