
எதைப் பார்த்தாலும் பயம். ஏதாவது வெளிச்சம் தெரியாதா என்ற ஏக்கம். என்ன செய்யலாம், அன்னை சாரதா தேவியார் வழி காட்டுகிறார்:
ஒருநாள், ஐயராம்பாடி எனுமிடத்திலிருந்து, தட்சிணேஸ்வரம் நோக்கி புறப்பட்டார், அன்னை. ஆண்களும், பெண்களுமாக சிலர், துணைக்கு சென்றனர். வழியில், ஒரு பெரும் காடு குறுக்கிட்டது.
கள்வர் பயம் நிறைந்த பகுதி அது. இருள் சூழ்ந்த நேரம். விரைவாக தட்சிணேஸ்வரம் போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில், வந்தவர்கள், சற்று வேகமாக நடக்கத் துவங்கினர்.
'நீங்கள், முன்னே செல்லுங்கள். நான் வந்து சேர்ந்து கொள்கிறேன்...' என்றார், அன்னை.
மற்றவர்கள் முன்னால் சென்று விட்டனர். மெல்ல நடந்த அன்னை, வழி தெரியாமல், ஓரிடத்தில் நின்றார்.
அப்போது, 'இரவு நேரத்தில், இங்கே நின்று கொண்டிருப்பது யார்...' என, கடுமையான குரல் கேட்டது.
பார்த்தால், கையில் பெரிய தடியுடன், பயங்கரமான தோற்றத்தில் ஒருவன் நின்றிருந்தான்.
'அப்பா... என் கூட வந்தவர்கள், முன்னால் சென்று விட்டனர். எனக்கு வழி தெரியவில்லை. நீங்கள் வழி காட்டி அழைத்துச் சென்றால், நான் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன். உங்கள் மாப்பிள்ளை, அதாவது, என் கணவர், தட்சிணேஸ்வரத்தில், ராணி ராஸ்மணி கட்டியிருக்கும் காளி கோவிலில் இருக்கிறார். உங்களை பார்த்தால், அவர் அன்போடு வரவேற்பார்...' என்று, திருடனிடம், அப்பா - மகள் உறவு முறையில், அன்போடும், கனிவோடும் பேசினார்.
திருடனும், அப்போது அங்கு வந்த திருடனின் மனைவியும் வியந்தனர்.
'பகலிலேயே நம்மை பார்த்து பயப்படுபவர்கள் மத்தியில், இருள் சூழ்ந்த நேரத்தில், இப்பெண்மணி கொஞ்சம் கூட பயப்படாமல், நம்மை, அப்பா - அம்மா என்று, உறவு முறை கொண்டாடுகிறாளே...' என்று நெகிழ்ந்தனர்.
'அம்மா... வா, எங்களுடன் இருந்து காலையில் செல்லலாம்...' என்று கூறி, அழைத்துச் சென்று, உணவு கொடுத்து உண்ணச் செய்து, படுக்க வைத்தனர்.
பொழுது விடிந்ததும், திருடனும், அவன் மனைவியும், அன்னையை அழைத்து போய், முன்னால் சென்றிருந்த உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
'நீங்கள் இருவரும், அவசியம் தட்சிணேஸ்வரம் வாருங்கள்...' என்று, அன்போடு அழைப்பு விடுத்தார், அன்னை.
அன்றோடு திருட்டுத் தொழிலை விட்டான், அத்திருடன்.
அனைவரிடமும் அன்போடு நடக்க முயல்வோம். திருடனையே திருத்திய, அன்னையிடம், அருள் தர வேண்டுவோம்.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
* ஏற்றிய விளக்கில் இருந்து, கற்பூரத்தையோ, ஊதுபத்தியையோ ஏற்றக் கூடாது.
* அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில், எண்ணெய் தேய்த்து குளிக்க கூடாது.
* சாமி படங்களுக்கு, வாசனை இல்லாத பூக்களை வைக்கக் கூடாது.

