தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பயன் கருதி...

பயன் கருதி...

பயன் கருதி...


PUBLISHED ON : செப் 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விரிஞ்சீபுரம் என்ற ஊரை பலருக்கு தெரியாமல் இருக்கலாம்; ஆனால், மார்கபந்து என்ற பெயர் நிச்சயம் பரிச்சயமாக இருக்கும். அவர் தான், விரிஞ்சீபுர நாயகர் மார்கபந்தீஸ்வரர். ஒரு காலத்தில் மார்கபந்து என்றாலே, 'உங்களுக்கு சொந்த ஊர் வேலூரா?' என்று கேட்பர். எனக்கும் அதே பெயர் தான். ஈஸ்வரரையும், பச்சைப்பட்டுடுத்தி, வெள்ளைக்கல் மூக்குத்தியுடன் நிற்கும் அம்மன் மரகதவல்லியையும் காண கண் கோடி வேண்டும்.

தினமும் மாலை, 6:00 மணிக்கு மரகதவல்லி தாயாரின் முன் ஆஜர்; பள்ளி விடுமுறை நாட்களில் காலையிலேயே கோவிலுக்கு போய் விடுவேன். அழகிய சிற்ப வேலைப்பாடுகள், சிம்மக் கிணறு, இரட்டை மதில் என, கோவில் பிரம்மாண்டமாக இருக்கும். எங்களுக்கெல்லாம் ஐப்பசியில் வரும் தீபாவளியை விட, கார்த்திகையில் நடக்கும் கோவில் திருவிழா தான் முக்கியம்.

கார்த்திகை மாதமானால் போதும், உறவுக்காரர்கள் எல்லாரும் எங்கள் வீட்டிற்கு படையெடுத்து வந்து விடுவர்; வீடு கல்யாண களை கட்டியிருக்கும். ஒவ்வொரு கார்த்திகை திங்கட் கிழமையிலும் ஊரே திருவிழா கோலம் தான். மாவளி சுத்தறதும், தேரிலே வடம் பிடிக்க ஓடறதும், திருவிழாவுக்குன்னே வருகிற குச்சி ஐஸ், கையிலே வாட்ச் மாதிரி ஒட்டித் தரும் பம்பாய் மிட்டாய்ன்னு... இதையெல்லாம் இழந்து, கிட்டத்தட்ட, 45 வருஷம் ஆச்சு; ஆனால், ஞாபகங்களும், அதனால் விளைந்த ஏக்கமும், இன்னும் என்னை விட்டு போகல.

நான் பத்தாவது படிக்கும் போது, விவசாயம் நொடித்து போய், இருந்த நிலங்கள், வாழ்ந்த வீடு என எல்லாவற்றையும் கடனுக்கு விற்று, 'கெட்டும் பட்டணம் போய்ச் சேர்' என்பது போல், எங்கப்பா சென்னைக்கு வந்தார். அன்றிலிருந்து, 62 வயதாகும் இன்று வரை, சென்னை தான் வாசம்.

மகாலிங்கம்... என் கூட பத்தாவது வரை படிச்சவன்; அவனை, இதுவரை முழுப்பேர் சொல்லி யாரும் கூப்பிட்டதில்ல. எல்லாருக்குமே மாலி தான். மாலியின் வீடு எங்கள் வீட்டுக்கு எதிரில் தானிருந்தது.

நாங்க சென்னைக்கு கிளம்பும் போது மாலி தான் ரொம்ப வருத்தப்பட்டான். பி.யூ.சி., முடிச்ச உடனே, பி.எஸ்.சி., சேர்ந்துட்டதா கடிதம் எழுதினான். அப்பப்போ கடிதம் எழுதிப்போம். ஊருக்கு ஒரு முறை போகணும்ன்னு ரொம்ப ஆசை. ஆனாலும், வாழ்ந்து கெட்ட குடும்பம் இல்லையா... அதனால, ஊருக்கு போக அவமானமாக இருந்தது.

பி.யூ.சி., முடிஞ்ச உடனே போட்டி தேர்வெழுதி அரசு வேலையில், கிளார்க்கா சேர்ந்துட்டேன். மாலி, எம்.எஸ்சி., சேர்ந்தான்; அப்புறம் டில்லியில வேலை கிடைச்சு போயிட்டான். வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்கு வரும் போதெல்லாம், சென்னை வந்து என்னை பாக்காமல் போக மாட்டான்.

