PUBLISHED ON : செப் 28, 2014

அக்., 2 - சரஸ்வதி பூஜை
உலகில் எத்தனையோ மலர்கள் இருக்கையில், அன்னை சரஸ்வதியும், தாயார் லட்சுமி தேவியும் ஏன் தாமரை மலர்களை இருப்பிடமாக கொண்டனர் தெரியுமா?
ஒரு பொருளை தண்ணீரில் போட்டால், ஒன்று அது மூழ்கும் அல்லது மிதக்கும். ஆனால், தாமரையின் இயல்போ வெள்ள மட்டத்திற்கு தகுந்தாற் போல் உயரும். இதைத்தான் திருவள்ளுவர், வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு
என்றார்.
மனிதனின் உள்ளத்தை ஒப்பிடுவதற்கு அவர் வானத்தையோ, பரந்த பூமியையோ தேடவில்லை. தாமரை மலரைத் தான் துணைக்கு அழைத்தார். அந்தளவுக்கு உயர்ந்தது தாமரை. தாமரையின் இதழ்கள் விரிந்து பரந்திருக்கும்; பரந்த அறிவைப் பெற வேண்டும் என்பதால் சரஸ்வதி வெள்ளைத் தாமரையிலும், செம்மையான (நல்ல) வழியில் சேர்க்கும் பொருளுக்கு அழிவில்லை என்பதை உணர்த்த லட்சுமிதேவி செந்தாமரையிலும் வசிக்கின்றனர்.
சிவனின் நெற்றியில் இருந்து புறப்பட்ட ஆறுபொறிகள், சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் அமர்ந்து குழந்தைகளாக மாறின. அதுவே, ஆறுமுகம் எனும் முருகப்பெருமானாக வடிவெடுத்தது. உலகைப் படைக்கிற பிரம்மாவும் கூட தாமரையில் தான் வீற்றிருக்கிறார். ஏன்... நம் முழுமுதல் கடவுளான விநாயகரும் தாமரையை விட்டு வைக்கவில்லை. தருண கணபதி, துவிஜ கணபதி, ஊர்த்துவ கணபதி, உச்சிஷ்ட கணபதி, ஏகாட்சர கணபதி ஆகியோர் செந்தாமரை மலர் மீது, வீற்றிருப்பதைக் காணலாம். கணபதியை வணங்கும் பக்தர்கள், தாமரை வடிவ யந்திரங்களில் மந்திரங்களை வரைந்து, தாமரை மலர் தூவி வணங்குவர். மதுரை வந்த இந்திரன், சுந்தரேஸ்வரரை வணங்க பொற்றாமரைகளையே பயன்படுத்தினான்.
தாமரையைப் பாடாத புலவர்களே இல்லை. தொல்காப்பியம் தொடங்கி பாரதிதாசன் வரை அதைப் பாடியுள்ளனர். வடக்கே காளிதாசர், துளசிதாசரும் இதைப் பாடியுள்ளனர். தாகூர், இக்பால், வேமன்னா, வள்ளத்தோல் போன்ற அறிஞர் பெருமக்களும் இதைப் புகழ்ந்துள்ளனர்.
சரஸ்வதி பூஜையன்றும், நவமி திதியன்றும், மூல நட்சத்திர நாட்களிலும், பவுர்ணமியன்றும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாசல் மற்றும் பூஜை அறைகளில் தாமரைக் கோலம் போடுவது, கல்வி மற்றும் செல்வ வளத்தைத் தரும் என்பது ஐதீகம்.
விழாக்களைக் கொண்டாடும் போது அதன் தாத்பர்யத்தை அறிந்து கொண்டாடினால், அந்த விழா முழுமை பெறும். அறிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களையே சரஸ்வதி நேசிப்பாள். அன்னை சரஸ்வதி, அனைவருக்கும் கல்வி வளத்தையும் சகல பாக்கியங்களையும்
அருளட்டும்.
தி.செல்லப்பா
