PUBLISHED ON : ஜூன் 11, 2023

தங்கம், பிளாட்டினம் மற்றும் வெள்ளியில், நகைகளை செய்வது தெரிந்தது தான். ஆனால், துப்பாக்கி தோட்டா உறைகளில் செய்வதைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா?
தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவைச் சேர்ந்தவர், தோயூன் சந்தா எனும், 42 வயது பொற்கொல்லர். 20 ஆண்டுகளுக்கு மேலாக, 'ஏகே47' மற்றும் 'எம்16' துப்பாக்கி தோட்டா உறைகளை உருக்கி, நகைகளாக செய்து வருகிறார். குறிப்பாக பிரேஸ்லெட், நெக்லஸ், மோதிரம் மற்றும் தோடுகள் செய்து விற்பனை செய்து வருகிறார்.
சந்தாவின் தந்தை, 1975- - 79ல், கம்போடியாவில் நடந்த உள்நாட்டு போரில் இறந்து விட்டார். அதை தொடர்ந்து சில ஆண்டுகளில் அவரின் தாயும் காலமானார். அதனால், ஓர் அனாதை விடுதியில் சேர்ந்து, படித்தார், சந்தா.
பின்னர், கம்போடியா நாட்டின் தலைநகர் நாம் பென் வந்தார். நகை பட்டறை ஒன்றில் வேலைக்கு சேர்ந்து, நகைகள் செய்யும் முறையை கற்றுக்கொண்டார்.
தன் தந்தையின் நினைவாக, இனி போர்களே வரக்கூடாது, சமாதானத்தை வலியுறுத்தி துப்பாக்கி தோட்டா உறைகளில் நகைகள் செய்து விற்பதாக கூறுகிறார், தோயூன் சந்தா.
வாரம் ஒருமுறை தலைநகர் பகுதியில் உள்ள மிலிட்டரி கேம்ப் மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் சென்று, தோட்டா உறைகளை சேகரிக்கிறார். அதை உருக்கி, தினமும், 20 அணிகலன்கள் செய்து, 'அங்கோர் புல்லட் ஜூவல்லரி' என்ற பெயரில் விற்பனை செய்கிறார்.
புல்லட் நகைகளை,5 முதல் 20 அமெரிக்க டாலர்கள் விலையில் (நம் இந்திய ரூபாயில் 410 முதல் 1,640 வரை) விற்கிறார். இவரது நகைகள், மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாகிறது.
சுற்றுலா பகுதியாக இருப்பதால், மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக கூறுகிறார். இவரின், 'பேவரைட்' நகை, ரம்துல் மலர் டிசைன் தான். இது, கம்போடியா நாட்டின் புகழ்பெற்ற வாசனை மலர்.
வீ. ராஜன்
