
முதியவரின் கைத்தொழில்!
சமீபத்தில், எங்கள் தெருவில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் வீட்டினரை அணுகிய முதியவர் ஒருவர், குறைந்த கட்டணத்தில் நம்பர் பிளேட்களை கழற்றி சுத்தம் செய்து, புதிது போல மாற்றித் தருவதாக கூறினார்.
ரொம்ப நாளாக செய்ய நினைத்த வேலை என்பதால், இதை ஒரு வாய்ப்பாக கருதி, என் கார் மற்றும் 'டூ-வீலரின்' நம்பர் பிளேட்டை பழுது பார்த்து தருமாறு கூறினேன்.
இளைஞரைப் போல சுறுசுறுப்பாக இயங்கிய அந்த முதியவரிடம், 'உங்களுக்கு சின்ன வயதிலிருந்தே, இந்த தொழில் தானா?' என்றேன்.
'இல்லைங்க தம்பி, டிங்கரிங் கடையில வேலை பார்த்தேன். அதுல கிடைச்ச வருமானத்தில், என்னோட, மூன்று பசங்களையும் படிக்க வைத்து, கல்யாணமும் செஞ்சு வெச்சு, அவங்களை, 'செட்டில்' பண்ணி விட்டுட்டேன்.
'சில ஆண்டுக்கு முன், என் மனைவி தவறிட்டாள். என்னால முன்ன மாதிரி, டிங்கரிங் வேலை பார்க்க முடியாததால், வீடு வீடாக சென்று, விரும்பறவங்களுக்கு, நம்பர் பிளேட் சரி பண்ணி தந்து, அதுல கிடைக்கிற வருமானத்துல, யாருக்கும் பாரமில்லாம தனியா வாழறேன்...' என்றார்.
என்னிடம் பேசியபடியே, வேலை பார்த்தவர், நம்பர் பிளேட்டில் இருந்த வளைவுகளை சரிசெய்து, துரு அகற்றி, புதிதாக பெயின்ட் செய்து, அழகாக நம்பரை எழுதி, வாகனத்தில் பொருத்தினார்.
அவரின் தொழில் நேர்த்தியை பாராட்டி, கேட்ட கூலியை கொடுத்து அனுப்பினேன்.
வாகனங்களை சர்வீஸுக்கு விடும்போது, பெரும்பாலான மெக்கானிக்குகள், நம்பர் பிளேட்டைப் பொருட்படுத்துவதே இல்லை. அதுபற்றி சிந்தித்து, அதையே ஒரு தொழிலாக்கி வாழ்ந்து வரும் அந்த முதியவரை, வேலை தேடும் இளைஞர்கள் பின்பற்றி முன்னேறலாமே!
— வெ.பாலமுருகன், திருச்சி.
கோவில் திருவிழாவில், வித்தியாசமான ஏற்பாடு!
தன் ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவுக்கு வருமாறு, என்னை அழைத்தார், நண்பர். அவரின் அழைப்பை ஏற்று, நானும் சென்றேன்.
கோவில் திருவிழாவின் வழக்கமான கொண்டாட்டங்களோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, குதுாகலத்தோடு இருந்தனர்.
கோவில் முன், ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பெரிய திரை வைத்து, 'புரஜெக்டர்' மூலமாக, அவ்வூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களின், மணமகன் மற்றும் மணமகள் தேடுவோரின் விபரங்கள், வேலை தேடுவோரின் விபரங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருட்கள் குறித்த விபரங்களையும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.
அது, வித்தியாசமாகவும், மிகவும் பயனுள்ள முயற்சியாகவும் இருந்தது.
திருவிழாவிற்கு வந்த பலரும், திரையில் ஒளிபரப்பாகும் விபரங்களிலிருந்து, அவர்களுக்கு தேவையான முகவரிகளையும், மொபைல் எண்ணையும் குறித்து சென்றனர்.
தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்கும்படி, அவசியமான ஏற்பாட்டை செய்த அந்தக் கோவில் நிர்வாகத்தினரை, மனதார பாராட்டி வந்தேன்!
- ஆர்.செந்தில்குமார், மதுரை.
புத்தாண்டு உறுதிமொழி இப்படியும் இருக்கலாம்!
புது ஆண்டு பிறக்கிறது என்றால், சிலர், 'என் இலக்கை, இந்த ஆண்டு அடைந்தே தீருவேன். இந்தப் பணியை எப்படியாவது முடித்தே தீருவேன்...' என, புத்தாண்டு உறுதிமொழி எடுப்பது வழக்கம். எங்கள் பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஒன்றுகூடி, ஒரு வித்தியாசமான உறுதிமொழி எடுத்துள்ளனர்.
அவர்கள் அனைவரின் தொடர்பு எண்களையும், பெயர் மற்றும் இருப்பிட விபரங்களுடன் நோட்டீஸ் அடித்து, பகுதி மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ளனர். வீட்டு அருகில், சுகாதார சீர்கேடு பிரச்னை, மின்சார பழுது மற்றும் அவசர மருத்துவ உதவி போன்ற எந்தத் தேவை என்றாலும், உடனடியாக அக்குழுவில் இடம் பெற்றுள்ள யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு, பிரச்னைகளைக் கூறலாம்.
அக்குழுவைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களால் முடிந்த பணியை அவர்களே நேரடியாக செய்து கொடுப்பர். இல்லையெனில், அத்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்து, குறைகளை முறையிட்டு, தீர்வுக்கான ஏற்பாடு செய்வர்.
பகுதி மக்களின் நல்வாழ்வுக்கு இளைஞர்கள், இத்தகைய ஓர் அரிய சேவை புரிய தீர்மானித்திருப்பது, அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.
புத்தாண்டு உறுதிமொழியாக மக்கள் சேவையை மனதில் கொண்டு, களமிறங்கும் இந்த இளைஞர் குழுவை, நாமும் மனதாரப் பாராட்டி, வாழ்த்துவோம். இவர்களின் கூட்டு முயற்சியும், நற்பணிகளும் என்றும் சிறந்தோங்கட்டும்!
— எம்.சுப்பையா, கோவை.

