தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இலக்கிற்காக இணைவோம்!

இலக்கிற்காக இணைவோம்!

இலக்கிற்காக இணைவோம்!


PUBLISHED ON : ஆக 07, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்காலத்தில், இரட்டை புலவர்கள் இருவர் இருந்தனர். ஒருவருக்கு பார்வை உண்டு; நடக்க முடியாது. மற்றவருக்கு, நடக்க முடியும்; பார்வை கிடையாது. நடக்க முடியாதவர், பார்வையற்றவரின் தோளில் அமர்ந்து, 'இப்படி போ, அப்படி போ...' என வழிகாட்டுவார்; அவர்கள் பயணம் தொடரும். இவர்கள் சண்டையிட்டுக் கொண்டால், எப்படி ஊர் போய்ச் சேர்வது!

மேற்கு சென்னையில், புகழ் மிக்க தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது. ஒரே கருத்துடைய நண்பர்கள் இணைந்து இதை ஆரம்பித்தனர். சிறிது காலம், நன்றாக தான் போனது. நிறுவனம் நன்கு வளர ஆரம்பித்ததும், அதிகார பகிர்விலும், நற்பெயரை பங்கு போட்டுக் கொள்வதிலும் மற்றும் பண விஷயத்திலும், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, வம்பு, வழக்கு என, நீதிமன்றம் வரை சென்றனர்.

நீதிமன்றத்தில், வரப்பு தகராறுக்காரர்களோடும், சொத்து பிரிப்பில் மோதிக் கொண்ட குடும்ப உறுப்பினர்களோடும், இக்கும்பலும் மரத்தடியில் ஓரமாய் ஒதுங்கி நின்ற காட்சியை பார்த்த போது, இவர்களது நோக்கம், சேவை மட்டும் தானா அல்லது வேறு ஏதுமா என்கிற சந்தேகம், பலருக்கும் வந்து விட்டது.

இவர்கள் இலக்கை மறந்தவர்கள்!

ஒரு சேவை சங்கத்தின் மாநாட்டில் பேச, சற்று முன்னதாகவே போய் விட்டேன். மாநாடு துவங்கும் முன், எவ்வளவு கருத்து மோதல், வாக்குவாதங்கள்! பல சேவை நிறுவனங்களில் நடக்கிற சம்பவங்களையெல்லாம் கேள்விப் படும் போது, இங்குமா அரசியலும், அணி இலக்கணமும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு வீட்டில் திருமண விழா; இதற்கான ஏற்பாடுகளில் எத்தனை கருத்து வேறுபாடுகள்...

'ஊர்க்கோடியில் மண்டபம் பிடிச்சா, எவன் வருவான்...' - இது, மாப்பிள்ளையின் அண்ணன்.

'ஊருக்குள்ள பிடிக்கலாம்ன்னா வாடகை சில லட்சம் ரூபாய் அதிகம் கேட்கிறான்...' - அப்பா.

'மண்டப அலங்காரம் என் பிரண்டோட அக்கா கிட்ட தான் குடுக்கணும்...' - தங்கை.

'போடி... அவ, செம பில்லு போட்டு தாளிச்சுடுவா... அவகிட்ட கொடுக்க வேணாம்பா...' - மற்றொரு தங்கை.

'சம்பந்திகிட்ட இப்படியா சரண்டர் ஆவீங்க... அவங்க என்ன சொன்னாலும், பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு வந்து நிக்கறீங்களே...' - மனைவி.

'என்னடி செய்யச் சொல்ற... பொண்ணு வீட்டுக்காரங்க இப்பெல்லாம் கையை உசத்திடுறாங்க...' - இது அப்பா.

திருமணம் சிறப்பாக, கூடிய வரை குறைகளற்று நடக்க வேண்டும் என்பது மட்டுமே அனைவரது இலக்காக இருக்க வேண்டுமே தவிர, நடந்த உரையாடல்களில் சம்பந்தப்பட்டவர்கள், தங்கள் கருத்தை கவுரவ பிரச்னையாக ஆக்கி விட்டால், அது, கலாட்டா திருமணம் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா!

ஒரு பெரிய தொழிற்சாலையில், சந்தைப்படுத்தும் மேலாளர் பெரிய ஆர்டர் ஒன்றை வாங்கி வந்து, தயாரிப்பு மேலாளரிடம், 'பாருங்க சார்... சூப்பர் ஆர்டர்; ஒரே போட்டி தெரியுமா... சிரமப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கேன்...' என்கிறார், சந்தோஷத்துடன்!

தயாரிப்பு மேலாளரோ, 'என்ன சார் இது... ஏற்கனவே புரொடக் ஷன் திணறிக்கிட்டிருக்கு. ஏகப்பட்ட பிரச்னை; என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டாமா...' என்கிறார்.

நிறுவனம் வளர வேண்டும் என்கிற இலக்கு இல்லாதவர் இவர்.

இருவரும் முதலாளி அல்லது தலைமை நிர்வாகியிடம் சென்று, 'சார்... நம்ம மார்க்கெட்டிங் மேனேஜர் பிரமாதமா ஒரு ஆர்டர் பிடிச்சிருக்காரு. இதைச் செயல்படுத்தறதுல, இன்னென்ன சிரமம் இருக்கு; உங்க உதவியோட தான், இந்த ஆர்டரை நல்லபடியா செயல்படுத்தணும்...' என்பவர் அல்லவா இலக்கு நோக்கிய தயாரிப்பு மேலாளர்!

சிங்கத்தின் பெயர் கொண்ட ஒரு புது கதாநாயகர், இயக்குனருடன் சண்டையிட்டுக் கொண்டார். பட தயாரிப்பாளர் பாடு ஏக சிரமம்; படு தர்ம சங்கடம். கதாநாயகருக்கு படம் நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற இலக்கு, ஏனோ நெஞ்சிலிருந்து அகன்றுவிட்டது தான் காரணம்.

அற்பக் காரணங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள், இலக்குகளை கோட்டை விடுகின்றனர். களாக்காயை பிடித்துக் கொண்டு, பலாக்காயை நழுவ விடுவது சரிதானா!

கைகளை கோர்த்தால் தான் சாதனை; கைகளை முறித்தால் இலக்குகள் என்னவாவது!

கருத்து மோதல்கள், வேறுபாடுகள் மற்றும் சண்டை சச்சரவுகளை இலக்கை நிறைவேற்றிய பின், வைத்துக் கொள்ளுங்களேன்; யார் வேண்டாம் என்கின்றனர்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us