தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/குற்றால டூர் சுவாரஸ்யங்கள்

குற்றால டூர் சுவாரஸ்யங்கள்

குற்றால டூர் சுவாரஸ்யங்கள்


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'இழுத்து தள்ளு; இன்னும் தள்ளு... அழுத்தி தள்ளு; அழகா தள்ளு...' என, சத்தமாய் பாடியபடி, குற்றாலம் படகு குழாமில் உள்ள பூங்கா ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்கள், மற்றவர்களை தள்ளிவிடச் சொல்லி ஆடியபடி இருந்தனர். அப்பெண்களுக்கு வயது ஒன்றும் அதிகமில்லை; ஜஸ்ட், 60 மற்றும் 62 தான்!

'என்னது... இந்த வயசுல ஊஞ்சலா... அதுவும், அழுத்தித் தள்ளு கோஷத்துடனா...' என்று ஆச்சரியப்படாதீர்கள். இப்படி குழந்தை மனதுடன், குதூகலமாக ஆடியவர்கள் வேறு யாருமல்ல, தினமலர் - -வாரமலர் சார்பில், 28வது முறையாக, 2016, ஜூலை 26, 27, 28- தேதிகளில் நடைபெற்ற குற்றால டூருக்கு தேர்வான நம் வாசகர்கள் மலர்விழியும், பரமேஸ்வரியும் தான்!

எப்போதுமே, இரண்டாவது நாள் தான் தயக்கம் நீங்கி, ஆடல், பாடல் போன்ற தங்களது தனித்திறமைகளை வாசகர்கள் வெளிப்படுத்துவர்; ஆனால், இந்த ஆண்டு, மதுரை ஓட்டல் பிரேம் நிவாசை விட்டு கிளம்பியதுமே, 'வாங்க பிரண்ட்ஸ், நம்ம ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்...' என்று பேருந்துக்குள்ளேயே தங்களது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். அதிலும், வீட்டில் சந்திக்கும் போது அமைதிப்பிரியாவாக இருந்த பத்மபிரியா, சூரியா, அர்ச்சனா, இளவரசி, தனபாக்கியம் மற்றும் சுகந்தி ஆகியோர், டூரில் அமர்க்களப் பிரியாக்களாக மாறி, தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதற்கு, ஸ்ரீவேல்முருகன் டிரான்ஸ்போர்ட் சொகுசு பேருந்தின் அற்புதமான ஸ்பீக்கரும் ஒரு காரணம்!

'நீங்க ஆடுறதுல கில்லாடின்னா நாங்க பாடுறதுல கில்லாடியாக்கும்...' என்று சொல்லி, ஜீனத் நிஷா, சாந்தி மற்றும் நர்மதாதேவி போன்றோர், பிரமாதமாக பல பாடல்களை பாடி, உற்சாகப்படுத்தினர்.

இவ்வாறு மகளிர் அணியினர், ஒரு பக்கம் ஆடல், பாடலுமாக டூரை உற்சாகமாக்கியபடி இருக்க, ஆண்கள் அணியில் இருந்து, விசிலால் பழைய பாடல்களை பாடி, தான் ஒரு அருமையான விசில் இசைக்கலைஞர் என்பதை நிரூபித்து, பாராட்டு பெற்றார், பாலசுந்தரம்.

இப்படி, பேருந்தில் இரண்டு மணி நேரம் கலகலப்பாக செல்ல, ராஜபாளையம் வந்து விட்டது. அங்கே, ஆனந்தா கார்டன் உரிமையாளர் பிரபாகரன் மற்றும் ராஜேஸ்வரி எலக்ட்ரிகல்ஸ் நிறுவன அதிபர் ராமசுப்பிரமணிய ராஜா இருவரும் இணைந்து, வாசகர்களை வரவேற்று, சிற்றுண்டி கொடுத்து உபசரித்ததுடன், அற்புதமான பரிசுகளும் கொடுத்து அசத்தினர். பின், அதே உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி, குற்றாலத்தில் உள்ள அலங்கார் ரிசார்ட்சை வாசகர்கள் அடைந்ததும், அதன் உரிமையாளர் அலங்கார் ஈஸ்வர்ராஜ் அனைவருக்கும் ரோஜா செடியை வழங்கி, வரவேற்றார்.

திண்டுக்கல் கீதா மெஸ் சந்திரசேகரும், அவரது மனைவி விஜயலட்சுமியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சைவ மற்றும் அசைவ உணவு வகைகளை ஒரு பிடி பிடித்துவிட்டு, ஐந்தருவிக்கு குளிக்க சென்றனர்.

ஒரே வண்ண பனியன் அணிந்திருந்த நம் வாசகர்களை பார்த்ததும், 'வாங்க... நீங்க வர்றீங்கன்னு சீசனும் சொல்லிருச்சு; மேலிடத்துல இருந்து தகவலும் வந்துருச்சு...' என்றபடி, நம் வாசகர்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, அருமையாக குளிக்க வைத்தனர், அங்கிருந்த போலீசார்.

