தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மவுனங்கள் அழகு!

மவுனங்கள் அழகு!

மவுனங்கள் அழகு!


PUBLISHED ON : ஜன 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''அப்பாடா,'' என்றபடி, பையுடன் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தான், குமார்.

'நியூஸ் சேனல்' பார்த்துக் கொண்டிருந்த அப்பா, புன்னகையுடன் அவனைப் பார்த்து, ''என்ன குமார், 'செமஸ்டர்' முடிஞ்சு விடுமுறை விட்டாச்சா,'' என்றார்.

''ஆமாம்பா... ஒரு மாசம் விடுமுறை. பின்னால என்னப்பா சத்தம்.''

''வேற யாரு உங்கம்மா தான்... நேத்து, 'டிவி'யில் பார்த்த சீரியல் பத்தி, வேலைக்காரியுடன் விவாதிச்சிட்டு இருக்கா.''

மகன் குரல் கேட்டு முகம் மலர உள்ளே வந்தவள், ''குமார், நீ வந்ததும் தான் வீடே கலகலப்பாக இருக்கு. நீ வருவேன்னு சீக்கிரமே சமையல் முடிச்சுட்டேன், சாப்பிடறியா?''

''இருக்கட்டும்மா... குளிச்சுட்டு அப்புறமா சாப்பிடறேன். ஆமா, பக்கத்து வீட்டில் தாத்தா, பாட்டி எப்படி இருக்காங்க... வழக்கம் போல எந்த சத்தமும் இல்லாமல் வீடு அமைதியாக இருக்கு.''

அவர்கள் வீட்டையும், பக்கத்து போர்ஷனையும் நடுவில் உள்ள சுவர் தான் பிரிக்கிறது; அருகருகே வீடு.

வீட்டை இரண்டாகப் பிரித்து வாடகைக்கு விட்டிருந்தனர். ஒரு போர்ஷனில், குமார் குடும்பமும், பக்கத்து போர்ஷனில், வயதான தம்பதியும் குடியிருந்தனர்.

தாத்தாவிற்கு வயது: 85. அவர் மகனுக்கு வயது: 65க்கு மேல் இருக்கும். மகன், பேரன், பேத்திகள் எடுத்து, ஆளுக்கொரு திசையில் இருக்க, யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் தாத்தா, பாட்டி மட்டும் தனியே இருக்கின்றனர். வேலை பார்த்து ஓய்வுப்பெற்ற ஊரிலேயே தங்கி விட்டார், அந்த பெரியவர்.

''தாத்தாவுக்கு சுத்தமா காது கேட்கலை, குமாரு. சத்தம் போட்டு பேச வேண்டியிருக்கு. பாட்டியம்மா அதிகம் பேச மாட்டாங்க. காலையில், வேலைக்காரி வந்து, வீட்டு வேலைகள செய்து, இரண்டு பேருக்கும் சமைச்சு வச்சுட்டு போயிடுவா.

''அப்புறம் என்ன துாங்கியெழுந்து, நாலு சுவரை பார்த்துக்கிட்டு பொழுது போகுது. தடுமாற்றம் இருப்பதால் அதிகம் வெளியே வர்றதில்லை. வயசான காலத்தில், பாவம் இரண்டு பேரும் தனியா இருக்காங்க.''

''சரிம்மா... சாயந்திரமாக போய் அவங்களைப் பார்த்துட்டு வரேன்.''

''ஆமாம்பா... சாத்துக்குடி பழம் வாங்கினது இருக்கு. போகும்போது எடுத்துட்டு போ; உன்னைப் பார்த்தால், அவங்க பேரனைப் பார்த்ததுபோல சந்தோஷப்படுவாங்க.''

தாழ்ப்பாள் போடாமல் சார்த்தி இருந்த கதவை லேசாகத் தட்டி, ''தாத்தா,'' என்றழைத்தபடி உள்ளே நுழைந்தான், குமார்.

ஈசி சேரில் சாய்ந்து, கண் மூடி படுத்திருந்த முதியவரின் கையை மெல்ல தொட்டு, ''தாத்தா... குமார் வந்திருக்கேன். எப்படி இருக்கீங்க?''

''எப்ப வந்தே குமார்... எப்படியிருக்கே, படிப்பு முடிஞ்சுதா?''

''இல்ல தாத்தா... இன்னும் ஆறு மாசம் இருக்கு. விடுமுறை விட்டாங்க, வந்திருக்கேன். நீங்க எப்படி தாத்தா இருக்கீங்க,'' சத்தமாக கேட்டு, அவரருகில் அமர்ந்தான்.

