
ஒரு கோடி ரூபாயை திருப்பதி உண்டியலில் போட வேண்டும். அதற்கு நிறுவன பங்குதாரர் தாமோதரன் தடையை ஏற்படுத்துவார். என்று கார்த்திகா கூற, அதன் காரணத்தை கேட்கிறான், தனஞ்ஜெயன்.
தாமோதரனின் மகன் விவேக்கை திருமணம் செய்து கொள்ள மறுத்ததையும், திருப்பதி உண்டியலில் ஒரு கோடி ரூபாய் காணிக்கை செலுத்த போகும் போது தடுப்பதாகவும், தங்கள் நடவடிக்கையை அறிய, தாமோதரனின் உளவாளிகள் நிறைய பேர் இருப்பதாகவும், தனஞ்ஜெயனிடம் தெரிவித்தாள், கார்த்திகா -
அப்பளங்களை காய வைத்துக் கொண்டிருந்தாள், தனஞ்ஜெயன் அம்மா, சுசீலா.
தையல் மிஷினில் ஒரு ஜாக்கெட்டோடு மல்லாடிக் கொண்டிருந்தாள், அக்கா சாந்தி. தங்கைகள் ஸ்ருதியும், கீர்த்தியும் ஆளுக்கொரு மூலையில், பாடப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர்.
வீட்டுக் கூடத்தின் மூலையில், சிறிய மேஜை மீது இருந்த, 'டிவி' மேல், துணி போர்த்தப்பட்டு கிடந்தது. பக்கத்திலேயே வழக்கொழிந்து போன, அந்தக் கால டேப்ரிக்கார்டர். அதன் மேல், ஒரு புலவர் பொன்னாடை.
தனஞ்ஜெயன் உற்சாகமாக உள்ளே நுழையவும், நான்கு பேரும் ஒரு சேர அவனை பார்த்தனர். பார்த்த வேகத்தில் குனிந்து பெடல் செய்து தைக்க துவங்கினாள், சாந்தி.
அவன் முகத்தை வைத்தே, ''என்னப்பா... இன்டர்வியூவை நல்லா பண்ணிட்டே போலிருக்கே?'' என்று ஆரம்பித்தாள், அம்மா சுசீலா.
''வேலையே கிடைச்சுடுச்சும்மா... சம்பளத்தை சொன்னா, ஆடிப் போயிடுவ...'' என்றபடியே சட்டையை கழற்றி, ஆணியில் மாட்டினான், தனஞ்ஜெயன்.
பாடப் புத்தகத்தை மூடியபடியே, ''என்ன ஒரு, 30 ஆயிரம் ரூபாய் இருக்குமா?'' கேட்டாள், தங்கை ஸ்ருதி.
புன்னகையுடன், ''அதுக்கு மேல...'' என்றான், தனஞ்ஜெயன்.
''அப்ப, 40 ஆயிரமா?''
''அதுக்கும் மேல...''
''நீ, சங்கரோட, ஐ படத்தை இரண்டு, மூன்று தடவை பார்த்தப்பவே நினைச்சேன். இந்த, அதுக்கும் மேல, 'டயலாக்' அதுலயிருந்து சுட்டது தானே?''
''ஓ... என், 'டயலாக்'கை, சங்கர் சுட்டுட்டாரா?''
''அடேங்கப்பா... அது, எழுத்தாளர் சுபாவோடது - மை பேவரைட் ரைட்டர்,'' உதட்டை சுழித்தாள், ஸ்ருதி.
''போதும்டி... நீ சொல்லுப்பா நல்ல சம்பளமா?''
''ஆமாம்மா... சம்பளம் மட்டுமில்ல, அப்பார்ட்மென்ட், டிரைவரோட கார்னு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில ஜெனரல் மேனேஜர்களுக்கு தரப்படற சலுகைகளும் கூட!''
''என்னப்பா சொல்ற?''
''நம்ப முடியலேல்ல...''
''அம்மா... தன் கோபத்தை தான் இப்படி காமெடியா காமிக்குது, அண்ணன். இன்னிக்கெல்லாம் அகடமிக் டிகிரி எல்லாம் ஒரு படிப்பே கிடையாது. 'லோக்கல்' டப்பா கம்பெனில தான் எதாவது கிளார்க் வேலை கிடைக்கும்.
