தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நினைத்து பார்க்கிறேன்' கட்டுரை தொடரில், ஜெயகாந்தன் எழுதியது: குடும்பத்தில் சண்டை போட்டு, ஊரை விட்டு போய் விட்டார், என் தந்தை. அவர், சென்னையில் இருப்பது தெரிந்தது.

அதனால், ரயில் ஏறி, சென்னைக்கு வந்தேன். சூளை மில் அருகே, ஒருத்தி, கூடையில் சாப்பாடும், மீன் குழம்பும் வைத்து, தெருவில் விற்பதை பல முறை, வாயில் நீரூறப் பார்த்தபடி இருப்பேன். ஒவ்வொரு முறையும், 'ஒரு நாளைக்கு இந்த சாப்பாட்டை, வாங்கி சாப்பிடணும்...' என்று நினைத்துக் கொள்வேன். கையில் காசு இருந்தும், எதுவோ தடுக்கும்; திரும்பி விடுவேன்.

ஒருநாள், 'இன்றைக்கு சாப்பாடு அங்கே தான்...' என்ற, தீர்மானத்தோடு போனேன். சந்தில் திரும்பும் போதே, சாப்பாடு மணம் வீசியது. கூடையில், ஒரு சட்டியில் சிவப்பு அரிசி சோறும், மற்றொரு சட்டியில், மீன் குழம்பும் இருக்கும். அந்த சாப்பாட்டுக்காரி, கறுப்பு முகத்தில் மஞ்சளை அப்பி, பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பாள். தடித்த உடம்பு; அதட்டி தான் வியாபாரம் செய்வாள்.

'அடச்சீ... அப்பாலே போய்யா... நல்லா வாயிலே வருது...' என்று வருகிறவர்களை விரட்டி அடித்தே, வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவாள்.

எனக்கு அவளை நெருங்கி பேசவே பயம்!

அப்பகுதியில் வண்டி இழுப்பவர்கள் தான் அதிகம். 'சால்ட் கோர்ட்டர்ஸ்' கூலிகள் தான், இவளது வாடிக்கையாளர்கள். எல்லாரும் முதுகில் வியர்வை வழிய, வியர்வை காய்ந்த சட்டையில் உப்பு உலர்ந்து, கிழிசல்கள் தெரிய, குத்துக் காலிட்டு உட்கார்ந்து, ஒரு கையில் இலையில் சோறும், குழம்புமாய் வைத்து, மறு கையால் பிசைந்து, வாரி வாரி வயிற்று உலையில், எரிகிற தீயில், ஆகுதி இடுகிற மாதிரி சாப்பிடுவர்.

அப்படி சாப்பிடுவோரைப் பார்க்கும் போது, இப்போது கூட, என் வயிற்றில் என்னவோ செய்கிறது.

அன்றைக்கு ஏனோ நான் ரொம்ப பயந்து விட்டேன். சாப்பிட போனவன் இன்று வேண்டாம் என்று தயக்கத்துடன் திரும்ப, அந்த சாப்பாட்டுக்காரி எப்படியோ புரிந்து, என்னை கூப்பிட்டாள், 'வா கண்ணு... வந்துட்டு எங்கே போற... வா வா...' என்று கூப்பிட்டு, கும்பலில் இருந்து தனித்து, தன் பக்கமாக உட்கார வைத்து, தட்டில் இலை பரத்தி சோறும், குழம்புமாய் கொடுத்தாள். எனக்கு தெருவில் உட்கார்ந்து சாப்பிட வெட்கமாகவும், யாராவது பார்த்து, அப்பாவிடம் சொல்லி விடுவரோ என்று பயமாகவும் இருந்தது.

'துண்ணுடா... ஊட்டியா விடச் சொல்றே...' என்று செல்லமாக கடிந்து, இன்னொரு மீன் துண்டை எடுத்து வைத்தாள். அப்போதும், நான் தயங்குவதை கண்டு, 'ஏன், துட்டு இல்லயா...' என்று கேட்டாள். நான் பாக்கெட்டிலிருந்து நாலணாவை எடுத்து கொடுத்தேன்.

'உனக்கு அரை சாப்பாடு தான்...' என்று, இரண்டணாவை திருப்பி கொடுத்தாள். ஆனால், எனக்கு முழு சாப்பாட்டுக்காரர்களை விட அதிக சலுகை இருந்தது.

அதன்பின், தினமும் அவளிடம் சென்று சாப்பிடுவேன். 'வா கண்ணு...' என்று வாஞ்சையாக அழைப்பாள். கணக்கு வைத்து கொண்டேன். ஒரு ரூபாய் வரைக்கும் பாக்கி இருந்த போது, திடீரென ஒருநாள், என் அப்பா பட்டணத்தை விட்டு, என்னை ரயிலேற்றி, ஊருக்கு அனுப்பி விட்டார். அவள், என்னை, 'சாப்பிட்டதற்கு காசு கொடுக்காமல், ஏமாற்றி போய் விட்டவன்...' என்றே நினைத்திருப்பாள்.

அதன்பின், ஒரு ஆண்டுக்கு பின், நான் சென்னையிலேயே நிரந்தரமாக வந்து தங்கிய போது, கையில் ரூபாயுடன், அவளை தேடி அலைந்தேன்; அவளைக் காணோம்!

சீன நாட்டு குட்டிக் கதைகள் நூலிலிருந்து: ஒரு நரி, தன் குட்டியிடம், பயிற்சிக்காக உயரமான பாறையிலிருந்து குதிக்கச் சொன்னது; ஆனால், நரிக்குட்டி குதிப்பதற்கு பயந்தது. 'பயப்படாதே... நான் உன்னை பிடித்துக் கொள்கிறேன்...' என்றது நரி.

கீழே விழுந்து அடிபட்டது, குட்டி நரி. தன் குட்டியை காப்பாற்ற, எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை, நரி.

நரிக்குட்டி, தன் தந்தையிடம், 'நீ ஏன் என்னை ஏமாற்றினாய்... நீ என்னுடைய தந்தை தானே...' என்று சண்டை போட்டது.

அதற்கு, 'நான் உனக்கு தந்தை தான்; ஆனால், நீ யாரையும், அது தந்தையாக இருந்தாலும் நம்பக் கூடாது. இதுதான், ஒரு நரி கற்றுக் கொள்ள வேண்டிய முதல் பாடம்; இதை, நீ என்றுமே மறந்து விடாதே...' என்றது தந்தை நரி.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us