sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நிறைவு!

நிறைவு!

நிறைவு!


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''யமுனா!''

நிலைப்படிக்கு அருகில் நிழலாடிய போதே, அது அம்மா தான் என்று தெரிந்தது; ஆனால், திரும்பவில்லை. என் முகத்தில் புதிதாக விழத்துவங்கியிருந்த சுருக்கங்கள், கண்ணாடியில் பிரதிபலித்ததை பார்த்தேன்.

''யமுனா, ஒரு விஷயம் சொல்லட்டுமா?'' என்றாள்.

நெற்றிக்கருகில் கண்ணாடியை வைத்து, ''எதுக்கு பீடிகை... சொல்லேன்,'' என்றேன்.

''நாளைக்கு உனக்கு பிறந்த நாள்!''

''ஓ, அது வேறயா?''

''சாயங்காலம் பிரதோஷக் கூட்டம் ஜாஸ்தியா இருக்கும். கார்த்தாலயே போய், உன் நட்சத்திரத்துக்கு அர்ச்சனையை பண்ணிட்டு வந்துடறியா?''

''எனக்கு நானே அர்ச்சனை பண்ணிக்கணும், அதானே!''

''நானும் கூட வரட்டுமா, முழங்கால் வலி ஜாஸ்தியா இருக்கு, யமுனா. ரெண்டடி எடுத்து வச்சாலும் பாறாங்கல்லை கட்டின மாதிரி வலிக்கிறது. வசிஷ்ட கோத்ரம், பரணி நட்சத்திரம், ஞாபகம் இருக்கோல்லியோ?'' என்றாள்.

''முப்பத்து ஆறு வருஷமா சொல்ற விஷயம் தானே... ஞாபகம் இருக்கான்னு என்ன கேள்வி?'' என்றபடியே, வகிட்டருகில் தெரிந்த வெள்ளை முடியை வெடுக்கென்று பிடுங்கி எறிந்தேன்.

திகைப்புடனும், கவலையுடனும், அம்மா என்னைப் பார்ப்பது தெரிந்தது. அவள் இமைகளின் ஓரத்தில் இருதுளி கண்ணீர் தெரிந்தது. தலைகுனிந்து மவுனமாக நின்றாள்.

எரிச்சலாக வந்தது. இப்படி மவுனம் காத்து, மவுனம் காத்து தானே ஒரு ஓரத்தில் என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள்?

மூத்ததாக பெண் குழந்தை, அடுத்தடுத்து மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்று, அத்தோடு முடிந்தது என் வேலை என்பது போல, திண்ணை பேச்சும், சீட்டும், கும்பகோணம் வெற்றிலை சீவலும், பாட்டும் கூத்துமாக, மைனர் வாழ்க்கையில் லயித்துக் கிடந்தார், அப்பா. அவரை எதிர்த்து பேச தைரியமில்லாமல், குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாளே என்று நினைக்க, நினைக்க எப்போதும் போல் எரிச்சல் மண்டியது.

சடாரென்று எதிரே வந்து, என் இரு கைகளையும் பற்றிக் கொண்டாள், அம்மா. அவளின் ஒடுங்கியிருந்த கன்னங்களின் மீது சரசரவென்று நீர் வழிந்தது.

''தப்புதான்டி நான் பண்ணினது, மன்னிக்க முடியாத தப்பு தான். நா செஞ்சது என்னோட போகாது, குழந்தைகளையும் பாதிக்கும்ன்னு புரிஞ்சுக்காதது, என் முட்டாள்தனம் தான். 36 வயசாகியும் உன்னை கல்யாணம் பண்ணித்தர வக்கில்லாம, எங்க நாலு பேருக்காக சம்பாதிச்சுப் போடற இயந்திரமாக்கினது தப்பு தான்.

''ஒருத்தனை இன்ஜினியரா, ஒருத்தனை ஆடிட்டரா, ஒருத்தனை வக்கீலா பார்க்கப் போற இந்த கண்கள், என் மகள் யமுனாவை, கல்யாண பொண்ணா பார்க்கப் போற காட்சியை நெனைச்சு ஏங்கறது தெரியாம, மனசை மூடி மூடி வெச்சுக்கறதும் தப்பு தான்.''

''சரி சரி... ஆஸ்பிடல் கிளம்புற நேரத்துல, இந்த டயலாக் எல்லாம் தேவையா?''

ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்காக, இரவு முழுவதும் துாங்காமல் பயத்துடன் விழித்துக் கொண்டிருக்கும் ராமசேஷனின் முகம் நினைவுக்கு வந்தது. மரணத்தை விட கொடுமையான பயம்.

'சொல்லுங்க சிஸ்டர் யமுனா... நான் பிழைப்பேனா, எழுந்து பழைய மாதிரி பிசினஸ்ல இறங்குவேனா... சாதுவான என் பெண்டாட்டி, அன்பான ஒரே பையன் ரெண்டு பேரையும் விட்டுப் பிரியாம இன்னும், 10 வருஷமாவது இருக்கணும்ன்னு ஆசைப்படறேன், சிஸ்டர்...' என்று, அவள் கைகளைப் பற்றி தழுதழுத்தார்.

அப்போது, கல் போல் அவள் மனம் இறுகியிருந்தும் கூட, நினைவுக்கு வந்தது பொறுப்பில்லாத அப்பாவின் முகமும், பேதைமையான அம்மாவின் முகமும் கண்களுக்குள் ஓடி வந்தன.

'எல்லாம் சரியாகும், மிஸ்டர் ராமசேஷன்... ஆசியாவிலேயே இந்தியாவுல தான் ஹார்ட் பேஷன்ட்ஸ் அதிகம்ன்னு, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் இருக்கு. அனாவசியமா ஏன் கவலைப் படறீங்க?' என்று சொல்லியதும் நினைவுக்கு வந்தது.

''சாப்பிடாமலே கிளம்பிட்டியே யமுனா... சூடா சாம்பார் சாதமும், பீன்ஸ் கறியும் வெச்சிருக்கேன். பசிக்கும்போது சாப்பிடு,'' என்று டிபன் பாக்ஸ்களுடன் ஓடி வந்தாள், அம்மா.

எடுத்து பையில் போட்டு கிளம்பிய போது, கடிகாரம், 9:00 மணி அடித்தது.

பரபரப்பானேன். 9:30க்கு ஆபரேஷன். அரைமணி நேரத்தில் மாம்பலம் ஸ்டேஷனில் இருக்க வேண்டும். வேகமாக நடந்து, ஸ்டேஷனை அடைந்தேன்.

படியில் கால் வைத்தபோதே கீழே பிளாட்பாரத்தினுள் ரயில் வருவது, தெரிந்தது.

கால்களில் பற்றிக் கொண்ட வேகத்தை விட, மனம் தான் அதிகம் பரபரத்தது. பிடிக்க முடியுமா, இதை விட்டால் அவ்வளவு தான். பத்து நிமிட இடை வெளியில் தான் அடுத்த ரயில் வரும்; அது கூட நிச்சயமாக சொல்ல முடியாது.

எப்படியோ மூச்சைப் பிடித்து வேக வேகமாக படிகளில் இறங்கினேன். எதிரில் வரும் மனிதக் கூட்டத்தை பிளந்து, ஒரே தாவாக பிளாட்பாரத்துக்கு வந்து, கம்பார்ட்மென்டில் கால் வைக்கவும், ரயில் நகரவும் சரியாக இருந்தது.

'அப்பாடா' என்று மூச்சு விட்டேன். எத்தனையோ வேதனைகளுக்கு நடுவில் ஒரு சாதனை. சரியான நேரத்திற்கு போய் சேர்ந்து, கடுவன்பூனை சீப் டாக்டரின் நெற்றிக்கண் எரிப்பிலிருந்து தப்பி விடலாம்.

அப்போது தான் கவனித்தேன்.

அது ஒரு வெண்டர்ஸ்; அதாவது பொருட்களை ஏற்றிச் செல்லும் கம்பார்ட்மென்ட். என்னை தவிர வேறு யாருமே இல்லை.

அவசரத்தில் கவனிக்காமல் ஏறியிருக்கிறேன். அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, லேடீஸ் பெட்டியில் ஏறி விடலாம் என்று நினைத்த போதுதான், அது நடந்தது.

ஏறக்குறைய ஸ்டேஷனிலிருந்து, ரயில் நகர்ந்து வேகம் பிடிக்க துவங்கிய நிலையில், அந்த ஆள் பாய்ந்து, ஏறினான்.