என் பையன் பிறந்த பிறகு தான், சொந்த ஊருக்கு போக வாய்ப்பு கிடைச்சது. குழந்தைய முதல்ல மரகதவல்லி தாயாரிடம் காமிச்சிட்டு தான், வேற கோவிலுக்கு போகணும்கிறது எங்க குடும்பத்துல தலைமுறை தலைமுறையா இருக்குற வழக்கம். அதனால, குடும்பத்தோட விரிஞ்சீபுரம் போனோம்; ஆனா, அப்பா மட்டும் வர மறுத்துட்டார். கிட்டத்தட்ட, 15 -16 வருஷம் கழிச்சு ஊருக்கு போனேன். ஊரும் மாறல; மரகதவல்லி தாயாரின் அழகும் மாறல. நகரத்து வாழ்க்கையில இதையெல்லாம் இழந்துட்டோமேன்னு நினைக்கும் போது

அழுகையா வந்தது.

மாலி, டில்லியிலிருந்து வரும் போதெல்லாம், டில்லியப் பற்றி கதை கதையாச் சொல்வான். நானும் அந்த ஊரப் பார்க்க ஆசைப்பட்டு, ஒருமுறை எல்.டி.சி., போட்டு குடும்பத்துடன் டில்லி போனோம்; அவன் வீட்டில தான் தங்கினேன். எவ்வளவோ பெரிய வீடு; அவனுக்கு ஏதோ கான்பிரன்ஸ் என்று அவனுடைய காரைக் கொடுத்து, டிரைவரிடம் டில்லியை சுற்றிக்காட்ட சொன்னான்.

ஒருமுறை அவன் சென்னை வந்தபோது, 'ஊரில இருக்கிற என் வீட்ட வாங்கிக்கிறயா?'ன்னு கேட்டான். நான் இருக்குற நெலமையில வீடு வாங்கறதாவது... இருந்தாலும், ஒரு பேச்சுக்காக, 'அங்கெல்லாம் போய் யாருடா தங்கறது...' என்றேன். அவனும், 'நீ சொல்றது சரிதான்டா; வீடு, இப்போ சும்மா தான் இருக்கு; அதால ஒரு பிரயோஜனமும் இல்லடா... அதான் வித்துடலாம்ன்னு பாக்கறேன்...'என்றான்.

அடுத்து, பசங்களோட படிப்பை பத்தி பேச்சு வந்தது; அப்போ என் பையன் ஆறாவது படிச்சுக்கிட்டு இருந்தான்.

'ஏண்டா... உன் பையன் செகண்ட் லாங்குவேஜ்வா என்ன எடுக்க போறான்?' என்று கேட்டான் மாலி.

'இதென்னடா கேள்வி... தமிழ் தான்...'

'போடா முட்டாள்; தமிழ எடுத்து என்னடா செய்யப் போறான்... பிரென்ச் எடுக்கச் சொல்லுடா. நாளைக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகமாகும். ஒண்ணு தெரிஞ்சுக்கோடா எதுக்கும் ஒரு, 'யுடிலிடி வேல்யூ' அதாவது, நாம் செய்யற ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது பலன் இருக்கணும்; இல்லன்னா அது வீண் தான்...'என்றான்.

அதற்குப்பின், அவனுக்கு மேலே மேலே பதவி உயர்வு வந்து, நினைச்ச நேரத்தில வர முடியாமல் போய் விட்டது.

ஒருநாள் மாலியிடமிருந்து கடிதம் வந்தது. அவன் பையனுக்கு ஜெர்மனியிலே வேலை கிடைச்சிருக்காம்; அதனால, அவனும் வி.ஆர்.எஸ்., குடுத்திட்டு பையனோட போய், 'செட்டில்' ஆகப் போறேன்னு எழுதியிருந்தான். எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருந்தது; என் நண்பன், இப்போ ரொம்ப நல்ல நிலைமைல இருக்கான்னா, அது, எனக்கும் சந்தோஷம் தானே!

