PUBLISHED ON : ஜன 16, 2022

இருவழிப் பாதையில், ஜெயம்ரவி!
'ரொமான்டிக்' நாயகனாக வலம் வந்த, ஜெயம் ரவி, சமீபகாலமாக, 'ஆக் ஷன்' கதைகளில் கவனத்தை திருப்பியவர், காமெடி கதைகள் பக்கமும் திரும்பி இருக்கிறார். முக்கியமாக, காதலும், 'ஆக் ஷனும்' கை கொடுக்காத பட்சத்தில், காமெடி காட்சிகள் தான் பல படங்களுக்கு கைகொடுத்து வெற்றி பெற்றுள்ளன. அதன் காரணமாகவே, தற்போது காமெடி கதைகளிலும் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். சில காமெடி பட இயக்குனர்களை அழைத்து, தன்னை கருத்தில் கொண்டு கதை உருவாக்குமாறு கூறி வருகிறார். அதோடு, யோகிபாபு, சூரி உள்ளிட்ட சில முக்கிய காமெடியன்களையும் தன்னுடன் இணைத்து, ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்து விட வேண்டும் என்று தயாராகிக் கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
பிரியா பவானி சங்கரின், 'ஓப்பன் ஸ்டேட்மென்ட்!'
பெரும்பாலும் சினிமா நடிகையரை பொறுத்தவரை, கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், தங்களது திறமையை, ஆஹா ஓஹோ என்று, புகழ்ந்து எழுதுமாறு பத்திரிகையாளர்களை கேட்டுக் கொள்வர். ஆனால், பிரியா பவானி சங்கரோ, 'என் நடிப்பு குறித்த பிளஸ், மைனஸ் எதுவாக இருந்தாலும் ஓப்பனாக எழுதுங்கள். அதோடு, நான் சரியாக நடிக்கவில்லை என்றால், கடுமையான முறையில் விமர்சனம் செய்யுங்கள். நீங்கள் அப்படி செய்யும் போது தான் இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற வெறி எனக்குள் ஏற்படும்; என் குறைகளை சரி செய்து கொள்ள முடியும்...' என்கிறார். இவரின் இந்த வித்தியாசமான அணுகுமுறை, அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. போகாத ஊருக்கு வழியும், காராமணிக்கு களையும்!
எலீசா
'ஆக் ஷன்' கெத்து காட்டும், அஞ்சலி!
சினிமாவில், 'ரொமான்டிக்' நாயகியாக நடித்து வந்த அஞ்சலிக்கு, 'ஆக் ஷன் ஹீரோயின்' ஆக நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற, எந்த இயக்குனர்களும் முன்வரவில்லை. தற்போது, 'வெப்' தொடரில், 'ஆக் ஷன் ஹீரோயின்' ஆக நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதையடுத்து, 'இந்த, 'வெப் சீரிஸ்' மூலம், 'ஆக் ஷன்' திறமையை அதிரடியாக வெளிப்படுத்தி, அடுத்து சினிமாவிலும், 'ஆக் ஷன்' கோதாவில் குதித்து விட வேண்டும் என்பதற்காக, 'பைட் மாஸ்டரை' நியமித்து, தீவிர சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன்...' என்கிறார். கையை ஊன்றிதான் கரணம் போட வேண்டும்!
— எலீசா
'ஸ்கெட்ச்' போடும், கீர்த்தி சுரேஷ்!
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த, கீர்த்தி சுரேஷ், தெலுங்கிலும், 'பிசி' ஆனார். இருப்பினும், சமீபகாலமாக, தமிழ் சினிமா அவரை கைவிட்டு விட்டது. அதனால், தெலுங்கு சினிமாவை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம் என்பதற்காக, மலையாளத்திலும் காலுான்ற துவங்கி இருக்கிறார். மலையாளத்தில் முன்னணி இடத்தை கைப்பற்றுவதற்காக, அழுத்தமான கதைகளை தேர்வு செய்து, அந்த படங்களுக்கு, தன் அக்காள் ரேவதியை தயாரிப்பாளராக்கி வருகிறார். அதோடு, இதுவரை தன்னை கண்டுகொள்ளாத சில மேல்தட்டு நடிகர்களை தட்டித்துாக்க, 'ஸ்கெட்ச்' போட்டு வருகிறார். மெள்ள மெள்ள வந்தாளாம்; கட்டில், மெத்தை போட்டாளாம்!
— எலீசா
பான் இந்தியா நடிகராகும், விஷால்!
தற்போதைக்கு, தமிழ் சினிமாவில், தனுஷ் மட்டுமே கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என்று, தன் மார்க்கெட்டை விரிவுபடுத்தியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும், தெலுங்கு படங்களில் நடிக்க தயாராகியுள்ளனர். இந்நிலையில், தமிழில் தான் நடிக்கிற படங்களை தெலுங்கிலும், 'டப்' செய்து வெளியிட்டு வந்த, விஷால், 'என் புதிய படம் ஒன்றை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளில் வெளியிட்டு, பான் இந்தியா நடிகராகப் போகிறேன்...' என்கிறார். அடுத்தபடியாக 'கால்ஷீட்' கேட்கும் தயாரிப்பாளர்களிடம், தன் படத்தை மூன்று மொழியிலும் வெளியிட வேண்டும் என்று, நிபந்தனை போட்டே ஒப்பந்தமாகிறார்.
— சினிமா பொன்னையா
சினி துளிகள்!
* தன் இசையில் மட்டுமே பின்னணி பாடி வந்த அனிருத், சமீபகாலமாக, தமிழ், தெலுங்கு என, பிரபல இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடி வருகிறார்.
* விஜயுடன் மெர்சல், சிம்புவுடன் மாநாடு, சிவகார்த்திகேயனுடன், டான் படத்தில் வில்லனாக நடித்திருப்பவர், எஸ்.ஜே.சூர்யா. அடுத்து, விஷாலுடன் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவ்ளோதான்!
