PUBLISHED ON : மே 28, 2017

என் உறவினர் இருவருக்குள், ஏதோ ஒரு பிரச்னை; அதில், ஒருவருடன், பேசிக் கொண்டிருந்த போது, இந்த உறவு சிக்கல் பற்றிய பேச்சு வந்தது. உடனே, அவர், 'இப்பவே, நான் போய் அவரை பார்த்து, நிலைமையை விளக்கி, என் மீது எந்த தவறும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி வருகிறேன்...' என்று, புறப்பட தயாரானார்.
'ஏன் இப்படி டென்ஷன் ஆகுறீங்க... முதல்ல உக்காருங்க...' என்று அவரை கையமர்த்திய போது, 'செய்யாத தப்புக்கு, எனக்கு ஏன் கெட்ட பெயர்... அப்புறம், அவங்க நினைச்சிட்டிருப்பதெல்லாம், உண்மைன்னு ஆயிடும்...' என்றார்.
'நீங்க சொல்றது சரியா இருக்கலாம்... ஆனா, இப்ப போய், பழசை கிளறுனீங்கன்னா, மூணு விஷயம் நடக்கும். முதலாவது, 'பாரு... குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்குது; அதனால, சொல்ல வந்துட்டாரு வியாக்யானமெல்லாம்...' என்ற பேச்சு வரும்; இரண்டாவது, அடங்கி கிடக்கிற அல்லது அடங்க போகிற பிரச்னையை, நீங்களே, மீண்டும், கிளப்புகிற தவறும் நடந்து விடலாம். மூன்றாவது, எதிராளிக்கு, எதையும் ஏற்கும் மனநிலை இல்லாவிட்டால், நீங்கள் அளிக்க போகும் புது விளக்கங்கள், சில புது சண்டைகளை கொண்டு வந்து விடும்...' என்றேன்.
'என்னங்க நீங்க... இப்படியா, என் வேகத்தை குறைக்கிறது?'
'பார்த்தீர்களா... உங்களுடைய இந்த வேகம் தான் ஆகாது என்கிறேன். நடந்தவை, நீங்கள் பேசியவை, உங்கள் கோணத்தில் அது, நியாயம்; ஆனால், எதிராளியின் கோணத்தில் அப்படி அல்ல; உங்கள் செயல்பாடுகளில், பேச்சில் ஏற்கனவே அவர்களுக்கு, மனக்குறைகள் இருக்கிற போது, அவர்கள், உங்களிடம் எதிர்பார்ப்பவை மன்னிப்போ, தீர்வு நடவடிக்கைகளோ தவிர, விளக்கங்களோ, வேறு விஷயங்களோ அல்ல...' என்றேன்.
'என்னங்க... இப்படி, என்னை காத்து இறக்கி விட்டுட்டீங்க...' என்றார், உறவினர்.
பள்ளி நாட்களிலிருந்தே பார்க்கிறோமே...
'ஏண்டா தாமதம்; வீட்டுப் பாடம் ஏன் செய்யல; ஏன் குறைவான மதிப்பெண் எடுத்தே?' என்பது போன்ற ஆசிரியரின் கேள்விகளுக்கு, நாம் அளித்த விளக்கங்கள் எடுபட்டிருக்கின்றனவா... இல்லையே!
'எதிர்த்தா பேசுற?' என்று ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாகி, திட்டுகளும், அடிகளும் அல்லவா சேர்ந்து விழுந்தன!
பணிபுரியும் இடத்திலும், 'ஏன் இப்படி ஒரு தவறை செஞ்சே?' என்ற கேள்விக்கு, விளக்கம் கொடுக்க ஆரம்பித்தால், அந்த விளக்கத்திலும் தவறு கண்டுபிடிப்பது தானே நடக்கிறது... உரியவரின் விளக்கங்களை கேட்டு, சமாதானம் அடைந்த முதலாளிகள் - மேலதிகாரிகள் எத்தனை பேர்!
நம் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும், அவற்றை, சரியான தொனியில் எடுத்துக் கொள்ளாமல், நாம் தருகிற விளக்கங்களை கொண்டே, நம்மை மேலும் சிக்கலில், சிக்க விடுகிற போக்கு தானே மேலிடத்தால் பின்பற்றப்படுகிறது...
விளக்கங்கள் அனைத்தையும், 'எதிர்த்து பேசுகிறான்...' என்றே புரிந்து கொள்கிற, இந்த புரியாத சமூகத்தில் மாட்டி விழிக்கிற நாம், இத்தகைய பிரச்னைகளை, இனிமேல் வித்தியாசமாக கையாள, பழகுவதை தவிர, வேறு வழியே இல்லை.
முதலில், நம் செயல்பாடுகளில் நாம் பார்க்காத கோணத்திலிருந்து பார்த்து, இவற்றை தவறு என்று, சிலர் குற்றம் சாட்டும் போது, தவறு தான் என்று ஒப்புக்கொள்ள, முன்வர வேண்டும்.
கொதித்து, பொங்கி வழியும் பாலில், சில நீர்த்துளிகளை தெளிக்கிற பெண்களின் சமையலறை செயல்பாடு, நமக்கும் வேண்டும்.
மன்னிப்பு கேட்க வேண்டிய அளவு, பெரிய தவறு என்றால், அதற்கும், தயாராகி விட வேண்டும்.
ஆனால், இந்த மன்னிப்பை உடனே கேட்டு விட கூடாது. காரணம், 'மன்னிப்பு கேட்டால் போதுமா, எல்லாம் சரியாகி விடுமா... என் காயத்திற்கு, என்ன மருந்து; யார் இந்த நஷ்டத்தை ஏற்பது, எப்படி சரி செய்வது...' என்று மேலும் குதிப்பர்.
தவறு தான் என்பதை ஏற்று, பின், மெல்ல, நடந்ததால், பேசியதால் ஏற்பட்ட தாக்கங்களை சொல்லி, இறுதியில் தான், மன்னிப்பு என்ற வார்த்தையை பயன் படுத்த வேண்டும்.
இல்லையென்றால், 'என்ன இப்படி, 'ரெடி மேடாக' மன்னிப்பை உதிர்க்கிறான்... இவனுக்கு தண்டனையிலிருந்தும், விளைவுகளிலிருந்தும் தப்பிக்கும் எண்ணம் அதிகமாக இருக்கிறதே தவிர, கொஞ்சங் கூட, தவறை உணர்ந்ததாக தெரியவில்லையே...' என்ற புது கோபத்திற்கும், ஆளாக நேரிடும்.
உறவுகளை பொறுத்தவரை, விளக்கம் அளிக்க வேண்டிய காலம், உரிய தருணம் வரும்; அதுவரை காத்திருக்கலாம்; அவசரம் வேண்டியதில்லை.
லேனா தமிழ்வாணன்