கிட்டத்தட்ட, 30 வருஷம் கழிச்சு, 62 வயசுல இப்போ தான் மறுபடியும் ஊருக்கு வந்திருக்கேன். ஊரைப் பார்த்ததும், மறுபடியும் ஊருக்கே திரும்பிடலாமான்னு ஒரு ஆசை. ஆனா, எங்க தங்கறது... வர்ற பென்ஷன்ல சர்க்கரை வியாதி, பி.பி., இதுக்கெல்லாம் மாத்திரை வாங்கினது போக, வாடகைக்கும் கொடுத்துட்டா, மாதம் முழுவதும் தள்ள முடியுமான்னு தெரியல. சென்னையிலன்னா பையனோட ஒரே வீட்டுல இருந்துக்கலாம்; அதனால, தனியா வாடகை இல்ல. பையன் பி.எஸ்.சி., படிச்சிட்டு ஒரு கம்பெனியில வேலை செய்றான்; ஏதோ ஓரளவு சம்பளம் வருது; மருமகளும் வேலைக்கு போறதால, பணக் கஷ்டமில்லாம காலம் போகுது.

வேலூரில் ஒரு லாட்ஜில் தங்கினேன்; காலையில் பஸ் பிடித்து, விரிஞ்சீபுரம் போகணும். லாட்ஜிலே தனியா படுத்திருக்கும் போது, நான் பிறந்து, வளர்ந்த ஊரில தங்க இடமில்லையேன்னு நினைக்கும் போது மனசு வலித்தது.

இப்போ யோசிச்சு பாத்தா... மாலி சொன்னது சரிதான்னு தோணுது. நானும், என் பையன பிரென்ச் படிக்கச் சொல்லியிருந்தா, அவனும் ஒருவேளை பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில வேலைக்கு சேர்ந்திருக்கலாம்; இன்னும் நிறைய சம்பளம் வாங்கியிருப்பான். அதுமட்டுமில்ல, ஒருவேளை என் சொந்த ஊரிலேயே ஒரு வீடு வாங்கியிருக்கலாம்; நான் தான் தவறு செய்துட்டேனோ... மனம் உறுத்தியது.

காலையில, 4:00 மணிக்கு அலாரம் அடித்ததும், எழுந்து குளிச்சிட்டு, கோவிலுக்கு கிளம்பினேன். பஸ் பிடிச்சு ஊர் போய் சேரும் போது மணி, 6:30.

கோவிலுக்கு போகும் வழியில் தான் மாலியின் வீடு இருந்தது. அந்த வீடு இப்போது எப்படி இருக்குமோ... கிட்ட நெருங்கிய போது அடையாளம் தெரியல. சமீபத்தில் தான் பெயின்ட் அடித்திருப்பர் போலிருக்கு; வீடு,'பளீச்' என, இருந்தது வாசலில் கோலம் போட்டு மங்களகரமாயிருந்தது. அந்த வீட்டைப் பார்த்ததும், என்னவோ அது என் வீடு மாதிரி கஷ்டமாயிருந்தது. சரி, ஏதோ ஒரு கடைசி தொடர்பு, அதுவும் அறுந்து போயிற்று. பழைய வீட்டால் எந்த பயனும் இல்லாததால், விற்று விட்டான் போலிருக்கு. அவன் செஞ்சதிலே என்ன தப்பு... எல்லாரும் என்னை மாதிரி முட்டாளாயிருக்க முடியுமா?

ஆனா, யோசிச்சுப் பாத்தா... இப்போ சென்னையில நாங்க இருக்குற வீடு, கொஞ்சம் சின்னதா இருந்தாலும், நான், மனைவி, பையன் மற்றும் மருமகள் நாலு பேரும் ஒண்ணா கூட்டுக் குடும்பமா இருக்கோம். ரெண்டு வருஷத்துக்கு முன் பையனுக்கு கல்யாணம் ஆனவுடனே தனியா ஒரு வீடு பாத்து வெக்கறேன்னு தான் சொன்னேன். ஆனா, பையன்தான் ஒத்துக்காம இப்போ நாங்க இருக்கற டபுள் பெட்ரூம் ப்ளாட்டை வாடகைக்கு எடுத்தான். பையன் மட்டுமில்ல, மருமகளும் எங்க மேல பாசமா இருக்கா. ஒருவேளை சொந்த ஊரிலே ஒரு வீடு இருந்திருந்தா, நான் இங்க வந்திருக்கலாம்; அப்போ இவங்களோட பாசத்தை அனுபவிக்கிற பாக்கியம் எனக்கு கிடைக்காமலே போயிருக்கலாம். கடவுள் போடற கணக்கு, நமக்கு தான் புரியிறதில்லை!