''அதுக்கும் கம்ப்யூட்டர் ஆப்பரேட் பண்ண தெரிஞ்சிருக்கணும். அண்ணன் ஏதோ ஆப்பரேட் பண்ணும். அது சம்பந்தமா ஒரு எக்ஸாம் கூட 'அட்டண்ட்' பண்ணினதில்லை...''
தங்கை ஸ்ருதி, நாட்டு நடப்பை, தன் இளமை கொப்பளிப்பாய் சலிப்போடு உமிழ்ந்தாள்.
அதுவரை பேசாமல் இருந்த கீர்த்தி, ''இப்பல்லாம் இன்டர்வியூவெல்லாம் கூட, 'ஆன்லைன்'ல தான்... நேர்ல கூப்பிடறதெல்லாம் சினிமாவில் தான்,'' என்றாள்.
தங்கைகள் இருவரையும் ஒரு மாதிரி பார்த்தான்.
''அம்மா... நான் இப்பவே சொல்லிட்டேன், நாம குடி போகப் போற, 'அப்பார்ட்மென்ட்'டுக்கு இவங்க ரெண்டு பேரும் வரக்கூடாது. இவங்க, இந்த ஆதி கால வீட்லயே கிடந்து சாகட்டும்.
''ஆமா, சாந்தி... நீ எதுவுமே சொல்லாம ஜாக்கெட்டே கதின்னு கிடக்க. நீ, இனி அந்த லொட லொடகிட்ட அல்லாட வேண்டாம்,'' என்றான், தனஞ்ஜெயன்.
''நான் இதை விட்டாலும், இது என்னை விடாது. அது சரி, நிஜமா வேலை கிடைச்சுடுச்சா?'' மிக இயல்பாய் கேட்டாள், சாந்தி.
''ஏன் உங்களுக்கெல்லாம் இவ்வளவு அவநம்பிக்கை? உண்மையில், இது வேலையில்லா திண்டாட்ட காலமில்லை... வேலைக்கு ஆட்கள் சரியா கிடைக்காத காலம்.''
''அப்படியா!'' என்றாள், சாந்தி.
''என்ன அப்படியா... நம் வீட்டுல எலக்ட்ரிக் லைன் எரிஞ்சப்ப, ஒரு எலக்ட்ரீஷியனை பிடிக்க எத்தனை போன் பண்ணினோம்.
''கேஸ் அடுப்பை கிளீன் பண்ண வரேன்னு சொன்னவன், உடனே வந்தானா? சாயந்தரம், 6:00 மணிக்கு வந்து, அடுப்பை பார்த்துட்டு, '800 ரூபாய் ஆகும் - இஷ்டம்னா சொல்லுங்க'ன்னு நம்மள, 'சாய்ஸ்'ல விட்டான். ஞாபகத்துல இல்லையா?''
''சரிப்பா, இவங்களுக்கு சரியா நீயும் பேசணுமா? எங்க காலம் வேற... இப்ப நடக்கற காலம் வேற... நீ சொல்லு, என்ன வேலை, எவ்வளவு சம்பளம்?'' என்றாள், அம்மா சுசீலா.
அம்மாவுக்கு சொன்னது போல, அக்கா - தங்கைகளுக்கும் தனஞ்ஜெயன் சொல்லி முடிக்க, அவர்களிடம் ஒரு பிரமிப்பு!
''என்னப்பா, யாரும் நம்பலியா?''
''ஆமாப்பா... மூன்று லட்சம்ன்னு சொல்ற. இவங்க சொல்ற மாதிரி, உன் ஆதங்கத்தை இப்படி பேசி தீர்த்துக்கறியா?'' என்றாள், அம்மா.
''சத்தியமா இல்லம்மா.''
''எப்படிப்பா, ஒரு உதவியாளனுக்கு, இவ்ளோ சம்பளம் தருவாங்க? உனக்கு, அனுபவமும் கிடையாது.''
