
'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து: கடைக்காரரிடம் சென்று, 'கோமாளித் தொப்பி பேப்பர், ஒரு கொயர் கொடுங்கள்...' என்று கேட்டால், உங்களைப் பார்த்து, கோமாளித்தனமாக சிரிப்பார்.
ஆனால், அவரிடமே, 'புல்ஸ்கேப் காகிதம், ஒரு கொயர் கொடு...' என்றால், முழ நீளமுள்ள வெள்ளை காகிதங்களை எடுத்து சுருட்டி கொடுப்பார்.
'புல்ஸ்கேப்' என்றதும் புரிந்து கொண்ட, கடைக்காரர், அந்த பதத்தின் அசல் மொழிபெயர்ப்பான, 'கோமாளித் தொப்பி' என்ற சொல்லை கேட்டவுடன், அசட்டு அம்பியாக நினைத்து, உங்களை பார்த்து சிரிப்பார்.
இம்மாதிரி முழ நீள அளவு காகிதத்திற்கு, 'புல்ஸ்கேப்' என்ற பெயர் ஏற்பட்டது எப்படி?
பதிமூன்றாம் நுாற்றாண்டு முதல், 17ம் நுாற்றாண்டு வரை, 400 ஆண்டுகள், இந்த அளவுள்ள காகிதங்களில், தண்ணீர் அடையாளமாக, கோமாளிகள் அணியும் மணி கட்டிய தொப்பியின் உருவம் பதிக்கப்பட்டு, 'கோமாளித் தொப்பி' என்ற பொருளுள்ள, 'புல்ஸ்கேப்' என்ற பெயருடன் வந்திருக்கிறது. ஆனால், இப்போது, கோமாளித் தொப்பி அடையாளம் இல்லாத காகிதங்களுக்கும் கூட, இந்த பெயர் வழங்கி வருவது தான் ஆச்சரியம்.
இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்: சர்வர் சுந்தரம் நாடகத்தில், நாகேஷ், சர்வர். மேஜை துடைக்கும், கிளீனராக ஒரு பையன் வரவேண்டியிருந்தது.
'எச்சில் இலைகளை எடுக்கும் வேடத்தை கொடுத்திருக்கிறீர்களே என்று, அந்த வேடம் போடும் பையன் வருத்தப்படுவானோ...' என்ற எண்ணத்தில், அந்த வேடத்தை, நாடகத்தில், நான் போட்டேன்; வசனமே இல்லாத வேடம். கிளீனர், மேஜையை துடைக்கும் முறையை பார்த்து, நாகேஷ் கிண்டல் செய்வதாக உள்ள கட்டம்.
இதே கிளீனர் வேடத்தை, சர்வர் சுந்தரம் படத்திலும், நானே செய்ய வேண்டும் என்று, விரும்பினார், இயக்குனர் பஞ்சு. அதே போல், நானும் நடித்தேன். ஆனால், படத்தின் இறுதி படத் தொகுப்பின்போது, இந்த காட்சியை நீக்கி விட்டார், இயக்குனர் பஞ்சு.
எனக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது.
அக்., 27, 19-72ல், 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி: கணையாழி - நம் நாட்டு பெண்களின் நிலையும், மனப்பான்மையும் மாறாத வரையில், சமுதாய முறைகளில் பெரிய மாறுதல் ஏற்படுமா?
ஈ.வெ.ரா., - திருமணத்தை, சட்ட விரோதம் பண்ணணும். கட்டாயக் கல்வி மற்றும் உத்தியோகம் இவற்றில், 50 சதவீதம், பெண்களுக்கு ஒதுக்கி வைச்சா, ஓரளவு முன்னுக்கு கொண்டு வரலாம். திருமணமே கிடையாதுன்னு, ஒவ்வொரு பெண்ணும் தன்னையே மாத்திக்கிடுவா.
பிழைக்கிறதுக்கு வழி, அந்தஸ்து எல்லாம் பெண்களுக்கு தந்துட்டா போதும்; இப்போதைய பெண்கள், 'டிபெண்டன்ட்-'டா இருக்காங்க... யார் கட்டிக் காப்பா, யார் கஞ்சி ஊத்துவா - இது தான் கவலை. தகப்பன் வீட்டிலே இருந்தா அண்ணன், அண்ணன் பெண்டாட்டி எதிர்ப்பு. தனி வீட்டில் இருந்தா, சமுதாயம் மதிக்காது.
கணையாழி - குழந்தைகள் பிறப்பதற்கும், அவை வளர்வதற்கும் ஒரு ஸ்தாபன அமைப்பு வேண்டாமா?
ஈ.வெ.ரா., - திருமணம் இல்லாம பிள்ளை பெத்தா, பாவமா... திருமணம்கிறது, ஒரு பழக்கம்தானுங்களே... நெத்திக்கு நாமம் வைக்கிறதையும், கல்லும், மண்ணும் கடவுள்ன்னு என்னிக்கு பழகிட்டானோ, அன்னிக்கு வந்த பழக்கம் தான் திருமணம்.
அது, ஒரு பழைய சங்கதி. மத்ததெல்லாம் போச்சு; இது ஒண்ணு தான் நிக்கிது. மனுஷன்கிட்ட, பழைய சங்கதின்னு என்ன இருக்கு சொல்லுங்க.
கணையாழி - உங்கள் இயக்கத்தில் இருக்கிறவர்களே, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று பேசுகின்றனரே?
ஈ.வெ.ரா., - 'நீ என்னடா ஒஸ்தி... 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'னு சொல்ற... இன்னொருத்தன், 'இரண்டே குலம், இரண்டே தேவன்'னு சொல்றான்... உனக்கும், அவனுக்கும் என்ன வித்தியாசம்... தேவன்னு, ஒன்று இருந்தால் என்ன, இரண்டு இருந்தால் என்ன, ஆயிரம் இருந்தால் என்ன...' என்று, அதை, நான் கண்டிச்சேன்.
நடுத்தெரு நாராயணன்