கோவிலில், மரகதவல்லி தாயாரின் சன்னிதியில் உட்கார்ந்து, மனசார தரிசனம் செய்தேன். பின், திரும்பிப் போகும் போது மாலியின் வீட்டு வாசலில் ஏகப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தப்பட்டிருந்தது. வெளிவாசல் திண்ணை அப்படியே இருந்தது. பழைய நினைவுகள் உந்த, அந்த திண்ணையில் போய் உட்கார்ந்தேன். உள்ளே ஒரு கலவையான சத்தம். நிறைய பசங்களும், பெண்களும் உள்ளே இருந்தாங்க. ஏதோ டுடோரியல் காலேஜ் போலிருக்குன்னு நினைச்சுட்டே உள்ளே நுழைஞ்சேன். ஒரு மூலையிலே, நாங்க உட்கார்ந்து தாயக்கட்டை ஆடும் இடத்தில், சில பையன்கள் கம்ப்யூட்டரில் மூழ்கியும், இன்னும் சில பசங்கள் பேப்பர் படித்துக் கொண்டும் இருந்தனர். டுடோரியல் காலேஜில் இதெல்லாமா என்று ஆச்சரியமாக இருந்தது.

உள்ளே ஒரு பெரிய அறை; அதான் மாலியோட தாத்தாவோட அறை. கிட்டே போன போது ஒரு பெரிய கரும்பலகையும், யாரோ ஒருத்தர் அதிலே கணக்கு போடுவதையும் பார்த்தேன். ஆனா, கல்லூரி செல்லும் வயதில் இருக்கும் பசங்கள், தரையில் உட்கார்ந்திருப்பதை பார்த்ததும், எனக்கு ஒண்ணும் புரியல. திரும்பிப் போகலாம்ன்னு நினைக்கும் போது தான், அவன் பார்த்தான். கரும்பலகையிலே கணக்கு போட்டுக் கொண்டிருந்தது மாலி தான்; என்னைப் பார்த்ததும், அவன் கண்ணில் சந்தோஷம் கொப்பளித்தது..

''டேய் பந்து,'' என்று, கத்தி கொண்டே வேகமா என்னிடம் வந்தான்.

எனக்கும் அவனைப் பாக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. அங்கு இருந்த பசங்ககிட்டே, ''நீங்க இந்தக் கணக்கை போடுங்க; நான் இதோ வர்றேன்,'' என்று சொல்லி பக்கத்து அறைக்கு அழைத்துச் சென்றான்.

''ஏண்டா மாலி... நீ எங்கடா இந்த ஊரிலே?''என்று கேட்டேன்.

அப்போ ஒரு பொண்ணு, ஒரு தட்டிலே வாழை இலையால் எதையோ மூடியபடி எடுத்து வந்தாள். மாலி அதை வாங்கி, தன் முன் இருந்த மேஜைல வச்சு, ''சீதா இன்னிக்கு என்னோட நண்பர் வந்திருக்கிறார்; இன்னும் நான்கு இட்லி கிடைக்குமா?''என்றான்.

அந்தப் பெண் புன்னகையோடு என்னைப் பார்த்து, ''கட்டாயம் கொண்டு வரேன் சார்,'' என்றாள்.

''மாலி... என்னடா இதெல்லாம்?'' என்றேன்.