''வாஸ்தவம்தாம்மா... ஆனா, இது கொஞ்சம் கஷ்டமான உதவியாளர் வேலைம்மா.''
''உதவியாளர்ல என்னப்பா கஷ்டம்... எப்பவும் அவங்க கூடவே இருக்கணுமா?''
''ஆமாம்மா... அதோட அவருக்கு... அதான் என், எம்.டி.,க்கு...'' என்று சற்று இடைவெளி விட்டவன், தன் சகோதரிகள் மூவரையும் ஒரு பார்வை பார்த்து, ''கேட்டுட்டு அதிர்ச்சி அடையாதீங்க. அவர் ஒரு, 'லெப்ரசி' நோயாளி. சரியா கையெழுத்து கூட அவரால போட முடியாது. அவர் சார்பா எல்லாத்தையும் நான் தான் செய்யணும்,'' என்றான்.
''ஐயோ... லெப்ரசியா?'' பதறினாள், சுசீலா.
''அந்த கால பாஷை அது... இப்ப அதையெல்லாம் அடக்கி ஒழிச்சாச்சு. அபூர்வமா சிலருக்கு தான் இருக்கு. முறையா மருந்து சாப்பிட்டா, அதுவும் சீக்கிரம் குணமாயிடும்,'' நன்றாகவே அவர்களை சமாளித்தான், தனஞ்ஜெயன்.
''ஐயோ, தனா... உனக்கும் அது வந்துடப் போகுது. லட்சம், கோடிகளை விட, ஆரோக்கியம் பெரும் செல்வம்பா.''
''அம்மா... அது, தொற்று வியாதி கிடையாது. முதல்ல அதை புரிஞ்சுக்க. நம் வறுமையை விட, அது பெரிய வியாதியில்ல, அதையும் புரிஞ்சுக்க. முன்னேறணும்ன்னா சில சமரசங்களை பண்ணிக்க தான் வேணும். எனக்கு இதை விட பெரிய வாய்ப்பு, கனவுல கூட கிடைக்காது,'' சற்று அதட்டலாக சொன்னான்.
''பிரதர்... இருந்தாலும், மூன்று லட்சமெல்லாம், 'டூ மச்' தான். நிஜமா சொல்லு, இந்த மூன்று லட்சம் ஒரு மாசத்துக்கா, இல்ல ஒரு வருஷத்துக்கா?'' தன் விடலைக் குறும்பை வார்த்தைகளிலும், முக பாவனைகளிலும் காட்டி கேட்டாள், ஸ்ருதி.
'என் உயிருக்கும் சேர்த்து தான் இந்த சம்பளம் என்பதை எப்படி அவர்களிடம் சொல்வது?'
தன் புத்திசாலி தங்கையை மவுனமாய் வெறித்தபோது, அவன் மொபைல் போன் அழைத்தது.
''என்ன மிஸ்டர் தனஞ்ஜெயன்... கிருஷ்ணராஜ் பி.ஏ.,வா இருக்க சம்மதிச்சுட்டீங்க போல இருக்கே?'' என்றது, காதுக்குள் ஒரு மர்மக் குரல்.
தன் தலை மேல் ஒரு பல்லி விழுந்தது போல் உணர்ந்தவன், ''நீங்க யாரு?'' என்று கேட்டான், தனஞ்ஜெயன்.
''என்ன, திருப்பதி பயணம் தான். முதல், அசைன்மென்டா?''
துளியும் தாமதிக்காமல், ''நீ, விவேக் ஆள் தானே?'' கேட்டான், தனஞ்ஜெயன்.
''விவேக் ஆளா... விவேக்கே நான் தான்பா!''
''ஓ... உங்க கூட பேசறதுல ரொம்ப சந்தோஷம்,'' என்றபடி ஒதுங்கி, வாசற்புரம் சென்றான்.
''ஷாக்கா இருக்குமே... இல்லையா?'' மர்ம குரல் கொடுத்த விவேக்கிடமிருந்து அடுத்த கேள்வி.
''எதிர்பார்த்துகிட்டே இருக்கும்போது, எப்படி, 'ஷாக்'கா இருக்க முடியும்? நீங்க சொல்லுங்க, நான் அந்த வேலைல சேர்ந்து, அவங்க சொல்ற எதையும் செய்யக் கூடாதா?''
