
ஹிந்தியால் வாழும் பெண்மணி!
தனியார் பேருந்து ஒன்றில், ஓட்டுநர் வேலை செய்து வந்த நண்பர் ஒருவர், உடல் நலமின்றி இறந்து விட்டார். அவருக்குச் சொந்தமான வீடு தவிர, வேறு எந்த சொத்துக்களோ, சேமிப்போ இல்லாததால், கல்லுாரி பயிலும் மகன் மற்றும் மகளுடன் தத்தளித்தார், அவரது மனைவி.
அப்போது, அவருடைய குடும்ப நிலையை அறிந்திருந்த சக ஓட்டுநர்கள், ஆலோசனை ஒன்றைக் கூறினர்.
அடுத்த ஆறே மாதங்களில், ஹிந்தி மொழியில் எழுதவும், படிக்கவும், பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
அதன் பிறகு, பிட் நோட்டீஸ் அச்சடித்து, சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகித்தும், உள்ளூர் 'டிவி' சேனல்களில் விளம்பரங்கள் செய்தும், வாடிக்கையாளர்களைப் பிடித்து, மாதம் ஒருமுறை, பேருந்தில் வடமாநில ஆன்மிக சுற்றுலா அழைத்துப் போய் வரும் தொழில் செய்யத் துவங்கினார்.
சுற்றுலா அழைத்துப் போகும் இடங்களில், ஹிந்தியில் சரளமாகப் பேசி, பாதுகாப்பாகவும், திருப்தியாகவும் பார்க்க உதவுகிறார் என்பதால், அவருடன் செல்வதற்கு, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதன் மூலம், ஒவ்வொரு மாதமும், குறைந்தது, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்க, வாழ்க்கை பற்றிய பயம் சிறிதுமின்றி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார்.
— வி.ஆதித்த நிமலன், கடலுார்.
காலத்திற்கு ஏற்ற கோலம்!
தம்பியின் மகன், வீட்டிற்கு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் வந்தான்.
'என்னப்பா புதிதாக வாங்கி இருக்கிறாயே?' என்றேன்.
'இல்லை. வாடகை, 'இ-ஸ்கூட்டர்' இது...' என்றான்.
அதுபற்றி விபரம் கேட்டேன்.
'வீட்டிற்கு பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், இந்த வாகனத்தை வாடகைக்கு விடுகின்றனர். ஒருநாள் வாடகை, 250 ரூபாய். முழுவதும், 'எலக்ட்ரிக் சார்ஜ்' செய்து வைத்திருப்பர்.
'நம் ஆதார் கார்டு மற்றும் மொபைல்போன் எண்ணை வைத்து, அவர்களுடைய மொபைலில், 'என்ட்ரி' செய்து, ஜி.பி.ஆர்.எஸ்., உடன் இணைத்து விடுவர். வண்டி எங்கே போகிறது, எங்கே இருக்கிறது என்பதை எல்லாம், 'ட்ராக்' செய்து கொண்டே இருப்பர்.
'குறிப்பிட்ட நேரத்திற்கு முன், நாம் வண்டியை எடுத்து சென்று நிறுத்திவிட வேண்டும். வீட்டில் அப்பாவின், பைக் மட்டுமே இருப்பதால், வெளியே வேலை இருந்தால் இப்படி, 'இ-ஸ்கூட்டரை' வாடகைக்கு எடுத்து கொள்வேன்...' என்றான்.
மேலும், 'தினமும் வியாபாரம் செய்பவர்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்...' என்று கூறினான்.
வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டிய காலம் போய், வாடகைக்கு, 'இ-ஸ்கூட்டர்' எடுத்து ஓட்டும் காலம் இது. காலத்திற்கு ஏற்ற கோலம் என்பது இது தானோ?
— கா.பசும்பொன், மதுரை.
கோபத்தை குறைக்க வேண்டுமா?
சமீபத்தில், என் நண்பனை பார்க்க அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவன் வீட்டின் பின்புறமிருந்த தோட்டத்தில், காய்ந்த மற்றும் பழுப்பு நிற இலைகளை அகற்றி, சுத்தம் செய்து கொண்டிருந்தான்.
என்னை வரவேற்றவனிடம், 'என்னடா குப்பைகளை கூட்டிக் கொண்டு இருக்கிறாய்?' என்றேன்.
உடனே அவன், 'நான் ரொம்ப கோபமாக உள்ளேன்...' என்றான்.
இதைக் கேட்ட நான், 'ஏன்டா... நான் கேட்டதற்கும், நீ சொல்றதுக்கும் என்னடா சம்பந்தம்?' என்றேன்.
தன் கையிலிருந்த துடைப்பத்தை கீழே போட்டு விட்டு, என் அருகில் வந்தவன், 'எனக்கு எப்ப எல்லாம் கோபம் வருகிறதோ, அச்சமயங்களில் எல்லாம், என் கோபத்தை, இதுபோன்று வேலைகள் செய்வதனால் தீர்த்துக் கொள்வேன்.
'இன்று காலை எனக்கும், என் மனைவிக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது, என்னை மட்டம் தட்டி, அவமானப்படுத்தி பேசி விட்டாள். அது, எனக்குள் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
'ஏதோ கோபத்தில், ஒரு சில வார்த்தைகள் பேசினாலும், என் மீது அதிக அன்பு வைத்துள்ளாள். மறுநாளே சகஜமாக பேசுவாள். ஆனாலும், எனக்கு ஏற்பட்ட கோபத்தை தணித்துக் கொள்ள, தோட்டத்தில் குப்பைகளை அகற்றுவது, மரக்கன்று நடுவது, 'டாய்லட்' மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது...
'வீட்டில் ஒட்டடை அகற்றுவது, சாக்கடையை சுத்தம் செய்வது, பீரோவில் உள்ள துணிகளை மடித்து வைப்பது, இருசக்கர வாகனத்தை கழுவி சுத்தம் செய்வது என, என் கோபம் தீரும் வரை செய்வேன். என் கோபமும் போய்விடும்; பயனுள்ள வேலை செய்தோம் என்ற திருப்தியும் எனக்கு ஏற்படும். ஒரே கல்லில், இரண்டு மாங்காய்...' என்றான்.
அவனது அணுகுமுறையை பாராட்டினேன்.
— எஸ்.நரசிம்மன், சென்னை.