''பந்து... நாமெல்லாம் இதே கிராமத்திலே பிறந்து வளர்ந்தாலும், பெரிய நகரத்திலே போய் செட்டிலான பின், நம்ம கிராமத்து ஜனங்களைப் பத்தி யோசிக்கிறதேயில்லைடா... இவங்களும் நம்ம ஊர்தானேடா. இவங்களுக்கு ஏதாவது செய்யணும்ன்னு என்னிக்காவது நமக்கு தோணியிருக்கா... அது மட்டுமில்லேடா, ஏதோ நகரத்திலே இருக்கற மாணவர்கள் தான் அறிவாளிங்க மாதிரியும், இவங்க ௌல்லாம் மட்டம்ன்னும் நாமளே நினைக்க ஆரம்பிச்சிட்டோம். அதனால தான் நம்ம ஊர்ப்பசங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்ன்னு தோணிச்சு. அதுதான், இந்த ஊருக்கே திரும்பி வந்துட்டேன். சுற்று வட்டாரத்திலே இருக்கிற கல்லூரியில் படிக்கற, படிச்சு முடிச்ச பசங்களுக்கு, போட்டி தேர்வு எழுத எனக்குத் தெரிஞ்சத சொல்லிக் கொடுக்கறேன். பந்து... நீ சொன்னா நம்ப மாட்டே, போன மாசம் இங்க படிச்ச நாலு பசங்க, வங்கி அலுவலகர் பணிகளுக்கு தேர்வாகி இருக்காங்க தெரியுமா...''என்றான்

அதைக் கேட்கும் போது எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனாலும், மனசுக்குள் ஒரு கேள்வி... அவனே சொல்வான்னு பாத்தா சொல்லல... அதனால், நானே கேட்டேன்... ''அது சரிடா, ஏன் வெளிலேந்து டிபன் வருது... உன் பெண்டாட்டி இங்கே வரலியா?''என்று கேட்டேன்.

ஒரு நிமிடம் மவுனமானான் மாலி.

''அவ புண்ணியம் செய்தவடா... மூணு வருஷத்துக்கு முன் நடந்த ஒரு விபத்துல போயிட்டா,'' என்றான்.

எனக்கு கேட்கவே என்னவோ போலிருந்தது. நான் மாலியின் மனைவியைப் பார்த்ததென்னவோ ஓரிரு தடவைதான். ஆனாலும், எங்க நட்பை மதித்து, நாங்க டில்லி போயிருந்தப்போ ரொம்ப நல்லா கவனிச்சா. என்ன இருந்தாலும் வயசு காலத்தை விட, வயசான காலத்துல தான வாழ்க்கைத்துணை அவசியம்.

மாலியே பேசினான்... ''அவ போன பின், தனிமை என்னை ரொம்ப வாட்ட ஆரம்பிச்சதுடா. அது மட்டுமில்ல, நாலு வயசு, ஒரு வயசுல ரெண்டு பேரக்குழந்தைகள். அவ இருந்த வரைக்கும் ஒண்ணும் பிரச்னையில்ல. ஆனா, அவ போனப்புறம் பேபி சிட்டர் தேடித்தேடி அலுத்துப் போயிட்டான் என் பையன். அது மட்டுமில்லடா, பேபி சிட்டரெல்லாம் அங்கே ரொம்ப காஸ்ட்லி.

''ஒரு நாள், என் பையன் சொன்னான்... 'அப்பா இங்கே சிட்டிஸன்ஷிப் இல்லாம தங்கறது ரொம்ப செலவு. அம்மாவுக்கு வைத்தியம் பாக்கறதுக்கு ரொம்ப செலவாச்சு; ஆனாலும், பிரயோஜனமில்ல. இதே இந்தியாவா இருந்தா, இவ்வளவு செலவு ஆயிருக்காது. நான் பணத்துக்காக சொல்லலப்பா, ஆனா, நம்ம செய்ற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு, பிரயோஜனம் வேணுமில்லையா... அதுக்குத்தான் சொன்னேன்...' என்றான். மறுவாரமே ஊருக்கு வந்துட்டேன்டா,'' என்றான்.

பெயர்: வி.எஸ்.அருண்குமார்,

வயது: 42,

சொந்த ஊர்: விரிஞ்சீபுரம்,

பணி: தென்னக ரயில்வேயில், தலைமை விஜிலன்ஸ் இன்ஸ்பெக்டர்.

சமூக அவலங்களை சுட்டி காட்டும் விதத்தில் கதை எழுதுவதில்  விருப்பம் என்கிறார். இவர், பத்திரிகைக்கு அனுப்பும் முதல் சிறுகதை இது. முதல் சிறுகதையே பரிசு பெற்றது மிகவும் சந்தோஷம் என்கிறார். பெற்றோரை தங்களுடன் வைத்து பராமரிக்கும் அனைவருக்கும், இக்கதையை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us