/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: சொல்லாடல்களும், வார்த்தை விளையாட்டுகளும்! (5)
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: சொல்லாடல்களும், வார்த்தை விளையாட்டுகளும்! (5)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: சொல்லாடல்களும், வார்த்தை விளையாட்டுகளும்! (5)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: சொல்லாடல்களும், வார்த்தை விளையாட்டுகளும்! (5)
PUBLISHED ON : பிப் 02, 2025

என் தலைமகன், அரசு ராமநாதனின் திருமண வரவேற்பு, சென்னை, ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெறுவதாக முடிவானதும், அப்போதைய முதல்வர் கருணாநிதியை அழைக்க விரும்பினேன்.
கருணாநிதியை சந்திக்க நேரம் வாங்குவது கடினமானதோ, இயலாததோ அல்ல. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர்களிலேயே, அவருக்கு இணையாக எவரையும் சொல்ல முடியாது.
காட்சிக்கு எளியவர். அதுவும், எழுத்தாளர்கள் என்றால் தனி அன்பு, மதிப்பு.
தி.மு.க., இலக்கிய அணிச் செயலராக இருந்த, கயல் தினகரனிடம் சொன்னதுமே, 'நானாயிற்று...' என, முன்வந்தார்.
நாள், நேரம் குறித்தாயிற்று. சாதாரணமாகவே நான், திருக்கழுக்குன்ற கழுகு. கருணாநிதி தந்த நேரம் என்றால், கேட்க வேண்டுமா? 15 நிமிடங்கள் முன்னதாகவே கோபாலபுர வீட்டில் இருந்தோம். என்னை வரவேற்ற ஒருவர், அமர வைத்து, 'என்ன சாப்பிடுகிறீர்கள்?' என்றார். இதமாக மறுத்தோம்.
கருணாநிதியின் தனி செயலர், சண்முகநாதன், அந்த நேரம் வந்திருக்கவில்லை.
எங்களை உபசரித்த அந்த நபர், 'தவறா நினைக்கலைன்னா, ஒண்ணு கேட்கட்டுமா?' என்றார்.
'கேளுங்க...' என்றேன்.
'கையில் பழம், சால்வை எதுவும் கொண்டு வர மறந்து விட்டீர்களா அல்லது காரில் உள்ளதா?' என்றார்.
ஆந்தை போல் முழித்தேன், நான். தினகரனை பார்த்தேன்.
'எனக்கும் தோணலை. சொல்ல விட்டுட்டேன்...' என்றார்.
'நான், பத்திரிகையாளன். இந்த மரபுகளைப் பின்பற்றி பழக்கமில்லை...' என்றேன்.
'தலைவர் குளித்து தயாராகி கொண்டிருக்கிறார். நேரம் இருக்கிறது. பக்கத்தில் கடைகள் இருக்கு...' என்றார்.
'பரவாயில்லை...' என்றேன்.
'இவன் சுத்த விளங்காதவனாக இருக்கிறானே...' என்பது போல், என்னை பார்த்தார், அவர்.
உள்ளே நுழைந்த, கருணாநிதியின் தனி செயலர், சண்முகநாதன், (சந்தன நிற சபாரி அணிந்து, தலைவர் பின் அமர்ந்தபடி குறிப்பு எழுதுவாரே, அவர்!) கயல் தினகரனை நலம் விசாரித்தபடி, தன் இருக்கைக்குப் போய் விட்டார்.
'மாடிக்கு வாங்க! தலைவர் அழைக்கிறார்...' என்றார், அந்த சால்வை சிபாரிசுக்காரர்.
புன்னகையுடன் எழுந்து நின்று வரவேற்றார், கருணாநிதி.
'நான், சின்னப் பையன். (அப்போதுங்க!) என்னை எழுந்து நின்று வரவேற்பதா?' என்றேன்.
'குமுதம் நிகழ்ச்சியில பார்த்தது உங்களை...'
'ஆமாங்கய்யா!'
'அப்பா, நல்ல பழக்கம். தாக்கியும், துாக்கியும் எழுதுவாரு. ஆனா, எங்க நட்பு, 'ஸ்டடி'யா இருந்துச்சு...'
கருணாநிதி என்றால், எப்போதும் துாய தமிழ் மட்டுமே பேசுவார் என்று தானே நினைக்கிறோம்! தனிப்பட்ட உரையாடல்களில், அவர் அப்படி இல்லை. உரை நடைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் எல்லாம் கலந்தே பேசுவதை அறிந்து, எனக்கு சற்று வியப்பைத் தந்தது.
'கல்கண்டு இதழ் எப்படிப் போகுது?'
'நல்லாப் போகுதுங்கய்யா!'
'இனிப்புன்னா யாருக்குத் தான் பிடிக்காது?'
(ஆகா! முதல் பஞ்ச்!)
எங்கள் உரையாடலின் போது, அவரது மனைவி தயாளு அம்மாள் தயங்கியபடி உள்ளே வந்து, ஏதோ கேட்க, 'சண்முகநாதனிடம் சொல்லிட்டேன்...' என்றார், கருணாநிதி.
நான் கொடுத்த திருமண அழைப்பிதழை, ஆற அமரப் படித்தார். 'உங்க வீட்லயும், அரசு ஆட்சி செலுத்துறாரா?' என்றார்.
இதைக் கேட்டதும், பெரிதாக சிரித்து விட்டேன்.
சிறு புன்னகையுடன் அவர் உதிர்க்கும் சொல்லாடல்களும், வார்த்தை விளையாட்டுகளும், நகைச்சுவை உணர்வும், உடனுக்குடன் சுவரில் இட்ட பந்தாய் வரும் பதில்களும், அவருடனான சந்திப்பையே மிக சுவராசியமாகவும், இனிதாகவும் ஆக்கிவிடும்.
அவரது உடல் மொழியிலோ, சொற்களிலோ, 'நேரமாச்சு கிளம்பு, கிளம்பு...' என்ற குறிப்பு, சற்றும் இல்லை. சந்திப்பு நேரத்தின் நீட்டிப்பை என் விருப்பத்துக்கு விட்டு விட்டார். நான் தான் அவரது சூழ்நிலை கருதி எழுந்தேன்.
சண்முகநாதனை வரவழைத்து, 'திருமண தேதியை குறிச்சுக்க...' என்றார். இதிலிருந்தே, நிகழ்ச்சிக்கு அவர் வருவது உறுதியாகி விட்டது.
சொன்னது போலவே, திருமண நாளன்று, சரியான நேரத்துக்கு வந்து விட்டார். அவர், திருமண மண்டபத்தில் நுழைந்ததுமே பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
முன்பு, எம்.ஜி.ஆர்., எங்கள் இல்லத் திருமணத்துக்கு வந்த போது, எப்படி ஒரு பரபரப்பு நிகழ்ந்ததோ, அதுபோன்றே இப்போதும் ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது.
ஆனால், இது அரசியல் சார்ந்த நிகழ்வு. ஓர் அரசியல் திருப்பம் சார்ந்த சந்திப்பு அது.
என்னது அது?
ஒரு வாரம் காத்திருங்களேன்.
- தொடரும்.
லேனா தமிழ்வாணன்