/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்! - எம்.ஜி.ஆருடன் மோதிய என் தந்தை! (1)
/
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்! - எம்.ஜி.ஆருடன் மோதிய என் தந்தை! (1)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்! - எம்.ஜி.ஆருடன் மோதிய என் தந்தை! (1)
அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்! - எம்.ஜி.ஆருடன் மோதிய என் தந்தை! (1)
PUBLISHED ON : ஜன 05, 2025

மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பழகியவர்கள் பெரும்பாலும் வயதில் முதியவர்களாக இருக்கவே அதிக வாய்ப்பு உண்டு.
சரி, மக்கள் திலகம் என, ஏன் குறிப்பிடுகிறேன். பொன்மனச்செம்மல், புரட்சித் தலைவர் என்றெல்லாம் ஏன் குறிப்பிடவில்லை என்று வாசகர்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது.
எம்.ஜி.ஆருக்கு இன்னும் எத்தனையோ பட்டங்கள் உண்டு என்றாலும், அவர் பல காலம் விரும்பிப் பயன்படுத்தியது, 'மக்கள் திலகம்' என்ற பட்டத்தைத் தான்.
இந்தப் பட்டத்தை வழங்கியவர், என் தந்தை, தமிழ்வாணன்.
பத்திரிகையாளர் நவீனனுக்கு, அவரது, 25 ஆண்டுக்கால பத்திரிகை சேவையை பாராட்டி, விழா எடுக்க நினைத்தார், என் தந்தை. விழா அன்று, 25 ஆயிரம் ரூபாய், பொற்கிழியாக வழங்கப்படும் என்றும் அறிவித்து விட்டார்.
முதல் நன்கொடையை, எம்.ஜி.ஆரிடமிருந்து பெற்றால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார், என் தந்தை. தாராளமாக, 5,000 ரூபாய் கொடுத்து, ஆரம்பித்து வைத்தார். எம்.ஜி.ஆர்., உண்மையில் வள்ளல் தான். 60களில், 5,000 ரூபாய் என்பது பெரிய தொகை.
ஆரம்பத் தொகை தான் பெரியதே தவிர, பிறகு வந்த தொகை எல்லாம் குறைவு தான். விழா தேதியையும் அறிவித்தாயிற்று. பணமோ, இலக்கைத் தொடவில்லை; பற்றாக்குறை.
மறுபடி என் தந்தை, எம்.ஜி.ஆரை அணுக, 'அதற்கென்ன தமிழ்வாணன், எவ்வளவு குறைகிறது? அதை நான் தருகிறேன்...' என்று அள்ளிக் கொடுத்தார்.
எம்.ஜி.ஆர்., தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், தமிழ்வாணன் ஓர் இனிய அறிவிப்பை வெளியிட்டார்.
நடந்தவற்றை விளக்கி, 'மக்களாகப் பிறந்தவர்களுள், எம்.ஜி.ஆர்., மிக அரிதானவர். மக்கள் திலகம், அவர். அவரை நாம், இனி மக்கள் திலகம் என்றே அழைப்போம்...' என்று அறிவித்தார்.
எம்.ஜி.ஆருக்கு இந்த பட்டம் மிகவும் பிடித்து போனது.
அதைப் பிரபலப்படுத்த நல்ல வாய்ப்பும் கிடைத்தது. அச்சமயம், எம்.ஜி.ஆர்., படம் ஒன்று முடிந்து, வெளியீடுக்கு தயாராக இருந்தது. பட தலைப்புக்கான பணி மட்டும் பாக்கி இருந்தது. அந்தப் படத்தின் இயக்குனரிடம் பேசிய எம்.ஜி.ஆர்., 'பட தலைப்பில் என் பெயரோடு, தமிழ்வாணன் தந்த, பட்டத்தைச் சேர்த்து விடுங்கள்...' என்று கூறினார். அன்று ஆரம்பித்ததய்யா, இந்தக் காலம் கடந்து வாழும் பட்டம்!
பிறகு, 'திலகம்' மட்டும் பிரிந்து, நடிகர் திலகம், நடிகையர் திலகம், இயக்குனர் திலகம், புரட்சித் திலகம் என்று வளர, 'மக்கள்' புது ஜென்மம் எடுத்து, மக்கள் செல்வம், மக்கள் கலைஞர், மக்கள் செல்வன் என்று அதுவும் புதுப்பாதையில் நடக்க ஆரம்பித்து, வலம் வருகின்றன.
இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர்., - தமிழ்வாணன் நட்புக்கு சில சோதனைகள் வந்தன.
'நடிகர் நாடாளலாமா?' என்று, எம்.ஜி.ஆர்., முதல்வராக பதவியேற்ற புதிதில், தமிழ்வாணன் விமர்சிக்கப் போக, தமிழ்வாணனுக்கு, வழக்கறிஞர் நோட்டீசை அனுப்பிவிட்டார், எம்.ஜி.ஆர்.,
எப்போதுமே, விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் கணக்கில் கொள்ளாதவர், எம்.ஜி.ஆர்., இது எதிராளிக்கு அளிக்கும் முக்கியத்துவமாகப் போய்விடும் என்று அவர் கருதியிருக்கலாம்.
அப்படிப்பட்டவர், இரண்டு லட்சம் ரூபாயை மானநஷ்ட ஈடாக தரவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது ஆச்சரியம். நோட்டீசை அனுப்பிய வழக்கறிஞர் யாரென்றால், முன்னாள் கல்வி அமைச்சரும், இன்றைய அ.தி.மு.க., செய்தி தொடர்பாளரும், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலருமான, சி.பொன்னையன்.
தமிழ்வாணன் அசரவில்லை. அதை அப்படியே, 'கல்கண்டு' இதழில் வெளியிட்டு, பரபரப்பாக்கினார். 'கல்கண்டு' இதழ் அபாரமாக விற்பனை ஆனது.
எம்.ஜி.ஆர்., ஒரு பத்திரிகையாளார் மீது வழக்குத் தொடர முற்பட்டது முதலும், கடைசியும் இது தான்.
விஷயத்திற்கு வருகிறேன். (சீக்கிரம் வாய்யா!)
என் தந்தையின் மறைவுக்கு பிறகும், அவர் மீது எம்.ஜி.ஆருக்குத் தணியாத கோபம் இருக்கலாம் என்பது, என் ஊகமாக இருந்தது.
இந்நிலையில், என் இளவல் - அந்துமணியின் அம்பாசிடர், ரவி தமிழ்வாணனுக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கு எம்.ஜி.ஆரை அழைக்க முடிவு செய்தேன்.
முன்னாள் எம்.எல்.சி., புலவர் அறிவுடை நம்பியின் உதவியுடன், எம்.ஜி.ஆரை சந்திக்க நேரம் பெற்று, ராமாவரம் தோட்டத்திற்குப் போனேன்.
எம்.ஜி.ஆரிடம் அழைப்பிதழை நீட்டி, ஒரு வசனம் பேசினேன், பாருங்கள்!
எம்.ஜி.ஆர்., அசந்து போனார்.
என்னது! வசனமா?
அடுத்த வாரம் சொல்கிறேன்!
— தொடரும்
- லேனா தமிழ்வாணன்

