PUBLISHED ON : ஜூன் 11, 2023

மூலிகை வகையைச் சார்ந்தது தான், கற்பூரவள்ளி செடி.
இந்த செடியை வீட்டில் வளர்ப்பது, மிக மிக எளிது. சின்ன தண்டை நறுக்கி மண்ணில் சொருகி வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றினால் வேர் விட்டுவிடும்.
பெரிய அளவில் வளர்க்க வேண்டும் என்றால், மண், வண்டல் மண், செம்மண், களிமண் கலவையை தயார் செய்து கொள்வது நல்லது. இதன் நிறமும், வாசமும் உளவியல் ரீதியாக நம்மை உற்சாகப்படுத்தும்.
செடி வைத்த ஆறு மாதங்களில் இலைகள் செழிப்பாய் வளர்ந்து விடும். அப்போது தான் அந்த இலையில், 'மென்தால்' சதவீதம் அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு பயன்படும்.
* இலைகளை பறித்து கழுவி, ஒரு சொம்பு தண்ணீரில் போட்டு அடுப்பில் வையுங்கள். நீரின் நிறம் பச்சையாக மாற ஆரம்பிக்கும்போதே இலைகளை எடுத்துபோட்டு, வடிக்கட்டி, ஆற வைத்து குடிக்கலாம்; குழந்தைகளுக்கும் குடிக்கக் கொடுக்கலாம்.
* கையாலேயே கசக்கி, 2 மி.லி., சாறு எடுத்து, 8 மி.லி., தேனுடன் கலந்து பருகலாம்.
* பத்து துளசி இலை, அதே அளவு கற்பூரவள்ளி இலை இரண்டையும் வெறும் வாணலியில் போட்டு வதக்கி பிழிந்தால் வரும் சாரை, தினமும் காலை, 5 மி.லி., பருகுவது நல்லது.
* துளசி இலையை சாப்பிடுவது போலவே, கற்பூரவள்ளி இலையுடன், நான்கு மிளகு வைத்து மடித்து மென்று சாப்பிடலாம்.
* உள்ளுக்குள் மட்டுமல்ல வெளித்தோலுக்கும் இந்த இலையின் சாறை தடவலாம். இலையுடன் நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம். சிறு துளி சாற்றை மூக்கில் விடலாம்; வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால், ஜலதோஷம் குணமாகும்
இவையனைத்தும் ஆஸ்துமா, காசநோய், சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு, மூக்கடைப்பு, சைனஸ், சிறுநீரக பிரச்னை என, பல ஆரோக்கிய குறைபாடுகளுக்கு உதவும் வழிமுறைகள். முக்கியமாக புகைப்பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பிரச்னையையும் சரி செய்கிறது.
இதை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
கற்பூரவள்ளி இலை துவையல்:
அடுப்பில் வாணலி வைத்து, சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். இத்துடன் தேங்காய் துருவல், பூண்டு, புளி, இஞ்சி, சின்ன வெங்காயம் மற்றும் 10 கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து வதக்கி, ஆற விடவும்.
இதனுடன், பெருங்காயத்துாள் சேர்த்து நன்கு அரைத்து, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பொங்கலுக்கும் தொட்டு சாப்பிடலாம்.
கற்பூரவள்ளி இலை சூப்:
கற்பூரவள்ளி இலை - 5, வெற்றிலை - 5, மிளகு - 1. மூன்றையும் நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டி, சிறிதளவு உப்பு போட்டால், சுவையான சூப் தயார். அடிக்கடி சாப்பிட்டு வர, சளி தொந்தரவு வராது.
எங்கு நோக்கிலும் வெற்றிலை வெற்றிலை... அடுத்து, அதையும் பார்த்து விடுவோம்.
— வளரும்.
பசுமை டிப்ஸ்: செடிகளுக்கு காலையில், மிதமாய் தண்ணீர் ஊற்றுவது நல்லது. நாள் முழுவதும் அடிக்கும் வெயிலால் மண் சூடாகி இருக்கும். மாலையில் நாம் ஊற்றும் நீரும் சூடாய் வேர்களுக்கு செல்வதை தவிர்க்கவே, காலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
ம. வான்மதி
