PUBLISHED ON : மார் 02, 2025

பெண்ணே!
சாத்தான்கள் ஓதிடும்
வேதங்களிலிருந்து விலகி வா...
ஆறாவது அறிவை
பயன்படுத்தத் தவறிடாதே!
கானல் நீரை
உண்மையென நம்ப வைத்து
உன்னை திசை திருப்பி
குட்டையைக் குழப்பிவிட
காத்திருக்கும் சுயநலவாதிகளிடம்
சிக்கிக் கொள்ளாதே!
புதுமைப் பெண்
புரட்சிப் பெண் என்ற
போதையில் சிக்கி
கலாசாரம், பண்பாடு எனும்
மதிப்புமிகு பாதையிலிருந்து
விலகிப் போய் விடாதே!
புகழ்ச்சிக்கும்
போலியான வர்ணனைக்கும்
மதிமயங்கிப் போய்
கற்புக்குத் துாண்டிலிடும்
கயவர்களிடம் ஏமாந்து விடாதே!
உன்னை விட
இமயம் உயரமில்லை...
உன் உள்ளத்தின் உறுதியை விட
இரும்பு திடமில்லை...
தன்னம்பிக்கையை ஒருபோதும்
கைவிட்டு கலங்கி நிற்காதே!
உன் அழுகை
உனக்கு ஆயுதமென்று கூறும்
அபத்தமான கருத்தை
ஏற்றுக் கொண்டு ஏமாந்து
எதிர்த்திடும் திராணியற்று
மூலையில் முடங்கி விடாதே!
உதவிகளில் உள்நோக்கமும்
ஆறுதலில் கள்ளத்தனமும்
ஒளித்து வைத்து
உன்னை அணுகும் கயவர்களின்
அடையாளத்தைக் கண்டு
தப்பித்துக் கொள்...
அப்பாவியாய் நம்பி விடாதே!
போராட்டம் இல்லாத
வாழ்க்கை எவருக்குமில்லை...
எதிர்ப்புகள் இல்லாத
ஏற்றங்கள் சுவைப்பதில்லை!
தடைகளைத் தாண்டாமல்சாதனைகள் நிகழ்வதில்லை...
தோல்விகளைக் கடக்காமல்
வெற்றிகள் கிட்டுவதில்லை...
மங்கையே இதை மறந்து விடாதே!
— இந்திராணி ஆறுமுகம், கடலுார்.