இந்த சிறப்பு குளியல், மெயினருவி, பழைய குற்றால அருவி மற்றும் புலியருவியிலும் தொடர்ந்தது. அதிலும், புலியருவியில் குளிக்கச் சென்ற போது, ஆண்கள் பக்கம் குளித்துக் கொண்டிருந்தோர், 'வாரமலர் வாசகர்களா... வாங்க வாங்க...' என்று சொல்லி, ஒட்டு மொத்தமாய் அருவியை காலி செய்து கொடுக்க, நம் வாசகர்கள் மட்டும் ஆனந்தமாய் குளித்தனர்.

ஹினயா, மல்லிகா, பரமேஸ்வரி, ஜெயக்கொடி, பாண்டீஸ்வரி, கருணை ஆனந்தி, காந்திமதி, ஜெயக்குமாரி ஆகியோர் புலியருவியை ஒட்டி ஓடிய ஆற்றில் குழந்தைகளைப் போல குளித்து மகிழ்ந்தனர். முதலில் அருவிக்குள் போய், கடைசி ஆளாக வெளிவரும் சசிகலாவை, பிடித்து வைப்பது பெரும்பாடாக இருந்தது. தலையை துவட்ட, 10 நிமிடம் நேரம் கொடுத்தால் கூட, 'எனக்கு தலையை துவட்டவே வேண்டாம்; அது தானாய் காற்றில் காய்ந்து விடும். அதற்குள் இன்னோரு குளியல் போட்டு விட்டு வந்து விடுகிறேன்...' என்று சொல்லி, அருவிக்குள் ஓடிவிடுவார்.

முதல் நாள் மாலைப் பொழுதை இனிமையாக்கும் விதத்தில், பட்டிமன்ற நடுவரும், நகைச்சுவை பேச்சாளருமான, தமிழறிஞர் ஞானசம்பந்தன், 'குடும்பத்தை குதூகலமாக்குவது கணவரின் வருமானமா அல்லது மனைவியின் நிர்வாகத் திறனா...' என்ற தலைப்பில் நடத்திய பட்டிமன்றம், வாசகர்கள் சுந்தரமூர்த்தி, மகேஷ்பாபு போன்றோரின் சுவராசியமான பேச்சால் களை கட்டியது.

இரண்டாவது நாள், வாசகர்களை மகிழ்சியாக்க, திடீர் விளையாட்டுப் போட்டிகள் நடத்திய போது, 'நாங்களும் போட்டி நடத்துவோம்...' என்று சொல்லி, கண்மணி மற்றும் ஜமுனாராணி சகோதரிகள் நடத்திய வித்தியாசமான போட்டிகளால் அரங்கமே அதிர்ந்தது. அதிலும், சூலமங்கலம் சகோதரிகள் போல, வளவனூர் சகோதரிகள் என்று பாராட்டுமளவிற்கு, பாட்டு பாடியும், நடனம் ஆடியும் அசத்தினர், இச்சகோதரிகள்!

ஆட்டம் பாட்டம் மட்டுமல்ல, ஆழமான விஷயங்களும் இங்கு அலசப்படும் என்பதற்கு உதாரணமாக, குழந்தையின்மை குறை தீர்க்கும் மருத்துவ நிபுணரும், இதற்காகவே சென்னையில் சிறப்பு மருத்துவமனை அமைத்துள்ளவருமான டாக்டர் ஜெயநிர்மலா, பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியதுடன், 'சென்னையில் உள்ள என் மருத்துமனை, இனி என்னுடையது அல்ல; அது உங்களுடையது. எப்போது வேண்டுமானாலும் உரிமையுடன் வரலாம்...' என்று அன்பான வார்த்தைகளால் சொன்ன போது, அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி பாராட்டினர்.

டூரின் கதாநாயகி யார் என்றால், அது குழந்தை ரித்விகா தான்! 'பாட்டா... நான் முதலில் பாடுவேன்; ஆடவேண்டுமா அதற்கும் ரெடி, விளையாட்டுப் போட்டிகளா இதோ வந்துட்டேன்...' என்று, எந்நேரமும் சுறுசுறுப்பாக வளைய வந்து, டூரை கலகலப்பாக்கினார். அதே போன்று, எப்போது என்ட்ரி கொடுப்பர் என ஏங்க வைத்து, அவ்வப்போது, 'என்ட்ரி' கொடுத்து, கைதட்டலை அள்ளிச் சென்றவர்கள், நிரஞ்சனும், அபிநயாவும்!