'யாரிவன், எதற்காக ஓடும் ரயிலில் அவசரமாக ஏறுகிறான்? அதுவும் நான் மட்டும் தனியாக இருக்கும் பெட்டியில்...' என, திக்கென்றது.

முகத்தை துடைத்துக் கொண்டபடி திரும்பி என்னை பார்த்தவனை, நெஞ்சு படபடக்க கவனித்தேன்.

கன்னங்கரேல் உடல், கனிவே இல்லாத கண்கள், இறுக்கமான பார்வை, அழுக்கான காட்டன் ஷர்ட், கலைந்து கிடந்த தலை, இளமைப் பருவத்துக்கு உரிய அலட்சிய பார்வை.

உதறியது எனக்கு, ஏதோ உள் நோக்கத்துடன் தான் ஏறியிருக்கிறான் என்று புரிந்தது.

காலை எட்டி வைத்து, நேரே என் எதிரில் வந்து நின்று, என்னையே உற்றுப் பார்த்தான்.

என்ன செய்யப் போகிறான், கழுத்து செயின், வளையலை உருவப் போகிறானா... பாலியல் பலாத்காரமா... வன்முறை கும்பலில் ஒருவனா? அய்யோ... என் மூச்சு நின்றுவிடும் போல இருந்தது.

சட்டென்று என் தோளில் கிடந்த வானிடி பேக்கை இழுத்தான். மை காட், சம்பளப் பணத்தில் செலவழித்தது போக, உள்ளே மூவாயிரம் ரூபாய் இருப்பது நினைவுக்கு வர, இதயம் துடித்தது எனக்கு.

ஆனால், அவன் செய்த காரியம்.

இருக்கையில் அமர்ந்து, டிபன் பாக்சை எடுத்து, திறந்தான். சாம்பார் சாதம் மணத்தது. கபகபவென்று அள்ளி, அள்ளி சாப்பிட்டான். குனிந்த தலை நிமிரவே இல்லை. மூன்று நிமிடங்களில் டப்பா காலி, மூடினான்.

அவன் முகம் மாறியது. விழிகளில் இருந்த இறுக்கம் குறைய, என்னை நிமிர்ந்துப் பார்த்தான்.

நம்ப முடியாமல் நின்றேன்.

''பயந்துட்டீங்களா, வெரி சாரி மேடம்... என் பேர் சுபாஷ். பி.ஏ., எக்னாமிக்ஸ். வேலை கிடைக்கல, அஞ்சு வருஷம். வீட்டுல தாயும், தகப்பனும் வெறுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சத்தியமா சொல்றேன், மூட்டை துாக்கற வேலை கூட கிடைக்கல. பிச்சை எடுக்க பிடிக்கல.

''மூணு நாளா ஒரு மணி சோறு கூட சாப்பிடல. வேற வழியில்லாம தான்... சாப்பாடு ரொம்ப பிரமாதம் மேடம். நீங்க கொடுத்து வெச்சவங்க. கவுரவமான வேலை, மரியாதையான வாழ்க்கை, ருசியான சாப்பாடு, நிறைவான நேரங்கள்... இருங்க, நல்லா இருங்க. வரேன் மேடம், நன்றி...'' என, ரயில் நின்றதும், இறங்கி போய் விட்டான்.

பிரமை இன்னும் முழுமையாக என்னை ஆக்கிரமித்திருந்தது. சுபாஷ், அருமையான பெயர். படித்த, தன்மானமும், பசியும் சுட்டுக் கொண்டிருக்கும் இளைஞன். சாதாரண இயல்பான வாழ்க்கைக்காக தவிக்கிற வாலிபன்.

அப்படியானால், என் வாழ்க்கையில் ஒருவித நிறைவு இருக்கிறதா... என் தியாகங்களில் ஒரு உன்னதம் இருக்கிறதா... மற்றவர் பார்த்து ஏங்குகிற பொறாமை இருக்கிறதா?

மாலை -

அம்மாவிடம், ''இப்போ எப்படிம்மா இருக்கு, உன் கால் வலி. நான் வேணா பிடிச்சு விடட்டுமா?'' என்று கேட்டபோது, அவள் முகம் மலர்ந்ததைக் கண்டு, என் மனம் நெகிழ்ந்தது.

சாந்தகுமாரி கணேசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us