PUBLISHED ON : ஜன 16, 2022

விதர்ப்ப நாட்டில், சத்தியர் என்ற ரிஷி இருந்தார். ஒரு சில இடங்களில் சுற்றிக் கிடைப்பதைக் கொண்டு, சாத்வீகமாய் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். எந்த ஜீவராசிக்கும் மனதால் கெடுதல் நினைக்காதவர். அவர் மனைவி புஷ்கரமாலினி.
கணவரிடம் உள்ள அன்பால் மட்டுமல்லாது, சாபம் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தாலும் அவருக்கு அனுசரணையாக நடந்து வந்தாள். உதிர்ந்துபோன மயில் இறகுகளையே ஆடையாகக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.
சருகுகளையே தின்னும் கலைமான் ஒன்றும், ரிஷியுடன் வசித்து வந்தது.
ஒரு சமயம், யாகம் செய்து, சொர்க்கத்தை அடைய வேண்டும் என தீர்மானித்தார், ரிஷி. காட்டில் ஓரிடத்தில், ஒரு உயிரினத்துக்கும் துன்பமின்றி, சாமை என்ற தானியத்தையும், சூரியபர்ணி எனும் பளபளப்பான இலையையும் கொண்டு யாகத்தைத் துவக்கினார்.
அப்போது, அவருடன் கூடவே இருக்கும் மான், 'ரிஷியே, யாகத்தில் பலியிடும் பொருள் இல்லை. அது இல்லாமல் யாகம் செய்தால், உங்கள் எண்ணம் நிறைவேறாது. ஆகையால், யாகத்தில் என்னையே பலி கொடுங்கள்; தடையில்லாமல் சொர்க்கத்தை அடையுங்கள்...' என்றது.
அதே நேரம் யாகத்தீயிலிருந்து சாவித்திரி தேவி வெளிப்பட்டு, மான் சொன்னதையே ரிஷியிடம் சொல்லி, அப்படியே செய்யச் சொன்னாள்.
'யார் சொன்னாலும் சரி, என்னுடன் இருக்கும் மானை, நான் கொல்ல மாட்டேன்...' என்று கூறி விட்டார், ரிஷி.
'யாகத்தில் கெட்டது நடந்து விட்டது...' என்ற சாவித்திரி தேவி, அங்கிருந்து மறைந்தாள்.
ரிஷியோ மானைத் தழுவி, 'நீ போகலாம்...' என்றார். மான் நகர்வதாக இல்லை.
'ரிஷியே, என்னை தாராளமாகப் பலி கொடுக்கலாம். யாகத்தில் பலியிடப்படும் நான், சொர்க்கம் சென்று, நற்கதி அடைவேன். உங்களுக்கு ஞானக்கண் கொடுக்கிறேன். சொர்க்கத்தில் உள்ள அழகான அப்சர பெண்களையும், கந்தர்வர்களையும் பாருங்கள்...' என்றது.
மான் அளித்த ஞானதிருஷ்டியின் மூலம், நீண்ட நேரம் சொர்க்க காட்சிகளைப் பார்த்த ரிஷிக்கு மனம் மாறியது.
'யாகத்தில் பலி கொடுப்பதால், இம்மான் சொர்க்கத்தை அடையும் என, சொல்வது உண்மை தான் போலும். பலி கொடுக்காமல் நான் செய்வது, முறையான யாகமில்லை...' எனத் தீர்மானித்த ரிஷி, மானைப் பலியிட முடிவு செய்தார்.
அதே விநாடியில், ரிஷியின் பெரும் தவம் அடியோடு அழிந்து போனது.
தன்னைவிட்டுத் தவம் நீங்கியதை உணர்ந்த ரிஷி, 'சே... ஒழுங்காக இருந்தவன், ஒரு விநாடியில் கெட்டுப் போய் விட்டேனே. உயிரினங்களை இம்சைப்படுத்தி யாகம் செய்யக் கூடாது. இனி, இதுவே என் தர்மம்...' என்று முடிவெடுத்தார்.
ரிஷிக்கு, தர்மதேவதை நேரில் வந்து தானே யாகம் செய்து வைத்தது. விலகிய தவம் மறுபடியும் வந்து சேர்ந்தது.
எந்த உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே உயர்ந்த தர்மம் எனும் இக்கதை, பீஷ்மரால், தர்மருக்குச் சொல்லப்பட்டது.
பி. என். பரசுராமன்