''ஹேய்... நீ ரொம்ப, 'ஷார்ப் அண்ட் ஷார்ட்' தான். சுற்றி வளைச்சு பேசாம, நேரா விஷயத்துக்கு வந்துட்டியே?''
''நீங்க, நான்கு லட்சம் தரேன்னு சொல்லுங்க. உங்க பேச்சை கேட்கறேன்.''
''ஊறுகாய், அப்பளம் விக்கிற நீயா, இப்படி, 'டிமாண்ட்' பண்ற?''
''விருந்துன்னா இது இருந்தாகணும் மிஸ்டர் விவேக். இது, இல்லேன்னா ரொம்ப பேருக்கு சோறே இறங்காது.''
''ஹை... செமயா இருக்கு இந்த கவுன்ட்டர்... ஒரு பி.ஏ.,வுக்கு நான்கு லட்சம் கொடுக்க, நாங்க கேனை இல்ல. போகட்டும், மிஸ்டர் கிருஷ்ணராஜ் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?''
''போகப் போக தெரியத்தானே போகுது.''
''அப்படி தெரியும் போது, அவர் மேல காறித்துப்ப தோணும்... அவ்வளவு கேவலமானவன், அந்த ஆள்.''
''அப்ப நீங்க... கூட்டாளியாச்சே. அதனால, கேட்டேன்.''
''அப்கோர்ஸ்... உண்மை, சத்யம், தர்மம், நியாயம்ன்னு பேசற எல்லாருக்கும் நானும் சரி, அந்த கிருஷ்ணராஜும் சரி, ரொம்ப கேவலமானவங்க தான்.''
''கேவலமான உங்க பேச்சை, நான் எதுக்கு கேட்கணும்?''
''நல்ல கேள்வி... கேவலமான அந்த கிருஷ்ணராஜ்கிட்டயும் வேலை பார்க்காத. அது, ரொம்ப ஆபத்தானது.''
''மூன்று லட்சம் ரூபாய் சம்பளம், அப்பார்ட்மென்ட், கார் இதெல்லாம் ஒரு அகடமிக் டிகிரி படிச்சவனுக்கு சுலபமா கிடைச்சுடாதுன்னு எனக்கும் தெரியும், மிஸ்டர் விவேக்.''
''ஆரம்பத்துல, 'ஷார்ப்பா' பேசின, இப்ப வளவளங்கறியே... உன்னை, திருப்பதிக்கு அந்த ஆள் எதுக்கு அனுப்பறான் தெரியுமா?''
''இது கூட தெரியாம தான் என்னை மிரட்டிகிட்டு இருக்கீங்களா?''
''ஸ்டுப்பிட்... ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா உனக்கு? அந்த ஆள், தன் சின்ன வயசுல, ஓடுற ரயில்ல திருப்பதிக்கு காணிக்கை செலுத்த போயிக்கிட்டிருந்த ஒரு, 'குரூப்'கிட்ட இருந்த காணிக்கை உண்டியலை திருடிட்டான். அதுதான் அவனோட முதல் திருட்டு.
''அப்புறமா அது வளர்ந்து, வீடு புகுந்து திருடறது. கோவில்ல சாமி சிலைகளை திருடி, வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கிறதுன்னு, 'டெவலப்' ஆச்சு. இன்னும் நிறைய இருக்கு. சொன்னா, உன்னால தாங்க முடியாது.
''சுருக்கமா சொன்னா, அந்த ஆள் ஒரு பழைய கேப்மாரி. இப்ப, பிரபல தொழிலதிபர்...'' விவேக், கோபக்கனலுடன் உதிர்த்த வார்த்தைகளால், தனஞ்ஜெயனிடம் ஒரு சிறிய ஸ்தம்பிப்பு.
தங்கைகள், வாசலில் வந்து ஒட்டு கேட்பதை பார்த்தவன், தெருவில் இறங்கி நடந்து கொண்டே பேசத் துவங்கினான்.