''வயசு, 85. உடல் தளர்ந்தாச்சு... காது கேட்கலை... என்னமோ பொழுது ஓடுது. நானும், அவளுமாக வாழ்க்கையை நகர்த்தறோம். அவளுக்கும், 80 முடியப் போகுது. திகட்ட திகட்ட கஷ்ட நஷ்டங்களோடும், சந்தோஷங்களோடும் வாழ்க்கையை வாழ்ந்துட்டு, கடைசிப் படிகளில் நிற்கிறோம்.''

''தாத்தா, பாட்டி எங்க?''

''உள்ளே ஏதாவது செய்துட்டு இருப்பா... அவளுக்கு ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு... துடைச்சதையே துடைச்சுக்கிட்டு, கழுவினதையே கழுவிக்கிட்டு அவ பொழுதும் போகுது. முழங்கால் வலி, நடமாட்டம் குறைஞ்சுடுச்சு.''

அவர் சொன்னதைக் கேட்டு, குமாருக்கு கஷ்டமாக இருந்தது. கவனிக்க அருகில் ஆள் இல்லாத தனிமை; நிசப்தம் சூழ்ந்த மவுனம்.

தாங்கி மெல்ல நடந்து, அருகில் வந்து, கண்களை இடுக்கி, ''நீ, குமார் தானே... நல்லாயிருக்கியா?'' என்றாள்.

''இருக்கேன் பாட்டி.''

அதற்கு மேல் பேச எதுவுமில்லை. தரையில் கால் நீட்டி உட்கார்ந்து, சிறிது நேரத்தில் சுவற்றில் சாய்ந்தபடி கண் மூடினாள்.

''குட்டி துாக்கம்... பத்து நிமிஷத்தில் கண் முழிச்சிடுவா,'' என்றார், தாத்தா. கொண்டு வந்த சாத்துக்குடி பழங்களை மேஜையில் வைத்தான்.

''சாப்பிடறீங்களா, உரிச்சுத் தரட்டுமா தாத்தா?''

''வேண்டாம்பா... அவ எழுந்திருக்கட்டும். உரிச்சுத் தருவா, இரண்டு பேரும் சாப்பிடுவோம். ஒருத்தரை விட்டு ஒருத்தர் எதுவும் சாப்பிட மாட்டோம். ஒரு பிஸ்கெட்டா இருந்தாலும் ஆளுக்கு பாதி தான் சாப்பிடுவோம்,'' என, சிரித்தார்.

''தாத்தா, நான் ஒண்ணு கேட்டா, தப்பா நினைக்க மாட்டீங்களே.''

''தப்பா நினைக்கிற மாதிரி அப்படியென்ன கேட்கப் போற, சும்மா கேளுப்பா.''

''இரண்டு பேருமாக இருக்கீங்க... உங்களுக்குள் பேச்சுவார்த்தையும் இல்லை. இந்த தனிமை, அமைதி எப்படி தாத்தா உங்களால் இருக்க முடியுது?''

''நாங்க பேசி, சண்டை போட்ட ஞாபகங்களைப் பகிர்ந்து, இப்ப எல்லாமே முடிஞ்சு போச்சுப்பா... அவளை அனுசரிக்க நானும், என்னை அனுசரிக்க அவளும் கத்துக்கிட்டா... எங்களுக்குள் தனிமை இல்லப்பா...

''நாங்க தனியா இல்லை; 85 வயது கிழவனும், 80 வயது கிழவியும், வாழ்க்கையின் முதுமையில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதே கொடுப்பினை தானே...

''இனி, எங்களுக்குள் வார்த்தைகள் தேவையில்லை. என் கண்ணெதிரில் அவள் இருக்கா; அவள் பார்வையில் நான் இருக்கேன்; இது போதும். அவள் பேசினாலும் என் காதில் விழப்போவதில்லை; நான் பேசுவது, அவள் ஞாபகத்தில் இருக்கப் போவதில்லை.

''எங்கள் இருவருக்குள் இருக்கும் இந்த மவுனமே ஒரு அழகு தான். கடவுள் எங்க இரண்டு பேரையும் ஒன்றாக அழைச்சுக்கிட்டான்னா, அதைவிட சந்தோஷம் எதுவும் இல்லைப்பா,'' என்றார்.

மனம் கனக்க, அவர் கைகளை அன்போடு பிடித்தான், குமார்.

பரிமளா ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us