PUBLISHED ON : மே 28, 2017

பிலிமாலயா (நவம்பர், 1972) சினிமா இதழுக்கு, எம்.ஜி.ஆர்., அளித்த பேட்டி இது: கேள்வி: நடிகர், நடிகையர் கறுப்புப் பணம் வாங்குகின்றனர் என்று பேசப்படுகிறதே... இது, நாட்டின் பொருளாதாரத்தை கெடுக்கும் செயல் அல்லவா?
எம்.ஜி.ஆர்., : கறுப்புப் பணம் ஏன் வாங்குகின்றனர் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். சட்டத்தை ஏமாற்ற வேண்டும் என்பதல்ல அதன் நோக்கம்; வேறு வழி இல்லை என்பதாலே வாங்குகின்றனர்.
சட்டமும், அரசும் தான், எங்களை இந்த வழிக்கு மாற்றியுள்ளது. அப்படிப் பார்த்தால், நாங்களும் திருடர்கள் தான்.
ஆனால், எங்கள் வாழ்க்கையை பாருங்கள்... மக்கள் மத்தியில், எந்தச் சூழ்நிலையிலும், பகட்டாகவே தெரிய வேண்டும். அந்த ஆடம்பர வாழ்க்கைக்கு எவ்வளவு செலவாகும்... இரவு, பகலாக உழைத்து சம்பாதிக்கும் பணத்தில், அரசு வரியாகப் பெறும் தொகை எவ்வளவு?
ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் பெற்றால், அதில், அதிகபட்சமாக, 97 சதவீதம், 'டாக்ஸ்' வாங்குகின்றனர். அதாவது, ஒரு லட்சம் ரூபாய்க்கு, 97 ஆயிரம் ரூபாய் வரி. இதில், இப்போது சூப்பர் டாக்ஸ், அது, இதுன்னு ஏதேதோ வரிகளை வசூலிக்கின்றனர். இந்நிலையில், எப்படி நேர்மையாக வாழ முடியும்?
திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்ததுமேவா பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறோம்... கடுமையாக உழைத்து, படிப்படியாக உயர்ந்து, மக்கள் மத்தியில் நடிகனாக அறிமுகமாக, எத்தனை ஆண்டுகள் ஆகின்றன.
அறிமுகமான புதிதில், கொடுப்பதை பெற்று நடிக்கிறோம்; நடிக்க வந்த நாளிலிருந்து, ஓரளவு வசதிகள் வரும் வரை, எத்தனை கஷ்டப்பட்டிருப்போம், கடன் வாங்கி, காலத்தை கழித்திருப்போம். அதெல்லாம், வரி வசூலிப்போருக்கு எப்படி தெரியும்... திரை உலகில் நுழைந்ததுமே வரி என்றால் எங்கே போவது?
வருமான வரி இதோடு நிற்கவில்லை; ஒரு சமயம், நான் லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினேன்; ஓராண்டிற்குப் பின், நான் நன்கொடையாக வழங்கிய அந்த லட்சம் ரூபாய்க்கும், வருமான வரி போட்டிருந்தனர். எனக்கு ஆத்திரமாக வந்தது. 'நன்கொடைக்கும் வரியா, இதற்கு கூட வரிவிலக்கு இல்லையா...' என்று கொதித்து, நேராக டில்லிக்கு சென்று, மத்திய அமைச்சர், சி.சுப்ரமணியத்தை சந்தித்து, 'நன்கொடை செலுத்தினால், அதற்கு கூட வரியா?' என்று கேட்டேன்.
அதற்கு அவர், 'சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்...' என்றார்.
'சட்டத்தில் நன்கொடை செலுத்துவதற்கு வரி கிடையாது என, வரி விலக்கு அளிக்கக் கூடாதா... நல்ல காரியங்களுக்கு தானே, நன்கொடை அளிக்கிறோம். தேசப் பாதுகாப்புக்கு போர் நிதி அளித்தாலும் வரியா...' என்றேன்.
அவர் விளக்கம் கொடுத்தாரே தவிர, விலக்களிக்க முன்வரவில்லை. சட்டம் இப்படி இருக்கும்போது, மனம், தானாகவே, 'தவறான பாதையில் செல்...' என வலியுறுத்தாதா?
நேர்மையாக நடக்க, சட்டம் இடம் தராதபோது, மனம் குறுக்கு வழியை நாடுகிறது. அதனால் தான், நல்லவர்களும், திருடர்களாக மாறுகின்றனர்.
கேள்வி: இதை மாற்ற வழியே இல்லையா?
எம்.ஜி.ஆர்.,: ஏன் இல்லை... மக்களிடம் இக்கருத்துகளை எடுத்துரைத்து, அவர்களின் வாக்குகளைப் பெற்று, புதுச்சட்டம் இயற்றப்பட்டால், இந்நிலை மாற வழியுண்டு.
கேள்வி: நீங்களே ஏன் பொறுப்பேற்று, இதை, மக்கள் மத்தியில் வைக்கக் கூடாது?
எம்.ஜி.ஆர்.,: நடிகனான நான், மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னையை வைத்தால் பயனிருக்காது. காரணம், நடிகர்களின் வாழ்க்கையை, மிகப் பெரிதாக எண்ணும் மக்கள், அவர்கள் வரி செலுத்த வேண்டியது தான் என்று எண்ணுவரே தவிர, எங்கள் குரலுக்கு, பெரிதான பிரதிபலிப்பு இருக்காது. அத்துடன், எத்தனையோ பிரச்னைகளில் அல்லாடும் மக்களிடம் எடுத்துச் சொல்லி, வாக்குகளைப் பெறக்கூடிய அளவுக்கு, அது பெரும் பிரச்னையாகவும் அவர்களுக்கு
தெரியாது.
- நடுத்தெரு நாராயணன்
