PUBLISHED ON : ஜூன் 11, 2023

ஒருமுறை, நியூயார்க் நகருக்கு சென்றிருந்த, பிரதமர் ஜவஹர்லால் நேருவை, அந்நகர முக்கிய பிரமுகர் ஒருவர், விருந்துக்கு அழைத்திருந்தார். விருந்து ஏக தட புடலாக அமைந்திருந்தது. நகர முக்கியஸ்தர்கள் பலரும், அரசியல் தலைவர்களும் அதில் கலந்து கொண்டனர்.
விருந்து துவங்கியவுடன், நேருவிடம், 'இந்திய பிரதமர் அவர்களே, இங்கே வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உணவு வகைக்கும் செலவு எவ்வளவு ஆயிற்று தெரியுமா? ஒவ்வொரு நபருக்கும், பல ஆயிரம் டாலர் செலவழித்து, இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். இது ஒரு அபூர்வமான விருந்து...' என்றார், விருந்தளித்த பிரமுகர்.
நேருவின் முகம் சிவந்தது. கோபமாக எழுந்து, 'நான் ஏழை நாட்டிலிருந்து வருகிறேன். எங்கள் நாட்டில் உபசரிப்பு தான் முக்கியமே தவிர, உணவின் பண மதிப்பு என்னவென்று நாங்கள் பார்ப்பதில்லை...' என்றபடியே விருந்தில் பங்கேற்காமல், தன் சகாக்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.
மற்றவர்கள், எவ்வளவோ மன்னிப்பு கேட்டும், பிடிவாதமாக அந்த விருந்தில் கலந்துகொள்ள மறுத்து விட்டார், நேரு.
எட்டயபுரம் பாரதி மண்டபம் ஆரம்ப விழாவில் சொற்பொழிவு ஆற்ற சென்றிருந்தார், கல்கி. ஒரு மூலையில் உட்கார்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார், ம.பொ.சி., கூட்டம் முடியும் சமயம், நன்றி கூறி பேச, அவரை அழைத்து வருமாறு, தன் உதவியாளரிடம் கூறினார், கல்கி.
'போய் கிராமணியை வரச்சொல்...' என்ற வார்த்தை, 'கிராம்பு' என்று விழவும், காரை எடுத்துப் போய் கஷ்டப்பட்டு கிராம்பை வாங்கி வந்து, கல்கி கையில் கொடுத்தார், உதவியாளர். அதைப் பார்த்த கல்கி, 'எவ்வளவு பெரிய ஆசாமியை, இவ்வளவு சின்ன சைசுக்கு மாத்திட்டியே...' என்றாராம்.
மெரீனா கடற்கரைக்கு, 'மெரீனா' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா!
கடற்கரையில், அப்போதைய நவாபு முகமது அலி வாலாஜா, குளியல் குளம் இணைந்த மாளிகை ஒன்றை கட்டினார். இதற்கு ஆங்கிலேயர், 'மரைன் வில்லா' என்று பெயரிட்டனர். 'மரைன் வில்லா'தான் மெரீனாவாக உருமாறியது. பிறகு, மரைன் வில்லாவை இடித்து, அங்கே பல்கலைகழக நுாலகத்தை கட்டினர்.
மரைன் வில்லா மறைந்தாலும், 'மெரீனா' என்ற மருவு சொல் மட்டும் நிலைத்து விட்டது.
உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர், மார்க்ட்வெய்ன். யாராவது ஏதாவது ஆராய்ச்சி செய்து, புதிதாக கண்டுபிடிக்க முயல்கிறார் என்றால், உடனே, முதலாவதாக அதில் முதலீடு செய்வார். எழுத்தில் நிறையவே சம்பாதித்தார். ஆனாலும், இப்படி ஷேர் எடுத்து எடுத்தே நொடிந்து போனார்.
அப்படி அவர் நொடிந்திருந்த வேளையில், 'இது என் புதிய கண்டுபிடிப்பு. கம்பெனி ஆரம்பித்து அதை உற்பத்தி செய்ய நீங்கள் உதவ வேண்டும்...' என்று வேண்டினார், ஒரு விஞ்ஞானி.
'இது விஷயத்தில், நான் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். இனி, எதிலும் முதலீடு செய்யும் எண்ணம் இல்லை...' என்று விஞ்ஞானியை துரத்தி விட்டார், ட்வெய்ன்.
அவர் மட்டும் அந்த சமயத்தில், அதில் முதலீடு செய்திருந்தால், கோடீஸ்வரராகி, கோட்டை விட்ட பணத்தையெல்லாம் மீட்டிருக்கலாம்.
காரணம், தேடி வந்த விஞ்ஞானி, அலெக்சாண்டர் கிரகாம்பெல்; அவர் கண்டுபிடித்த கருவி, டெலிபோன்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, துாக்கு தண்டனை விதிக்கப் பெற்றார், பகத்சிங்.
அப்போது, அவர், நீதிபதியிடம், 'எனக்கு துாக்கு தண்டனை வேண்டாம்...' என்றார்.
'ஏன், மன்னிப்புக் கேட்டு விடுதலை பெறப் போகிறாயா...' என கேட்டார், நீதிபதி.
'சாகத் தயாராக இருக்கும் நான், மன்னிப்பு ஏன் கேட்கப் போகிறேன். எனக்கு துாக்கு தண்டனை வேண்டாம் என்று தான் சொல்கிறேன்...' என்றார், பகத்சிங்.
'அதுதான் ஏன்...' என, நீதிபதி கேட்டார்.
'என்னைத் துப்பாக்கியால் வேண்டுமானால் சுடுங்கள். இல்லை, பீரங்கியால் சுட்டு, உடலை சிதறடித்தாலும் ஆட்சேபனை இல்லை. ஆனால், துாக்கில் மட்டும் போடாதீர்கள்.
'ஏனென்றால், துாக்கில் தொங்கும்போது, உயிர் பிரியும் நேரத்தில், என் கால்கள் மண்ணில் படாமல் அந்தரத்தில் தொங்கும். என் உடல் தாய் மண்ணில் தான் விழ வேண்டும்...' என்றார், பகத்சிங்.
சென்னை ராஜதானியின், அன்றைய சட்டசபை கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார், முத்துராமலிங்க தேவர்.
ஒரு உறுப்பினர் கிண்டலாக, 'தேவரின் பேச்சை பார்க்கும்போது, ஒரு பார்வைக்கு, காங்கிரஸ்காரரைப் போல தெரிகிறது. மற்றொரு பார்வைக்கு, பார்வர்டு பிளாக் இயக்கம் போல தெரிகிறது. தேவர், எதைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லையே...' என்றார்.
'தெரிந்து கொள்ளுங்கள்... நான் காங்கிரஸ்காரனுமல்ல, பார்வர்டு பிளாக் கட்சிக்காரனுமல்ல. ராமகிருஷ்ண இயக்கத்தை சேர்ந்தவன்; விவேகானந்தரை பின்பற்றுபவன்...' என்றார், முத்துராமலிங்க தேவர்.
கடந்த, 1933ல், தன், 25ம் வயதில், சாயல்குடி விவேகானந்தர் வாசக சாலை முதலாம் ஆண்டு விழாவில் ஆற்றிய முதல் பேச்சு தான், அவரை அரசியல் பாதைக்கு அழைத்து வந்தது. தேசியமும், தெய்வீகமும் தன் இரு கண்கள் என்பதை, கொள்கையாக கொண்டு, பிரம்மசரிய வாழ்க்கையை தொடர்ந்தவர், தேவர்.
- நடுத்தெரு நாராயணன்