''மிஸ்டர் விவேக்... இன்னிக்கு பல பணக்காரர்களோட ஆரம்பம் இப்படித்தானே இருக்கு. முறையா சம்பாதிச்சு, சொத்துகளை யார் சேர்த்திருக்கா? போகட்டும்... இதையெல்லாம் சொன்னா, நான் இந்த வேலையை விட்ருவேன்னு நீங்க நம்பறீங்களா?''
''நீ விடணும்... இல்ல, உயிரையே கூட விட வேண்டியிருக்கும். நான் வில்லன் தான். ஒத்துக்கறேன். ஆனா, நீ, 'ஹீரோ' கிடையாது. அத தெரிஞ்சுக்கோ.''
''அதை இப்பவே முடிவு பண்ணினா எப்படி?''
''அப்ப, நீ வேலையை விடமாட்ட... அப்படி தானே?''
''எனக்கு எதுவுமே தராம, வேலையை விடுன்னா அது எப்படிங்க பாஸ்?''
தனஞ்ஜெயனின், 'டோன்' அப்படியே மாறத் துவங்கியது.
''ஓ... நீ அப்படி வர்றியா?''
''என்ன வில்லன் நீங்க... இப்படியா, 'டியூப் லைட்'டா இருப்பீங்க?''
''நான் நெருப்பு, இப்படியெல்லாம் எகத்தாளமா பேசாத. உனக்கு எவ்வளவு வேணும் கேள்?''
''காலம் பூரா சோறு போடற நல்ல வேலையை விடச் சொல்றீங்க. அதுக்கு தகுந்த, 'காம்பன்சேஷன்' தந்தாதானே சரியா இருக்கும்.''
''நீ, 'தில் பார்ட்டி' தான்... சரி, எவ்வளவு வேணும்?''
''நீங்க சொல்லுங்க பாஸ்!''
''அந்த கிருஷ்ணராஜ் ஒரு கோடி ரூபாய் தருவான். அதுல பாதிய எடுத்துக்கிட்டு, பாதிய என்கிட்ட கொடுத்துட்டு, ஒரு, 'ப்ளாட்' வாங்கிகிட்டு சந்தோஷமா இரு.''
''ஓ... நீங்க, உங்க கையில இருந்து எதையும் தரமாட்டீங்களா பாஸ்... கடைத் தேங்காயை எடுத்து தான் வழி பிள்ளையாருக்கு உடைப்பீங்களா?''
''அந்த கோடில சரி பாதி எங்களோடது... நாங்க, ஈக்வெல் பார்ட்னர்ஸ்.''
''சரிங்க பாஸ்... எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, யோசிச்சு சொல்றேன்.''
''என்கிட்ட டைம் கேட்டுட்டு, அந்த பக்கம் வேலைய காட்டிடாதே. உன்னை, என் ஆள் ஒருத்தன் எப்பவும் பார்த்துக்கிட்டே இருக்கான். அதையும் மறந்துடாத.''
விவேக் என்ற அந்த மர்ம நபரின் மர்மக் குரல், 'கட்' ஆனது. சட்டை இல்லாத பனியனோடும், பேன்ட்டோடும் தெருவில் நெடுந்துாரம் வந்து விட்டதை பிறகே உணர்ந்தான், தனஞ்ஜெயன்.
கார்த்திகா சொல்லியிருந்த ஆபத்தான வேலை என்பதற்கு, அர்த்தமும் மெல்ல புரியத் துவங்கியது அவனுக்கு. மொபைல் போனை பேன்ட் பாக்கெட்டுக்குள் போட்டபடியே நாலாபுறமும் பார்த்தான். தெருவில் வருகிற போகிற சகலரும், அவனை பார்ப்பது போலவே இருந்தது. இவர்களில் யார் அந்த விவேக்கின் ஆள்?
தாடையை தடவியபடியே திரும்பினான். எதிர் வீட்டிலுள்ள நான்கு பேருமே வெறித்த பார்வையோடு இருந்தனர். அப்போது, மீண்டும் அவன் போன் அழைத்தது.
தயக்கத்தோடு காதை கொடுத்தான். அது?
- தொடரும்
- இந்திரா சவுந்தர்ராஜன்