குற்றால நாதர் கோவிலில், வாசகர்கள் அனைவருக்கும் மாலை அணிவித்து, சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. 'உங்கள் கோரிக்கைகளை குற்றாலநாதரிடம் சொல்லுங்க; அவர் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்...' என்று கோவில் அர்ச்சகர் சொன்ன போது, டாக்டர் ஜெயநிர்மலாவின் மகன் ஹர்ஷவர்த்தன், 'நாங்க எல்லாரும் இதுபோன்று அடுத்த ஆண்டும் சேர்ந்து வரணும்...' என்று வேண்ட, அனைவர் கண்களுக்கும் அவன் குழந்தையாக தெரியவில்லை.

அதே போல, மூன்றாவது நாள் ஆரம்பித்த உடனேயே, ஒவ்வொருவரிடமும் போய், அவர்களது தொலைபேசி எண்ணை கேட்டு, நோட்டில் குறித்து வைத்ததுடன், 'எப்போது பேசலாம்...' என, நேரமும் கேட்டுக் கொண்டான். அத்துடன், 'வீட்டிற்கு வாங்க...' என்று வேண்டுகோள் விடுத்தான்.

இப்படி, அவனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், பெரிய மனித தோரணை இருந்தது. அதிலும், ரயில் ஏறும் போது, அவன் கண்களில் இருந்து தாரை தாரையாக வழிந்த கண்ணீரைப் பார்த்ததும், 'இப்படியும் ஒரு பாசக்கார பிள்ளையா...' என்று எல்லார் மனதிலும் எழுந்த எண்ணம், அவர்களையும் அறியாமல், கண்களில் நீரை வரவழைத்தது.

அந்துமணியை எப்படியும் கண்டுபிடிப்போம்ல...

டூரில் கலந்து கொள்ளவிருக்கும் வாசகர்களை சந்திக்க, நேரில் சென்ற போது, வழக்கம் போல, 'எங்கள் அபிமான அந்துமணி வருவார்ல...' என்று கேட்டு, உறுதி செய்த பிறகே டூருக்கு வந்தனர்.

வளவனூர் சகோதரிகள் கண்மணியும், ஜமுனாராணியும், 'வாரமலர்' இதழில் வெளிவந்த, 'பசுமை நிறைந்த நினைவுகளே...' என்ற, 75 வார தொடர் கட்டுரையில் இடம் பெற்றிருந்த அந்துமணியின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தொகுத்து, குறிப்பெடுத்து, 'எப்படியும் நாம் தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும்...' என்ற முடிவுடன் வந்திருந்தனர்.

வாசகர்களை வரவேற்க, ஒரு பிளக்ஸ் பேனர் தயார் செய்திருந்தோம். அதில், பிரிண்டிங் மிஸ்டேக்காக அவரது, 'டீ - கப்' போன்ற கார்ட்டூன் முகத்திற்கு கீழ், கழுத்து பகுதியில் மச்சம் போல் ஒரு புள்ளி இடம் பெற்றிருந்தது; அதுதான், அந்துமணியின் அடையாளம் என முடிவு செய்து, 'மச்சம் தெரிகிறதா...' என, தாங்கள் சந்தேகப்படும் நபர்களின் கழுத்துப் பகுதியை பார்த்தபடி இருந்தார், வாசகி சூர்யா.

புதுச்சேரி வாசகி ஜெயக்குமாரி, 'அந்துமணியை காட்டுறேன்னு சொல்லித் தானே டூருக்கு கூட்டி வந்தீங்க... இப்ப டூரே முடியப் போகுது; எங்கே அந்துமணி... அவரை பாக்காம குற்றாலத்தை விட்டுப் போக மாட்டேன்...' என, அன்பு மிரட்டல் விடுத்தார். அவருக்கு ஆதரவாக பல குரல்கள் ஒலித்தன.

வாசகர்கள் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவே, இந்த முறை, வழக்கமாக அணியக்கூடிய சட்டையை தவிர்த்து, 'டீ ஷர்ட்' அணிந்தே உலா வந்தார், அந்துமணி. அவர் என்ன தான் உடை மாற்றம் செய்தாலும், அவர் உட்காரும் ஸ்டைலே தனி என்று சொல்லி, அவர் உட்காரும் பாணியைப் பார்த்தே, அவரை கண்டுபிடித்து பேசியவர்கள் கண்மணியும், ஜமுனா ராணியும் தான்.

அதேபோல, பா.கே.பா.,வில் வரும் கார் எண் மற்றும் காரின் ரகத்தை வைத்தே கண்டுபிடித்தவன், சிறுவன் ஹர்ஷவர்த்தன். ஆனால், அவர் எல்லாருடனும் பேசினார்; பழகினார்; அவ்வளவு ஏன், அவரை பார்க்காமல் குற்றாலத்தை விட்டே போக மாட்டேன் என்று அடம்பிடித்த வாசகி ஜெயக்குமாரியுடன் பஸ்சில் நடனமும் ஆடினார்!

எல்.முருகராஜ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us