
திருநங்கையரின் வித்தியாசமான முயற்சி!
வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கு வந்த திருநங்கையர் இருவர், 2025ம் ஆண்டுக்கான காலண்டர்கள் சிலவற்றை கையில் வைத்துக் கொண்டு, 'மேடம், இதில் உங்களுக்கு பிடித்தமான காலண்டர் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றனர்.
நான், ஒன்றை எடுத்து, அதிலிருந்த விளம்பரத்தை படித்தேன்.
வீட்டு பொருட்கள் வாங்கி தர, வீடு ஒட்டடை அடிக்க, விசேஷ நாட்களில் சாணம் தெளித்து கோலம் போட, வயோதிகர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, வீடு காலி செய்ய என, அச்சடிக்கப்பட்டு, அதன் கீழ், மொபைல்போன் எண்களும் கொடுக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்து, 'இதையெல்லாம் செய்வது யார்? இப்படி காலண்டர் வாயிலாக விளம்பரம் செய்வது புதுமையாக இருக்கிறதே...' என, கேட்டேன்.
அதற்கு, 'திருநங்கையர் ஆறு பேர் சேர்ந்து, வீடு சம்பந்தமான வேலைகள் செய்யும் தொழிலை செய்து வருகிறோம். கடந்த ஆண்டில், 'விசிட்டிங் கார்டு' அடித்து, அதில் விளம்பரம் செய்தோம். ஆனால், 'விசிட்டிங் கார்டு' வழங்கிய போது, வாடிக்கையாளர்கள் மிக மிக குறைவாகவே இருந்தனர்.
'காரணம், 'விசிட்டிங் கார்டு' தொலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. அதுவே, காலண்டர் என்றால் எப்போதும் நம் கண்ணில் பட்டவாறே இருக்கும். எனவே, காலண்டரில் விளம்பரம் செய்தோம். இப்போது, நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது...' என்றனர்.
அவர்களின் வித்தியாசமான சிந்தனையும், முயற்சியையும் பாராட்டினேன்.
மொ.நல்லம்மாள், கோவை.
தியேட்டர் நிர்வாகத்தின் எச்சரிக்கை!
சமீபத்தில், பெங்களூருவில் பணியாற்றும் உள்ளூர் நண்பரைப் பார்த்து வரச் சென்றிருந்தேன். அன்று அவருக்கு விடுமுறை என்பதால், சினிமா பார்த்துவிட்டு, ஹோட்டலில் உணவருந்தி வரலாம் என்று அழைத்து போனார்.
'ஷாப்பிங் மால்' ஒன்றில் இருந்த தியேட்டருக்குச் சென்று அமர்ந்தோம். படம் துவங்கும் முன், திரையில், 'ஸ்லைடு' போடப்பட்டு, 'மைக்'கில் ஏதோ கூறினர்.
'ஸ்லைடு' வாசகங்களும், பேச்சும், கன்னடத்தில் இருந்ததால், எனக்கு ஒன்றும் புரியாமல், கன்னடம் தெரிந்த நண்பரிடம் கேட்டேன்.
'அது ஒன்றுமில்லை. இந்த, மாலில் உள்ள ஒவ்வொரு தியேட்டரிலும், ஷோ ஆரம்பிக்கும் போது, நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்படும் எச்சரிக்கை தான் இது...
'தியேட்டர் வளாகத்தில் மட்டுமின்றி, தியேட்டருக்குள்ளும், சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பதால், பார்வையாளர்கள் கண்ணியத்தை கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில் பதிவாகும் காட்சிகளை வைத்து, போலீசில் புகாரளிக்கப்படும் என்று அறிவிப்பு செய்கின்றனர்...' என்றார்.
தியேட்டர் என்பது பொதுவெளி என்ற சிந்தனையின்றி, அநாகரிகமாக சில்மிஷத்தில் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு முகச்சுளிப்பை உண்டாக்குபவர்களுக்கு, 'செக்' வைக்கும், இந்த நடைமுறையை இங்கேயும் கடைப்பிடிக்கலாமே!
- விஜயன் செல்வராஜ், கள்ளக்குறிச்சி.
புதுவித மோசடி உஷார்!
வேலை தேடிக் கொண்டிருந்த என் நண்பனை, சமீபத்தில் அணுகியுள்ளார், தனியார் நிறுவன ஏஜென்ட் ஒருவர். நண்பனின் பெயரில், தங்கள் செலவில், அவர் சொல்லும் வங்கிகளில் கணக்கு துவங்கினால், ஒவ்வொரு கணக்குக்கும், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை, கமிஷன் தருவதாக கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மேலும் சிலரை, அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்து, வங்கிக் கணக்கு துவங்க வைத்தால், அதற்காகவும் சில ஆயிரங்கள் கமிஷனாக தருவதாக, ஆசை காட்டியுள்ளார்.
யோசித்து சொல்வதாக அவரை அனுப்பியவன், காவல் துறையில் பணியாற்றும், அவனுடைய உறவினருக்கு போன் செய்து, விபரத்தை கூறியுள்ளான்.
அப்போது, அவர் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறான், நண்பன்.
'வேலை தேடும் ஆடவர் மற்றும் பெண்களை குறிவைக்கும் மோசடி கும்பலின் கையாட்கள், பணத்தாசை காட்டி, போலியாக வங்கிக் கணக்கை துவங்க செய்வர். அப்படி துவங்கப்படும் போலி கணக்குகளுக்காக, போலியான அலுவலக முகவரியுடன் கூடிய அலுவலகங்களையும் தயார் செய்து கொள்வர்.
'பொதுமக்களை மிரட்டி, 'ஆன்லைன்' மோசடி செய்து, அந்தப் பணத்தை, போலி வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்ய வைத்து, சுருட்டி கொண்டு தலைமறைவாகி விடுவது தான் அவர்களது நோக்கம்.
'இதன் பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வரும். பிறகு, சிக்கலில் மாட்டி, சிறைக்கு செல்ல நேரும். ஆகவே, மோசடியான ஏஜென்டுகளிடம் எச்சரிக்கையாக இருந்து, அவர்களை பற்றி போலீசில் புகார் கொடு...' என, எச்சரிக்கை செய்துள்ளார்.
நண்பர்களே... இப்படியும் ஒரு புதுவித மோசடி நடப்பதை உணர்ந்து, நீங்களும் உஷாராக இருங்கள்.
டி.லிங்கேஷ் குமார், விழுப்புரம்.