தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது, 34; தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணி புரிகிறேன். வேறு ஜாதியைச் சேர்ந்தவரை, காதலித்தேன்; அவர் என்னை பதிவு திருமணம் செய்து, பள்ளி விடுதியில் தங்க வைத்து, பிசினஸ் செய்வதற்காக வெளியூர் சென்றார். பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, முறைப்படி திருமணம் செய்தார். தற்போது, பள்ளிக்கு அருகிலேயே, வாடகை வீட்டில் வசிக்கிறோம்.

அம்மா, என் கணவர், 40 வயது பெண்ணுடன் பழகி வருகிறார். அவளுக்கு திருமணமாகி, 10ம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான். அவளது குடிகார கணவர் அவள் வேலை பார்க்கும் கம்பெனியில் தங்கிக் கொள்கிறார். ஒருநாள், அவள் கணவன், என் கணவரும், அவர் மனைவியும் தவறாக பழகுகின்றனர் என்றும், அவள் வீட்டில் தங்காமல் ஏதோ ஒரு பெண்கள் விடுதியில் தங்குவதாக, எனக்கு, 'மெசேஜ்' அனுப்பியிருந்தார்.

அது குறித்து, என் கணவர் மற்றும் அந்தப் பெண்ணிடம் கேட்ட போது, என் கணவரோ, 'நான் ஒரு பிசினஸ்மேன்; என்னைப் பற்றி ஆயிரம் பேர், ஆயிரம் விதமாக சொல்வர். அதையெல்லாம் நம்பாதே...' என்றார்.

ஆனால், அந்த பெண்ணோ, 'ஆமாம்... அப்படித்தான்; உன்னால் என்ன செய்ய முடியும்...' என்றாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கணவரிடம், 'ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சும்மா தானே இருக்குறேன்; உங்களோடு வந்து, நானும் பிசினசை கத்துக்கிறேன்...' என்று கூறினால், 'உனக்கெல்லாம் பிசினஸ் வராது; நன்றாக சாப்பிட்டு, படுத்து தூங்கு...' என்றவர், அவளை மொபைலில் அழைத்து, 'வெளியூர் போகணும்; கிளம்பிட்டாயா...' என்கிறார்.

'எங்க போறீங்க?' என்று கேட்டால், 'உனக்கு எதற்காக சொல்லணும்...' என்கிறார்.

வாரம் முழுவதும் பள்ளிக்கு செல்வதால், மனதில் வெறுமை தோன்றுவதில்லை. ஆனால், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால், அன்று நேரம் போவது கடினமாக இருக்கிறது. அதனால், 'ஏதாவது கற்றுக்கொள்கிறேன்...' என்று கூறினால், 'முட்டாள்... உனக்கு எதுவும் வராது...' என்கிறார்.

என் மாமனார், மாமியார் என்னிடம் அன்பாக நடந்து கொள்வர். அவர்களிடம் இவ்விஷத்தை கூறிய போது, 'என் மகன் அப்படி இல்லை...' என்று நம்ப மறுக்கின்றனர். இவருடைய தம்பியிடம் சொன்னால், 'உங்க குடும்ப விஷயத்தில் நான் தலையிட மாட்டேன்...' என்கிறார்.

எங்கள் வீட்டிலோ, 'நீ, ஏன் அவனை திருமணம் செய்தாய்; எங்கள் வீட்டிற்கு வராதே செத்துப் போ...' என்கின்றனர். மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன்; ஏ.டி.எம்., கார்டு கூட என் கணவரிடம் தான் இருக்கிறது. என் செலவுக்கு, 100 - 200 ரூபாய் கூட அவரிடம் தான் கேட்டு வாங்குகிறேன்.

காலையில், எழும் போது, 'குட் மார்னிங்' சொல்கிறார். இரவு, 10:00 மணிக்கு, 'சாப்பிட்டாயா... என்ன சாப்பிட்டாய்...' என்று கேட்கிறார். சாப்பிடுகிறார்; தூங்குகிறார்; சில நேரம் தாம்பத்யத்துக்கு அழைக்கிறார்.

'குழந்தை வேண்டும்; மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்...' என்று கூறினால், 'குழந்தை பிறக்கும்; நீ பேசாமல் இரு...' என்கிறார்.

ஒரு நாள் அப்பெண்ணிடம், 'என் கணவர், உனக்கு தம்பி மாதிரி. நீ, இரண்டு குழந்தை பெற்றவள்; என் வாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை; என் கணவரை விட்டு விடு...' என்றேன். அவள் பதில் பேசவில்லை.

இவருக்கு தலை வலித்தால் கூட அவளிடம் தான் சொல்கிறார். அவள், 'கொத்தமல்லி காபி வைத்து குடிங்க...' என்று சொல்வாள். பின், என்னிடம் வந்து, 'கொத்தமல்லி காபி வைத்துக் கொடு...' என்கிறார்.

இதுகுறித்து நான் ஏதாவது பேசினால், 'உண்மையை உன்னிடம் சொன்னது தவறு...' என்கிறார். உண்மையை சொல்கிறார் என்று நம்புவதா இல்லை என்னிடம் நடிக்கிறாரா?

இப்பிச்னையை எப்படி தீர்ப்பது? எனக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு —

உன்னுடைய பயந்த சுபாவத்தை, இளப்பமாக எடுத்துக் கொண்டுள்ளார் உன் கணவர். பொதுவாக, குழந்தை இல்லாத தம்பதிகள், 'எனக்கு நீ; உனக்கு நான்' என, அன்னியோன்யமாக இருப்பர். உன் கணவரோ, இதையே சாக்காக வைத்து, திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபடுகிறார். உன் கணவருக்கும், அவரது கள்ளக் காதலிக்குமான தொடர்பில், அப்பெண்ணின் கையே ஓங்கியுள்ளது. அவள், தன் குடிகார கணவனுக்கோ, சமூகத்துக்கோ சிறிதும் பயப்படவில்லை; அதனாலேயே தன் கள்ள உறவை வெளிப்படுத்துவதில், அவள் வெட்கப்படவில்லை.

முதலில், குழந்தையின்மைக்கு நீ காரணமா என்பதை, உன் கணவருக்கு தெரியாமல் சோதனை செய்து பார்.

உன் கணவன் சொல்வதற்கெல்லாம் பூம்பூம் மாடு போல தலையாட்டாமல், 'ஒரு வாரம் அவகாசம் தருகிறேன்; அதற்குள் உன் கள்ள உறவை கத்தரித்து விடு. இல்லையென்றால் சட்டப்படி நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி பெறுவேன்...' என, அதிரடியாக சொல்.

உன் ஏ.டி.எம்., கார்டை கணவரிடமிருந்து பிடுங்கு; பெற்றோருடன் தொடர்பு கொண்டு, உன்னுடைய பிரச்னையை கூறு. அவர்கள் உன்னை ஆதரிக்க தயாராய் இருந்தால், எவ்வித தயக்கமும் இல்லாமல் விவாகரத்து கோரலாம். அவர்கள் ஆதரிக்க மறுத்தால் கவலையில்லை. தனி ஒருத்திக்கு உன் சம்பளம் போதும்; தவிர, ஜீவனாம்சமும் கேட்டுப் பெறலாம். தொலைதூர கல்வி இயக்ககம் மூலம், மேல் படிப்பு படித்து, பதவி உயர்வு பெறு; மறுமணம் செய்து கொள். வாழ்த்துகள்!

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us